Last Updated : 11 Feb, 2019 12:07 PM

 

Published : 11 Feb 2019 12:07 PM
Last Updated : 11 Feb 2019 12:07 PM

எருக்க இலை, அட்சதைக் குளியல்; பாவங்கள் போக்கும் ரதசப்தமி!

ரத சப்தமி நன்னாளில், ஏழு எருக்க இலைகளுடன் அட்சதை கலந்து நீராடவேண்டும் என்கிறது சாஸ்திரம். அந்தநாளில், இப்படியாக நீராடினால், நம் பிறவியில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தோஷங்கள் யாவும் நீங்கிவிடும். துர்தேவதைகளின் சக்தி நம்மை அண்டாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்! நாளை 12.2.19 செவ்வாய்க்கிழமை ரத சப்தமி எனும் புண்ணிய நாள்! 

தை மாதம் தொடங்கியதிலிருந்தே மாதம் முழுக்க விசேஷம்தான். தைத் திருநாள், மகரசங்கராந்தி, பொங்கல் நன்னாள் என்றெல்லாம் கொண்டாடுகிறோம். அதேபோல், தை அமாவாசையும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய தினங்கள் மகோன்னதமானவை, முன்னோரு உகந்தவை என்கின்றன ஞானநூல்கள்.

அதேபோல், அமாவாசையில் இருந்து வருகிற ஏழாம் நாள் சப்தமி. தை அமாவாசையில் இருந்து ஏழாம் நாள் ரதசப்தமி என்று போற்றப்படுகிறது. சூரியபகவான், தன்னுடைய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் நகர்ந்து வரும் நன்னாள் ரதசப்தமி.

தை மாதத்தில் சூரிய பகவான் நகரும் காலம், உத்தராயன புண்ய காலம் தொடங்குகிறது. சூரிய பகவானுக்கு உரிய ரதசப்தமி நாளில், உடலில் ஏழு எருக்க இலைகள், கொஞ்சம் பசுஞ்சாணம், அருகம்புல், அட்சதை ஆகியவை கொண்டு நீராட வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

அதாவது, புத்தியால் செய்த பாவம் நீங்க தலையில் ஒரு எருக்கம் இலை, கண்களால் செய்த பாவம் நீங்க, கண்களில் இரண்டு எருக்க இலைகள், தோள்களுக்கு இரண்டு, கால்களுக்கு இரண்டு என எருக்கம் இலைகளை வைத்து, கொஞ்சம் பசுஞ்சாணத்தையும் அட்சதையையும் வைத்துக் கொண்டு கிழக்குப் பார்த்தபடி, சூரிய உதயத்தின் போது நீராடுவது மிகுந்த பலன்களைத் தரும். பெண்கள், எருக்கம் இலைகள், பசுஞ்சாணம், அட்சதை, மஞ்சள் ஆகியவற்றுடன் நீராட வேண்டும். இதனால், சகல தோஷங்கள் யாவும் விலகிவிடும். துர்தேவதைகள் அண்டாது. உடல் உபாதைகள் யாவும் அகலும். தேக ஆரோக்கியத்துடனும் மனதில் தெளிவுடனும் நிம்மதியும் நிறைவுமாக வாழலாம். முக்கியமாக, நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

நாளை 12.2.19 செவ்வாய்க்கிழமை. ரதசப்தமி. எனவே நாளைய தினம் அதிகாலையில், சூர்யோதய வேளையில், ஏழு எருக்க இலைகள், பசுஞ்சாணம், அட்சதை ஆகியவற்றைக் கொண்டு, கிழக்குப் பார்த்தபடி நின்று நீராடுங்கள். உங்கள் பாவமெல்லாம் விலகி, தோஷமெல்லாம் நீங்கி, சந்தோஷமாக வாழ்வீர்கள் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x