Published : 21 Feb 2019 10:46 AM
Last Updated : 21 Feb 2019 10:46 AM
கவி காளிதாசரின் படைப்புகளில் தன்னிகரற்றதாகக் கருதப்படுவது ‘ரகுவம்சம்’. சூரிய குலக் கொழுந்தான ராமனை மட்டுமே உயர்த்திப் பிடிக்காமல் ராமருக்கு முன் அந்தக் குலத்தில் பிறந்தவர்களையும் ராமருக்குப் பின் அந்தக் குலத்தில் பிறந்தவர்களைப் பற்றியும்கூட சிறப்பாக எழுதப்பட்ட காவியம்.
அண்மையில் காளிதாசரின் ‘ரகுவம்சம்’ என்னும் தலைப்பில் சென்னை, பாரிமுனையில் செயல்படும் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அவையில் மாநிலக் கல்லூரியில் சம்ஸ்கிருதத் துறை தலைவர் உ.ரா.தேவநாதன் சொற்பொழிவாற்றினார். அவரின் சொற்பொழிவுப் பிரவாகத்திலிருந்து சில துளிகளை இங்கே தருகிறோம்.
பொருள் பொதிந்த இறைவணக்கம்
இறைவணக்கம் பாடிவிட்டுத்தான் கதைக்குள் நுழைவது மரபு. அந்த மரபை காளிதாசரும் பின்பற்றுகிறார். திருமாலின் அவதாரமான ராமர் பிறந்த வம்சத்தைப் பற்றிதான் கவிதை முழுவதும் இருக்கப் போகிறது. இதற்குப் பொறுத்தமான இறைவணக்கமாக யாரைப் பாடலாம் என்னும் கேள்வி எவருக்கும் இயல்பாக எழும்.
காளிதாசர் சிவபக்தர். அவரின் முதல் நூலான ரகுவசம்சத்தில் முதல் ஸ்லோகம் - சிவனும் பார்வதியும் எப்படிச் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை அவருக்கே உரிய உவமை நயத்தோடு வெளிப்படுகிறது. சிவனும் பார்வதியும் சொல்லும் பொருளும்போல் சேர்ந்திருக்கிறார்கள் என்பதே அந்த முதல் ஸ்லோகத்தில் அவர் உயர்த்திப் பிடித்த உவமை. அர்த்தம் இல்லாத சொல் வெறும் சப்தம் தானே. அதுபோல் பிரிக்க முடியாத தத்துவமாக இருக்கும் சிவனையும் பார்வதியும் வணங்கி ஆரம்பிக்கிறார்.
ரகு வம்ச அரசர்கள் எப்படிப்பட்டவர்கள்?
சூரியனிலிருந்து தொடங்கும் வம்சம் ரகு வம்சம். ராமனுக்கு முன்னும் பின்னும் இருக்கும் 32 அரசர்களைப் பற்றி ரகுவம்சத்தில் காளிதாசர் குறிப்பிடுகிறார். நடு நாயகமாக ராமனின் கதையைச் சொல்கிறார்.
திலீபன் என்னும் அரசனைப் பற்றிய விவரிப்பில் காளிதாசரின் கற்பனை வளம் சுடர் விடுகிறது. அரசனை சமுத்திரம் போன்றவன் என்கிறார். கால்களை நனைத்து விளையாட சமுத்திரம் அழைப்பு விடும், முத்துக்கள் போன்ற விலை உயர்ந்த பொருள்கள் சமுத்திரத்தில் கிடைக்கும். அதில் மூழ்கி எடுக்கலாம் என்றால் அதே கடலில்தான் பெரிய பெரிய உயிரினங்கள் இருக்கின்றன.
அதுபோல் பழகுவதற்கும் இனியவனாக இருக்கிறான். அதே நேரத்தில் ரொம்பவும் சகஜமாக தோளில் கைபோட்டுப் பழகுவதற்கு பயப்படும்படியான கம்பீரத்துடனும் ஆஜானுபாகுவாகவும் இருக்கிறான் என்றும் விவரிக்கிறார்.
வேடர்களிடம் வினவும் அரசன்
காட்டில் இருக்கும் மரங்களின் பெயர்களை எல்லாம் வேடர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டே சென்றானாம். ராஜாவுக்குத் தெரியாதா? ஆனால் எளிமையானவர்களிடம் ராஜாவே கேட்டுத் தெரிந்து கொண்டார் என்னும் பெருமையை அவர்களுக்கு அளிப்பதற்காகவே ராஜா அப்படிச் செய்தார் என்றும் விவரிக்கிறார் காளிதாசர்.
இப்படி ஒவ்வொரு சர்க்கத்திலும் காளிதாசரின் கற்பனைச் செறிவையும் ஒவ்வொரு ஸ்லோக்தையும் கூறி அதற்கான விளக்கத்தையும் நிறைவாக விளக்கினார் பேராசிரியர் தேவநாதன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT