Published : 14 Feb 2019 10:49 AM
Last Updated : 14 Feb 2019 10:49 AM
தாமரை வடிவ பீடத்தில், ஆறு அடி உயரத்தில், அம்பிகை இரண்டு முகங்களுடன் அமர்ந்திருக்கிறாள். ஒரு முகம் நீளமான, கூரான பற்களுடன், அசுரனை அழிக்கும் உக்கிரம் காட்ட, இரண்டாவது முகம், புன்முறுவலுடன் பக்தர்களைத் தீயவர்களிடமிருந்து காக்கும் சக்தியாகச் சாந்தம் காட்டுகிறது. தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்கள் பலர், போருக்குச் செல்லுமுன், இந்தக் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்துவிட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
முதலாம் நூற்றாண்டில் இக்கோயிலைக் கரிகால் சோழன் கட்டினான். ‘கரிகாற் சோழ மாகாளி கோவில்’, ‘விக்கிரம சோழ விண்ணகரம்’ என்ற பெயர்களால் இக்கோயில் அழைக்கப்பட்டதாகக் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. வல்லபன் என்ற சோழ அரசன் ஆட்சிக்கு வந்தபிறகு இப்பகுதி வல்லம் என்று பெயர் பெற்றதாகவும், ஆலயத்து அம்பிகை ‘வல்லத்துக் காளி’ என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
ஆட்டம் போட்ட அரக்கன்
ஆலயக் கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், விநாயகர், முருகன், சிவலிங்கம், காத்தவராயன், சண்டிகேஸ்வரர், வராகி, பிரத்தியங்கரா தேவி, சப்த மாதர்கள், நாகர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். வெளிப் பிராகாரத்தில், மதுரை வீரன் தன் துணைவியர் வெள்ளையம்மாள், பொம்மி ஆகியோருடன் காட்சி தருகிறார். கூடவே, கருப்பசாமி, லாட சந்நியாசி, காத்தான் ஆகிய கிராம தேவதைகளையும் காணலாம்.
தஞ்சாசுரன் என்ற அரக்கன் கடும்தவம் இருந்து சிவனிடம், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோராலோ, ஒரு பெண் தவிர எந்த ஒரு ஆண் மகனாலுமோ தனக்கு மரணம் நிகழக் கூடாது. மேலும், தான் தவம் செய்த இந்தப் பகுதி, தன்னுடைய பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்று வரம் கோர, அவற்றை அருளினார் சிவன். அன்று முதல், அப்பகுதி, அவன் பெயரில் ‘தஞ்சாவூர்’ என்று அழைக்கப் படலாயிற்று. தனக்கு மரணமே கிடையாது என்று மகிழ்ந்து அவன் ஆட்டம் போட ஆரம்பித்தான்.
தேவர்கள், மனிதர்கள் என்று எல்லோரையும் வதைக்கத் தொடங்கினான். தேவேந்திரனைத் தேவலோகத்திலிருந்து ஓட ஓட விரட்டினான். பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மாவிடம் போக, பிரம்மா விஷ்ணுவைப் போய்ப் பார்த்தார். விஷ்ணுவோ வரம் கொடுத்தவரிடமே போய்க் கேளுங்கள் என்று கைகாட்டி விட்டார்.
சிவன், பார்வதியைப் பார்த்தார். அம்பிகை, சிங்க வாகனத்தில் ஏறி, தஞ்சாசுரனுடன் போருக்குப் போனார். அவன் பல வடிவங்கள் எடுத்து தேவியுடன் போர் செய்தான். இறுதியில் ஒரு எருமையின் வடிவம் எடுத்தான். அம்பிகை அவனை அழித்தார். அவனைக் கொன்றும் தேவிக்கு கோபம் தணியவில்லை.
அம்பிகையின் கோபத்தால் வானம் பொய்த்தது. எங்கும் வறட்சி, பஞ்சம், பசி தாண்டவமாடியது. சிவபெருமான் ஓடோடி மனைவியிடம் வந்தார். ‘‘ஏ கெளரி, சாந்தம் கொள்!’’ என்றார். அம்பிகை, சாந்தம் அடைந்தாள். சிவன் அழைத்த ‘ஏகெளரி’ என்ற திருநாமமே அவருக்கு நிலைத்தது.
ஆலயத்தில் மாதம்தோறும் பெளர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருடம் தோறும் அம்மன், அசுரனை வெற்றி கொண்ட ஆடி கடைசி வெள்ளியன்று, சிறப்பு அபிஷேகம், காவடி, பால் குடம், தீ மிதித்தல் என்று விழா அமர்க்களப்படும்.
இந்த ஏகெளரி அம்மனிடம் ‘பிராது’ கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது.
பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டவர்கள், கோயில் பூசாரியிடம் நடந்த சம்பவங்களை ஒன்றுகூட விடாமல், புகார் கூறுவார்கள். பின்னர் பூசாரி, அர்ச்சனைகள் செய்து அம்பாளிடம் பக்தரின் குறைகளை முறையீடு செய்வார். இந்தப் பிராது முறையினால், எத்தனையோ பேருக்கு நியாயம் கிடைத்திருப்பதாகப் பக்தர்கள் கூறுகிறார்கள்.
ஏகெளரி அம்மனின் இரு புறங்களிலும் ராகு, கேது கிரகங்கள் உள்ளன. எனவே, இரண்டு கிரகங்களும் தேவியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ஐதிகம். எனவே, ராகு, கேது போன்ற பாம்புக் கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபடுவதால், அவர்களின் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. திருமணத் தடை உள்ள பெண்கள் அம்மனுக்குப் புடவை சார்த்தி, அம்மனின் திருப்பாதத்தை மஞ்சள் வைத்து வணங்குகிறார்கள்.
அதில் ஒரேயொரு மஞ்சளை எடுத்துவந்து தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், விரைவில் திருமணம் நடைபெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து அம்மனைப் பிரார்த்தித்து, எலுமிச்சை தீர்த்தம் சாப்பிடுவதால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். மிகவும் உடல்நலம் இல்லாதவர்கள் தாங்கள் உயிர் பிழைத்தால், அம்மனுக்கு எருமைக் கன்று விடுவதாக நேர்ந்துகொள்வது வழக்கம். அதே மாதிரி, தாங்கள் நலம் பெற்றதும் அந்த வருடம் ஆடிக் கடை வெள்ளித் திருவிழாவில், உயிருள்ள எருமைக் கன்றை அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவது நடைமுறையாக உள்ளது.
உக்கிர முகம், சாந்த முகம் இரண்டும் கொண்டு இங்கே அம்பிகை தீயதை மாய்த்தும் நல்லவற்றைக் காத்தும் அருள்புரிகிறாள்.
எப்படிப் போவது? தஞ்சாவூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வல்லத்திலிருந்து வடக்கு நோக்கி ஆலங்குடி செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த வனத்தின் நடுவில், அமைதிச் சூழலில் அருள்மிகு ஏகெளரி அம்மன் திருக்கோயில் உள்ளது. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT