Published : 25 Sep 2014 01:20 PM
Last Updated : 25 Sep 2014 01:20 PM
புத்தரின் தந்தை சுத்தோதனர் ஆண்ட சாக்கிய நாட்டுக்குத் தெற்கேயிருந்த மகத தேசத்திலே (இன்றைய பிகார், பிகாரைச் சூழ்ந்த பகுதி), விம்பிசாரன் (பிம்பிசாரர்) என்னும் அரசர் ஆண்டு கொண்டிருந்தார்.
அண்டையில் உள்ள மற்ற அரசர்களில் யாராவது தன்னை வென்று அரசாட்சியைக் கைப்பற்றிவிடுவார்களோ என்று விம்பிசாரனுக்கு எப்போதுமே அச்சம் இருந்தது. இது பற்றி அமைச்சர்களுடன் அடிக்கடி கலந்தாலோசிப்பது அவருடைய வழக்கம்.
வழக்கம் போல ஒரு முறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, "அறிவுமிக்க அமைச்சர்களே! நம்மை வெல்லக்கூடிய ஆற்றல் உடைய வேறு அரசர் யாரேனும் உண்டோ? இருந்தால் அவர்களை எவ்வாறு வெல்வது என்பதை ஆராய்ந்து சொல்லுங்கள்," என்று கூறினார்.
ஒற்றர்கள் அறிந்த தகவல்
இதற்காக ஒற்றறிந்துவரப் பல நாடுகளுக்கு அமைச்சர்கள் ஒற்றர்களை அனுப்பினார்கள். ஒற்றர்கள் நாடெங்கும் சென்று ஆராய்ந்தனர். விம்பிசார அரசனை வெல்லும் ஆற்றல் கொண்ட அரசர் வேறு யாரும் இல்லை என்பதைக் கண்டனர்.
ஆனால் வடக்கே சென்ற ஒற்றர்கள், "இமயமலைச் சாரலில் சாக்கிய நாட்டின் கபிலவஸ்து நகரத்தில் சுத்தோதன அரசருக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறார். அவர் இல்லற வாழ்க்கையில் இருந்தால் அரசர்களை வென்று சக்கரவர்த்தியாக விளங்குவார். துறவறம் மேற்கொண்டால் பெறுதற்கரிய புத்தப் பதவியை அடைவார்" என்று நிமித்திகர்கள் கணித்துக் கூறியிருப்பதை அறிந்தார்கள்.
எப்படியிருந்தாலும் நன்மை
உடனே மகத நாட்டுக்கு விரைந்து வந்து இச்செய்திகளை அமைச்சர்களிடம் ஒற்றர்கள் கூறினார்கள்.
விம்பிசார அரசனுக்கு இச்செய்தியைத் தெரிவித்து ‘உடனே நான்கு சேனைகளைப் பலப்படுத்துங்கள். சக்கரவர்த்தியாகப் போகிற சிறுவனை விரைவில் அழிக்க வேண்டும்’ என்று அமைச்சர்கள் யோசனை கூறினார்கள்.
விம்பிசாரன் இதைப் பற்றி நெடுநேரம் சிந்தித்தார். கடைசியில் அமைச்சர்களிடம் இப்படிக் கூறினார்: "சித்தார்த்தன் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கிடைத்தற்கரிய சக்கரவர்த்திப் பதவியைச் சித்தார்த்தன் பிற்காலத்தில் பெற்றால், சக்கரவர்த்திகள் நீதி முறைப்படி நடப்பார்கள் என்பதால், அவருக்குக் கீழடங்கி நாம் அரசாட்சியை நடத்தலாம். அவர் துறவு பூண்டு புத்தப் பதவியை அடைந்தால், அவரிடம் அறநெறி கேட்டு அவருக்குச் சீடராகலாம், ஆகவே இரண்டு விதத்திலும் நமக்கு நன்மையே" என்றார்.
இவ்வாறு விம்பிசார அரசன் கூறியதைக் கேட்ட அமைச்சர்கள், அவரது கருத்தைச் சரி என்று ஒப்புக்கொண்டார்கள்.
பின்னால், நிமித்திகர்கள் கணித்தபடியே சித்தார்த்தன், புத்தர் ஆனார். அவரிடம் அறநெறி கேட்டு விம்பிசாரர் சீடர் ஆனார். மேற்கண்ட புராணக் கதை முழு உண்மையாக இருக்க முடியாது என்று சொன்னாலும், சிறிதளவாவது அடிப்படை உண்மை இருக்கக்கூடும்.
நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘கவுதம புத்தர்’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT