Published : 14 Jan 2019 10:57 AM
Last Updated : 14 Jan 2019 10:57 AM
மழைக்காலம் முடிந்து, குளிர்காலம் நிறைவுறும் வேளையில், தை மாதத்தை அறுவடைக் காலமாகக் கணக்கிட்டு விவசாயத்தில் ஈடுபட்டனர் மக்கள்.
இந்தியாவில், தமிழகம் மட்டுமின்றி உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஆந்திரா போன்ற பல மாநிலங்களிலும் தை மாதப் பிறப்பு அந்தக் காலத்திலேயே கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. அதனை ‘அறுவடைத் திருவிழா’ என்கிறார்கள். விவசாயத்துக்கு உறுதுணையாகவும் முழுமுதற் காரணமாகவும் திகழும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் இந்தத் தை மாதத்தைக் கொண்டாடினார்கள் .
தை நீராடல் எனும் சம்பிரதாயம், அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. குறிப்பாக, சோழர் காலத்திலேயே இருந்துள்ளது. அதாவது, உத்தராயன சங்கராந்தி அன்று அதிகாலையில் எழுந்து, காவிரியில் நீராடிவிட்டு, 108 அல்லது 1,008 குடங்களால் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, அபிஷேகம் செய்து, சிவபெருமானை வணங்கி வந்ததாகக் கல்வெட்டுகள் இருக்கின்றன.
அன்றைய தினம், அதிகாலையில் காவிரிக்கரையில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகத்தான் இருக்கும். அந்தந்த ஊர்மக்கள், காவிரியில் குளித்துவிட்டுக் குடங்களில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று வழிபடுவார்கள். அங்கே, சிவனாருக்குக் குடம்குடமாக அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பிறகு, வீட்டுக்கு வந்து, அறுவடை முடிந்து மணம் மாறாமல் இருக்கிற அரிசியை, புதிய பானையில் இட்டு, உணவில் சூரிய வெளிச்சம் படுவதுபோல் வாசலில் அடுப்பு பற்ற வைத்துப் படையலிடுவார்கள்.
‘இந்த உணவு நீ கொடுத்தது. உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உன் சக்தி படர்ந்திருக்கிறது. அந்தச் சக்தி எங்களுக்கு உள்ளேயும் சென்று பரவி, எங்களை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ வைக்கும் சூரியக் கடவுளுக்கு நன்றி!’ என்று வணங்குவது வழக்கம்.
அந்த உணவை எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கிச் சாப்பிடுவார்கள்!
இப்படி ஒற்றுமையையும் பக்தியையும் ஒருசேர விதைத்த அற்புதமான விழா... பொங்கல் நன்னாள்! இந்த நாளில், ஊரும் உறவுகளும் கூடி பொங்கலைக் கொண்டாடுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT