Published : 17 Jan 2019 10:24 AM
Last Updated : 17 Jan 2019 10:24 AM
எனது இடமோ இடமற்றது
எனது தடமோ தடமற்றது
உடலையோ உயிரையோ அல்ல
இருமையை விட்டவன் நான்
தேடுவதும் தெரிவதும்
காண்பதும் கூப்பிடுவதும் ஒன்றே
முதலும் முடிவும் அவனே
அகமும் வெளியும் அவனே
போதையில் இருக்கிறேன் நான்
என்பதைத் தவிர
சொல்வதற்கு எதுவுமில்லை
-ஜலாலுதீன் ரூமி
துறவின் பூரணம் உணர்ந்தவர் களுக்கு இவ்வுலகின் எதுவும் ஒரு பொருட்டல்ல. ஒன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூபி ஞானியான ஜுனைதுல் பக்தாதியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆன்மிகத்தையும் உளவியலையும் அன்பின் இழை கொண்டு பின்னி வழங்கிய சூபி ஞானிகளில் அவர் முதன்மையானவர். சூபித் தத்துவத்தின் அச்சாரத்தை அவர் அளவுக்கு எளிதாக விளக்கியவர்கள் வெகுசிலரே. தனது உரைகளையும் கடிதங்களையும் கொண்டு, தான் வாழ்ந்த காலத்தில் ஒரு புதுவிதமான ஆன்மிக உலகை அவர் சிருஷ்டித்தார்.
இறைக்கல்வியின் தலைவர் என்றும் துறவிகளின் அரசர் என்றும் ஞானிகளின் ஒளிவிளக்கு என்றும் அழைக்கப்பட்ட ஜுனைதுல் பாக்தாதி 830-ம் ஆண்டில் பாரசீகத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே அவருடைய தேடல்களும் விருப்பங்களும் இறைவனைச் சார்ந்தவையாக மட்டுமே இருந்தன. தனது ஏழு வயதுக்குள் அவர் ஆன்மிக வாழ்வின் உச்சத்தைத் தொட்டுவிட்டார்.
தந்தையின் வேலையில் உதவி
எளிய குடும்பப் பின்னணி அவருடையது. தந்தை, நுஹாவந்த் என்ற ஊரில் இருந்து பிழைப்புக்காக பாக்தாதுவந்து குடியேறியச் சாமானியர். அவர் பாக்தாதில் சிறு கண்ணாடிகடை நடத்திவந்தார். குழந்தைப் பருவத்தில், அந்தக் கடையில் தந்தைக்கு ஒத்தாசையாக இருப்பதே ஜுனைதுல் பாக்தாதியின் பொழுதுபோக்காக இருந்தது. மார்க்கக் கல்வியைத் தன்னுடைய தாய் மாமாவான ‘ஸரீ அஸ் ஸகதி’யிடம் பயின்றார்.
ஒருநாள் மாமாவிடம் இறைக்கல்வி கற்று வீடு திரும்பும்போது அவருடைய தந்தை அழுதுகொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த ஜூனைதுல் தந்தையிடம் காரணம் கேட்டார். “நான் சம்பாதித்துச் சேமித்த ஐந்து திர்ஹங்களை இறைவனின் மீது அளவற்ற பற்றுடன் இருக்கும் உன்னுடைய மாமாவுக்குக் கொடுக்க விரும்பினேன். அவரோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இறைவனின் மீது அவரைவிட அதிகப் பற்று வைத்திருக்கும் மனிதனை நான் எங்குச் சென்று தேடுவேன்?” என்று சொல்லியவாறுத் தேம்பி அழுதார். ”இதுதான் உங்கள் கவலையா? அந்தப் பணத்தைக் கொடுங்கள். நான் மாமாவிடம் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லி, தந்தையிடம் பணத்தைப் பெற்று மாமாவின் வீட்டுக்கு ஜுனைதுல் சென்றார்.
எப்போதும் ஜுனைதுலை அன்புடன் வரவேற்கும் மாமா, அன்று கதவைத் தட்டியும் திறக்கவில்லை. உள்ளிருந்தபடியே “என்ன?” என்று கேட்டார். ஜுனைதுல் காரணத்தைக் கூறியதும், அந்தப் பணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியுடன் கூறினார்.
“உங்கள் மீது இரக்கத்தோடும் என்னுடைய தந்தையின் மீது நியாயத்தோடும் நடந்து கொண்ட இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன் இதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று ஜுனைதுல் உறுதியான குரலில் அழுத்தக் கூறினார். “என்னது? இறைவன் என்னிடம் இரக்கத்தோடும் உன் தந்தையிடம் நியாயமாகவும் நடந்து கொண்டானா?” என்று கேட்டபடி அவர் சிரித்தார்.
“இறைவனுடைய இரக்கத்தின் வெளிப்பாடே உங்களுடைய வறுமை. அவனுடைய நியாயத்தின் வெளிப்பாடே என்னுடைய தந்தையின் வியாபாரம். என்னுடைய தந்தையின் அன்பளிப்பை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்களது விருப்பத்தைச் சார்ந்தது. ஆனால், என்னுடைய தந்தையின் மூலம் உங்களை அடையும் இறைவனின் அன்பளிப்பை நிராகரிக்கும் உரிமை தங்களுக்கு இல்லை.
எப்படி அதை உங்களிடம் சேர்ப்பது எனது தந்தையின் கடமையோ அதேப் போன்று அதை ஏற்றுக்கொள்வதும் உங்களின் கடமையே” என்று ஜுனைதுல் நிதானமாகச் சொன்னார். உடனடியாகக் கதவைத் திறந்து வெளிவந்தவர், தனது மடமையை எண்ணி வருந்தியபடி, ஜுனைதுலைத் தழுவி, அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
இறைவனுக்குச் செலுத்தும் நன்றி
‘ஸரீ அஸ் ஸகதி’ மக்காவுக்குச் செல்லும்போது ஏழு வயதே நிரம்பிய ஜுனைதுலையும் அழைத்துச் சென்றார். மக்காவில் அறிஞர்கள் கூடி ‘இறைவனுக்கு எவ்வாறு நன்றி செலுத்துவது’ என்பதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அறிஞர்களின் விளக்கங்கள் ஏதும் திருப்தியாக இல்லை என்பதால், ஸரீ அஸ் ஸகதி, ஜூனைதுலை அழைத்து விளக்கச் சொன்னார்.
“இறைவனின் கொடையால் நமக்குக் கிடைத்துள்ள இந்த வாழ்வில் அவனுக்கு எதிராகச் செயல்படாமல் இருப்பதும், ஒருவேளை அவனுக்கு எதிராகச் செயல்படும் சூழல் வருமாயின் அதற்கு அவன் அளித்த இந்த வாழ்வைப் பயன்படுத்தாமல் இருப்பதும்தான், நாம் இறைவனுக்குச் செலுத்தும் நன்றி” என்று கூறினார். அங்கே கூடியிருந்த நானூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்களும் அந்தப் பதிலைக் கேட்டு மெய்சிலிர்த்து, வரிசையில் நின்று ஜுனைத்துலைத் தழுவினர்.
தன்னுடைய மாமா ‘ஸரீ அஸ் ஸகதி’யிடம் மட்டுமல்லாமல்; பல ஞானிகளைத் தேடிச் சென்று மறைஞானத்தைக் கற்றுத் தேர்ந்தார். தான் கற்றதை எவ்விதச் சமரசமுமின்றிச் செயல்படுத்தினார். நாற்பது ஆண்டுகள் கடுமையான தவ வாழ்க்கையை மேற்கொண்டார். அந்த நாற்பது ஆண்டுகளும் இரவு முழுவதும் இறைவனைப் பணிந்துத் தொழுதார்.
பகல் முழுவதும் நோன்புக் கடைப்பிடித்தார். நாற்பது ஆண்டுகளின் முடிவில், ஞானத்தின் சுடராக, ஆன்மிகப் பிழம்பாக மாறினார். உலகில் அவருக்குத் தேவை என்ற ஒன்றே இல்லாமல் போனது. பசிக்கு உண்பதும் அவருக்குச் சுமையாக மாறியது. வறுமையை வலிந்து ஏற்றுக்கொண்டார். துன்பத்தை இன்பமெனக் கொண்டாடினார்.
மன்னரை நல்வழிப்படுத்தினார்
அவரிடம் பெருக்கெடுத்து ஓடிய ஞானத்தின் வீரியம் அவருடைய புகழை உலகெங்கும் கொண்டு சென்றது. சீடர்களின் எண்ணிக்கைக் கட்டற்று பெருகியது. செல்லும் இடமெல்லாம் அவரைக் காணவும் அவருடைய உரையைக் கேட்கவும் கூட்டம் அலைமோதியது. அவருடைய உரையைக் கேட்டக் கூட்டம் ஆன்மிக வெள்ளத்தில் மூழ்கி மயங்கி விழுவது அன்று வாடிக்கையாக இருந்தது.
அவருக்குக் கூடிய கூட்டம் மன்னருக்கே பொறாமையை ஏற்படுத்தியது. பெண்ணை அனுப்பி ஜுனைத்துலை வீழ்த்த மன்னர் ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்றினார். தனது பக்தியால் அந்தச் சதியை முறியடித்து அந்தப் பெண்ணின் வாழ்வை மட்டுமல்லாமல்; மன்னரின் வாழ்வையும் மாற்றி நல்வழிப்படுத்தினார்.
தனது 80 வயதில் முதுமையின் நோவு காரணமாக உடல் நலிவுற்று நீண்ட நாட்கள் படுக்கையில் வீழ்ந்தார். ஒட்டுமொத்த பாரசீகமும் பாக்தாதில் அவருடைய வீட்டின் முன் குழுமியது. அவருடைய இறுதி நாளில் அனைவருக்கும் அவர் விருந்தளித்தார். தள்ளாடிச் சென்று தொழுகை நடத்தினார். வெகு சிரமத்துடன் அன்று முழுவதும் திருக்குரானை ஓதியபடியே இருந்தார்.
கையில் திருக்குரானும் உதடுகளில் அதன் வாசகங்களும் மனத்தில் இறைவனின் அருளும் அன்பும் நிறைந்திருந்த வேளையில் இவ்வுலகில் தன் வாழ்வைத் துறந்துச் சென்றார். அவர் சென்றாலும், அவரது எண்ணங்களும் எழுத்துக்களும் மனித வாழ்வுக்குக் கலங்கரை விளக்கமாக இன்றும் ஒளிர்ந்து சுழன்றுக் கொண்டுள்ளது.
(ஞானிகள் தொடர்வார்கள்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT