Published : 24 Jan 2019 10:25 AM
Last Updated : 24 Jan 2019 10:25 AM
மூச்சைப் பிடித்து முத்துக் குளிப்பது தென்பாண்டித் தொழில். பாண்டிநாடு முத்துடைத்து. மூச்சைப் பிடித்துக் கடலுள் மூழ்கினார் முத்தைப் பெறலாம்; மூச்சைப் பிடித்துத் தனக்குள் மூழ்கினார் முத்தி பெறலாம். இருக்கட்டும். அலைபாயும் கடலோரம் அரசாண்ட பாண்டியரில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்றொரு மன்னன்; கடலுள் மூழ்கிக் காலமாகியிருப்பான் போலிருக்கிறது. புறநானூற்றில் அவன் எழுதிய பாட்டொன்று:
உண்டால் அம்மஇவ் உலகம்: இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவுஇலர்;
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்குஎன முயலா நோன்தாள்
பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே.
(புறம். 182)
இந்த உலகம் இன்னும் நிலை பெற்று இருக்க என்ன காரணம்? வானுலகத் தேவர்களுக்கு மட்டுமே வாய்க்கக்கூடிய அமுதம், தான் உண்ணக் கிடைத்தபோதும், ‘ஆகா கிடைத்தது’ என்று தான் மட்டும் தனித்து உண்ணாமல் பிறரோடும் பங்கிட்டுக் கொள்கிறவர்கள்; பிறர்மேல் வெறுப்பில்லாமல், அன்பினாலே உண்டாகும் இன்பநிலை கண்டவர்கள்; பிறர் அஞ்சுவதைக் கண்டு தாங்களும் அஞ்சுபவர்கள்;
ஆனால் அச்சத்தின் காரணமாக செயல் ஓய்ந்து இருக்க மாட்டாமல், அந்த அச்சத்தை வேரோடு பெயர்க்க முயல்பவர்கள்; புகழ் தரும் செயல்களுக்காகச் சாகவும் துணிபவர்கள்; பழி தரும் செயல் என்றாலோ, இந்த உலகத்தையே பரிசாகத் தந்து செய்யச்சொன்னாலும் செய்ய மறுப்பவர்கள்; பெற்றுவிட்டவற்றுக்காகவும் இழந்துவிட்டவற்றுக்காகவும் அயராதவர்கள்; கடும் முயற்சிகள் மேற்கொள்பவர்கள்—தான் அடையவேண்டும் என்பதற்காக அல்ல; வையம் பெறவேண்டும் என்பதற்காக. இவர்களால் இன்னும் இருக்கிறது உலகம்.
புத்தனைப் பாராட்டிய மணிமேகலை
ஆள்கிறவன் அறிவுள்ளவனாக இருக்கும் நிலையில், அவனது ஆட்சியால் அவன் காலச் சமூகமும், அவனது காட்சியால் வழிவழிச் சமூகமும் பயன்பெறும் என்பதற்குப் பெருஞ் சான்றில்லையா இவன்? உலகம் தொடர்ந்து அறிவுடையாரை ஆக்கட்டும்; அறிவுடையார் உலகத் தைக் காக்கட்டும். அது நிற்க.
இந்தப் பாட்டின் சாரப் பொருள் எடுத்துத் தன் சொல் சேர்த்துத் ‘தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்’ என்று புத்தனைப் பாராட்டப் பயன்படுத்திக்கொண்டது மணிமேகலை.
முன்தான் பெருமைக்கண் நின்றான்;
முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான்;
குணமே மொழிந்தான்; தனக்குஎன்று
ஒன்றானும் உள்ளான்;
பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன்;
அவன்தாள் சரண்நாங்கள் அன்றே!
(குண்டலகேசி, 1)
எந்த நெறி பெருமைக்கு உரியதோ அந்த நெறியில் நின்றான்; தான் தீர்ந்து போகும்வரையில் நல்லதையே நினைத்தான்; சொன்னான். தான் பெற என்று எதையும் நினைத்தான் இல்லை; பிறர் பெற என்றே முயன்றான். இறைவன் என்பவன் அவனே இல்லையா? அவன் திருவடிகளில் நாங்கள் அடைக்கலம் என்று குண்டலகேசியின் கடவுள் வாழ்த்துப் பாடலில் புத்தனை வாழ்த்துகிறார் நாதகுத்தனார்.
தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவன் துறவி; தன்னை அவிழ்த்துப் பிறரை அணிந்தவன் துறவி; அல்லாது, துறவியைப்போல வேடம் அணிந்தவன் அல்லன்.
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்குஆகா;
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்;
உடல்உயிர் உண்மைஎன்று ஓர்ந்துகொள் ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டைஒத் தாரே.
(திருமந்திரம் 1677)
துறவிபோல வேடம் புனைவோருக்கு ஒரு சொல்: உடலுக்குத்தான் வேடம் புனைய முடியும். உடலுக்குப் புனைந்த வேடம் உயிருக்குப் பயன்படாது. உடல் உயிரிலிருந்து கழன்று விழும்போது, வேடம் உடலிலிருந்து கழன்று விழும். உயிரிலிருந்து உடல் கழலாமலும், உடலை இழந்து உயிர் உழலாமலும், ஒன்றுக்காக மற்றொன்றைக் காப்பது எப்படி என்ற உண்மையை உணராதவர்கள் இப்படித்தான் கடலில் போட்ட கட்டைபோலப் போக்கிடம் தெரியாமல் அலைந்துகொண்டிருப்பார்கள்.
அரியவற்றைச் செய்பவர்
நீத்தார் பெருமை என்ற தலைப்பில் உண்மைத் துறவிகளின் அருமை பேசுகிறது குறள்:
செயற்குஅரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்குஅரிய செய்கலா தார்.
(குறள் 26)
மனிதராகப் பிறக்கிறவர்கள் எல்லோரும் ஒரே மாதிரிப் பிறந்தவர்கள்தாம். அவர்களில், எளியவற்றைச் செய்யாமல் அரியவற்றைச் செய்பவர் பெரியவர். அரியவற்றைச் செய்யமாட்டாமல் எளியவற்றைச் செய்பவர் சிறியர். இவற்றில் எளியவை எவை? அரியவை எவை? மனம் விரும்பியவற்றை, புலன்களின் வழியாகத் தேடி, இன்பம் பெறும் செயல்கள் எளியவை; ஆசை எளியது; கோபம் எளியது.
இவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தம்போக்கில் நிகழ்பவை; ஆதலால் எளியவை. ஆனால் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டுவந்து ஓகத்தில் நிற்பது அரியது. ‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது’ என்று வழிமொழிகிறார் தாயுமானவர். சுருக்கமாக ஓகத்தில் நிற்கிறவர்கள் பெரியவர்கள்.
ஓகத்தில் எட்டுறுப்பு ஓகம் என்று ஒன்று. அட்டாங்க யோகம் என்பார்கள். தனி ஒரு மதத்துக்குச் சொந்தமாக இல்லாமல் எல்லோர்க் கும் பொதுவாய் அமைந்தது இது.
அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்கத்
தன்நெறி சென்று சமாதியி லேநின்மின்;
நல்நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்;
புல்நெறி ஆகத்தில் போக்குஇல்லை ஆகுமே
(திருமந்திரம் 551)
என்பது திருமந்திரம். மனிதர்கள் தத்தம் விடுதலைக்காக ஆளுக்கொரு நெறியைத் தேர்ந்து கொள்கிறார்கள். பிறகு தாம் தேர்ந்து கொண்ட நெறி நல்ல நெறிதானா, ஒருவேளை இதை விட்டு அதைப் பற்றியிருக்கலாமோ என்று குழம்புகிறார்கள். சிலர் இடைவழியில் நெறி மாற்றிக் கொள்கிறார்கள். சிலர் விதி விட்ட வழியென்று போன நெறியிலேயே போகிறார்கள். இந்த நெறி, அந்த நெறி என்ற குழப்பமெல்லாம் வேண்டாம். எட்டுறுப்பு ஓகத்தில் பொருந்தி நில்லுங்கள். அடைய வேண்டிய அறிவு நலனை அடைவீர்கள். இனி அலைக்கழிப்பு இல்லை. நல்லது. எட்டுறுப்பு ஓகம் என்பதென்ன?
இயம, நியமமே, எண்ணிலா ஆதனம்,
நயம்உறப் பிராணாயாமம், பிரத்தி யாகாரம்,
சயம்மிகு தாரணை, தியானம், சமாதி
அயம்உறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே.
(திருமந்திரம் 552)
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவையே ஓகத்தின் எட்டு உறுப்புகள். இவற்றுக்குக் கடிவு (இயமம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒன்றுகை (சமாதி) என்று தமிழ் காட்டுவார் தேவநேயப் பாவாணர். கடிவு அல்லது இயமம் என்பது செய்யக்கூடாதவை இவை என்று கடிந்து சொல்வது;
நோன்பு அல்லது நியமம் என்பது செய்யவேண்டியவை இவை என்று பரிந்துரைத்துக் கடைப்பிடிக்கச் சொல்வது; இருக்கை அல்லது ஆசனம் என்பது உடம்பை இடைஞ்சல் இல்லாமல் இருத்திக் கொள்ளும் முறை; வளிநிலை அல்லது பிராணாயாமம் என்பது காற்றைப் பிடிக்கும் கணக்கு; ஒருக்கம் அல்லது பிரத்தியாகாரம் என்பது ஒருமையுள் ஆமைபோலப் புலன்களை உள்ளிழுத்தல்; நிறை அல்லது தாரணை என்பது அலைபாயும் மனத்தை ஒரு வழியில் நிறுத்துதல்; ஊழ்கம் அல்லது தியானம் என்பது உள்ளத்தை ஒன்றின்மேல் நிலைகுத்தித் தோயச் செய்தல்; ஒன்றுகை அல்லது சமாதி என்பது ஒன்றிக் கலத்தல்.
எட்டுறுப்பு ஓகம் என்பது யாருக்கும் எந்த மதத்துக்கும் ஆகும்வகையில் செய்யப்பட்டுத் திறந்துபோடப்பட்ட மூல பண்டாரம். ‘முத்துக் கடல் என்ன மூடியா கிடக்கு? முடிஞ்சா எடுத்து மாலை போடு!’ என்று பழநிபாரதி எழுதிய திரைப் பாட்டொன்று. காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
(திறந்த ஞானம் பயில்வோம்…) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT