Published : 03 Jan 2019 09:50 AM
Last Updated : 03 Jan 2019 09:50 AM
வெறுப்பின் உமிழ்தலில் வெந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்ட வாழ்வுக்கு இன்றியமையாத தேவை அன்பு. அன்பைவிட முதன்மையானது இந்த உலகில் எதுவுமில்லை. அன்பு என்ற ஒன்று இல்லையென்றால் உலகில் நமக்கு வாழ்வே இல்லை. ரூமியின் வார்த்தைகளில் சொல்வது என்றால், ‘மனம் எல்லைகளை மட்டுமே பார்க்கும், அன்புக்கு மட்டுமே எல்லைகளைக் கடக்கும் ரகசியப் பாதை தெரியும்’. அன்பை வாரி வழங்கும் அட்சயப் பாத்திரமே சூபி ஞானம், அதைப் பொறுத்தவரை அன்பு என்பது வெளியிலிருந்து உள்ளே வருவதில்லை, அது நம்முள் சுரந்து, ஆன்மாவைக் கரைத்து, அன்பாகவே நம்மை மாற்றி, நம்மிலிருந்து ததும்பி வழிந்து, வெளியெங்கும் பரவுவது. இதன்படி அன்புக்கும் கடவுளுக்கும் இடையே வேறுபாடு இல்லை. அன்பில் உருகி நேசிப்பதையே கடவுளை அடையும் வழியென சூபி போதிக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தின் தத்துவ வடிவமான இந்த சூபி முறை, அன்பைப் போதிப்பதற்கு எண்ணற்ற ஞானிகளை வழங்கியுள்ளது. அவர்களின் வாழ்க்கை, கடைப்பிடித்த நெறிமுறைகளை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் ‘சூபி வழி’ |
எதை நீ தேடிக்
கொண்டிருக்கிறாயோ
அது உன்னைத்
தேடிக்கொண்டிருக்கிறது
- ஜலாலுதீன் ரூமி
பொதுவாக, ஞானிகளின் வாழ்வு அற்புதங்களால் நிறைந்த ஒன்று. ஈரானின் ரை நகரில் பிறந்த யூசுப் இப்னு ஹுசைனின் வாழ்வும் அதற்கு விதிவிலக்கல்ல. எண்ணற்ற அற்புதங்கள் அடுக்கடுக்காக நிகழ்ந்து அவரது வாழ்வை முன்னெடுத்துச் சென்றன. இறைவனால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையென யூசுப் இப்னு ஹுசைனைச் சொல்லலாம்.
பார்ப்பவர்களை மெய்மறக்க வைக்கும் பேரழகுக்கு அவர் சொந்தக்காரர். அவர் ஞானியாகும் முன்பு, அவரது அழகைப் பார்ப்பதற்காகவே ஒரு பெருங்கூட்டம், அவர் செல்லும் இடமெல்லாம் கூடுவது வாடிக்கை.
தொழில் நிமித்தமாகவும் அகத் தேடல் நிமித்தமாகவும் நீண்ட பிரயாணங்களை அவர் மேற்கொண்டபடி இருப்பார். அப்படியான ஒரு பயணத்தின்போது, நண்பகல் வேளையில் களைப்பின் மிகுதியால், பாலைவனத்தின் நடுவே மணலில் படுத்துச் சற்றுக் கண்ணயர்ந்தார். அப்போது யாரோ அவர் பாதத்தைத் தொடுவதுபோல் இருக்கவே திடுக்கிட்டு விழித்தார்.
அங்கே ஓர் அழகான இளம்பெண் நிற்பதைப் பார்த்து, பதைபதைப்புடன், ’யார் நீங்கள்?’ என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் “நான் இந்த நாட்டின் இளவரசி. உங்கள் அழகின் புகழ் என் செவிகளை அடைந்ததால் உங்களைக் காண ஓடிவந்தேன். நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொன்னபடி யூசுப்பைத் தழுவ முற்பட்டார்.
’கடவுளே, என்னைக் காப்பாற்று’ என்று கதறியபடி அந்தப் பெண்ணின் பிடியிலிருந்து விலகி யூசுப் ஓடத் தொடங்கினார். உடலில் தெம்பு இருக்கும்வரை நிற்காமல் ஓடினார். உடம்பின் வலு முழுவதும் தீர்ந்த பின், மயங்கி விழுந்தவர், அப்படியே தூங்கிவிட்டார். தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில், யூசுப் இருந்த இடம் இயற்கையின் மொத்த அழகையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவருக்கு எதிரில் அரசர் ஒருவர் அரியணையில் அமர்ந்திருந்தார்.
அரியணைக்கு அருகில் செல்லும் முன்னே அந்த அரசன் இறங்கிவந்து யூசுப்பை ஆரத் தழுவினார். பின் யூசுப்பைச் சற்று விலக்கி அவர் கண்களை உற்றுப் பார்த்தபடி “ஒவ்வொரு காலகட்டத்திலும் நல்வழி காட்ட ஒரு மகான் இருப்பார். உனது காலகட்டத்தில் உனக்கு வழிகாட்ட இருக்கும் மகான் துன்னூன் மிஸ்ரி” என்று சொன்னார். அந்த வார்த்தைகள் யூசுப்பின் காதில் விழுந்த அடுத்த கணம், அவரது கனவு மொத்தமும் கலைந்தது.
ஆசிரியரைத் தேடி
கனவுதானே என்றெல்லாம் நினைக்காமல், காலத்தைச் சற்றும் தாமதிக்காமல் துன்னூன் மிஸ்ரியைச் சந்திக்க எகிப்துக்கு யூசுப் சென்றார். தனது ஆன்மிகத் தேடலுக்கான விடிவு அவர்தான் என்பதை யூசுப்பின் மனம் ஆழமாக நம்பியது. துன்னூன் மிஸ்ரியைச் சந்திக்கும்போது அவர் அங்கு ஒரு பள்ளியில் அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார்.
நேரடியாக அவரிடம் சென்று யூசுப் வணக்கம் சொன்னார். அதன்பின் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவரைப் பார்த்தபடியே பள்ளியின் ஓரமாகச் சென்று சுவரில் சாய்ந்து அமர்ந்தார். துன்னூனின் அறிவுரைகள் யூசுப்பின் காது வழி நுழைந்து அகத்தை நிரப்பின. அவ்வாறு ஓர் ஆண்டு ஓடியது.
ஓராண்டுக்குப்பின், துன்னூன் மிஸ்ரி யூசுப்பைப் பார்த்து, “நீ எந்த ஊர்?” என்று கேட்டார். ’ரை’ என்று யூசுப் பதிலளித்தார். அதன் பிறகு அவரும் கேட்கவில்லை, இவரும் பேசவில்லை. மீண்டும் மௌனத்தில் ஓராண்டு ஓடியது. துன்னூனின் அறிவுரைகளால் யூசுப்பின் மனம் ததும்பி வழிந்தது. ஈராண்டின் முடிவில் “நீ வந்த காரணமென்ன?” என்று துன்னூன் கேட்டார். ”உங்களைக் காண வந்தேன்” என்று யூசுப் பதிலளித்தார். அதன்பின் மீண்டும் மௌனத்தில் ஓராண்டு ஓடியது.
மூன்றாம் ஆண்டின் முடிவில் “உனக்கு என்ன வேண்டும்?” என்று துன்னூன் கேட்டார். தன்னையிழந்து அகம் விரிந்திருந்த யூசுப் “ஞானம் வேண்டும்” என்று கேட்டார். யூசுப்பின் கண்களை உற்று நோக்கிய துன்னூன், எதுவும் பேசாமல் அங்கிருந்து மெல்ல அகன்று சென்றார். மீண்டும் மௌனத்தில் ஓர் ஆண்டு ஓடியது.
நான்காம் ஆண்டின் இறுதியில், மெய்மறந்து ஞானப் பிழம்பாக ஒளிர்ந்த யூசுப்பை அழைத்து ஒரு மரப்பெட்டியைக் கொடுத்து, அதை நீண்ட தொலைவில் வசிக்கும் ஒரு பெரியவரிடம் கொடுத்து, அவர் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு துன்னூன் கூறினார். என்ன, ஏது என்று கேள்விகளின்றி அந்தப் பெரியவரைச் சந்திக்க யூசுப் பயணப்பட்டார்.
அவர் செல்லும்போது, அந்தப் பெட்டிக்குள் ஏதோ அசைவு இருப்பதை யூசுப் உணர்ந்தார். அந்த அசைவைப் பொருட்படுத்தாமல் யூசுப் சென்றாலும், அவர் மனத்துக்குள் ஆர்வம் வெகுண்டெழ ஆரம்பித்தது. இறுதியில் ஆர்வத்தை அடக்க முடியாமல் பெட்டியைத் திறந்தபோது உள்ளிருந்த எலி வெளியில் குதித்து ஓடி மறைந்தது.
இன்னும் காலம் கனியவில்லை
ஆர்வத்தை அடக்க முடியாத தன் செயலை நொந்தபடி, அந்தப் பெரியவரிடம் சென்று பெட்டியைக் கொடுத்தார். ”எலியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுமையற்ற உன்னால் எப்படி ஞானத்தைப் பார்த்துக்கொள்ள முடியும்?” என்று கேட்டார். அவர் சொன்னதை வார்த்தை மாறாமல் அப்படியே துன்னூன் மிஸ்ரி யிடம் யூசுப் சொன்னார். ”இன்னும் காலம் கனியவில்லை” என்று சொன்ன துன்னூன் மிஸ்ரி, ஊருக்குத் திரும்பி மக்களுக்கு அறிவுரை அளிக்குமாறு யூசுப்பிடம் சொன்னார்.
யூசுப் ஊருக்குக் கிளம்பும் போது அவரை உற்றுப் பார்த்துச் சன்னமான குரலில் “நீ படித்ததையும் கேட்டதையும் உன் மனத்திலிருந்து அகற்றி, முக்கியமாக என்னைச் சந்தித்ததை முற்றிலும் மறந்து, உன் இதயத்தின் ஆழத்திலிருந்து, தான் என்ற அகந்தை யைத் தொலைத்து மக்களுக்கு அறிவுரை சொல்” என்றார்.
’ரை’ நகருக்குத் திரும்பிய யூசுப்பை ஊரே கூடி வரவற்றது. யூசுப் தினமும் மக்களுக்கு ஞான உரையாற்றத் தொடங்கினார். மார்க்கவழிப்படி வாழ்ந்த அந்த மக்களுக்கு யூசுப்பின் ஞான உரை சலிப்பை ஏற்படுத்தியது. அவரது கூட்டத்துக்கு வரும் மக்கள் வெகுவாகக் குறைந்தனர். அவரது உரையைக் கேட்க யாரும் வராத நிலை விரைவில் ஏற்பட்டது, இருந்தும் தான் உரையாற்றுவதை யூசுப் நிறுத்தவில்லை.
’பொறுமையாளர் என்பவர் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு வெறுப்பைக் காட்டுபவரல்ல; துன்பத்தை இன்பமாகக் கருதுபவர்’ என்பதுவே அவரது முக்கிய அறிவுரை. அதற்கு உதாரணமாக ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த யூசுப் இப்னு ஹுசைன் இன்று மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார்.
(ஞானிகள் தொடர்வார்கள்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT