Published : 10 Jan 2019 10:55 AM
Last Updated : 10 Jan 2019 10:55 AM
‘நீ தேடும்பொருளாக
நீயே இருக்கிறாய்’
- ஜலாலுதீன் ரூமி
தேடல்களே மனிதனின் வாழ்வை முன்னெடுத்துச் செல்கின்றன. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப் பெரும் சூஃபி ஞானியான அபூ ஹஃப்ஸ் ஹத்தாத்தின் வாழ்வையும் தேடல்களே முன் நகர்த்திச் சென்றன. ஹத்தாத்தின் தேடல்கள் புறத் தேடல்களாக இன்றி அகத் தேடல்களாக இருந்ததால், அவரது வாழ்வின் பயணம் உள் நோக்கிய ஒன்றாக அமைந்து, வாழ்வின் அடி ஆழத்தைத் தொட்டு, அவருள் அவரைக் கரைத்தது.
ஹத்தாத் கிழக்கு ஈரானில் இருந்த நிஷாப்பூர் நகரைப் பூர்வீக மாகக் கொண்டவர். கைதேர்ந்த கொல்லர் அவர். தொழிலில் அவர் கொண்டிருந்த திறன் காரணமாக, வெற்றிகரமான கொல்லராக வலம்வந்தார். நல்ல தொழில், கைநிறையச் செல்வம், எண்ணற்ற நண்பர்கள் என அவரது இளமைக்காலம் மிகுந்த மகிழ்வுடன் சென்றது.
அந்தச் சூழ்நிலையில், ஒரு தாசியுடன் ஏற்பட்ட எதிர்பாராத சந்திப்பு அவரது வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அந்தப் பெண் மீது அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு ஒருதலைக் காதலாக மாறியது. காதலின் நெருப்பால் ஏற்பட்ட வேதனையில் அவரது மனம் வெந்தது. மகிழ்ச்சி ததும்பி வழிந்த அவரது வாழ்வைக் காதலின் சோகம் மூழ்கடித்தது. ஹத்தாத்தால் எதுவும் செய்ய முடியவில்லை.
தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. நண்பர்களுடன் பேச முடியவில்லை. அவரை அவரால் எதிர்கொள்ள முடியாமல், ஒரு தீவிர மன அழுத்தத்தில் அவர் விழுந்தார்.
காதலின் வேதனையிலிருந்து மீள்வதற்கு, நண்பர்களின் ஆலோசனைப் படி, ஒரு யூத மந்திரவாதியைச் சந்தித்து உதவி கோரினார். அந்த மந்திரவாதி, ஹயாத்துக்கு ஒரு தாயத்தைக் கொடுத்து, “இன்றிலிருந்து நாற்பது நாட்களுக்குக் கடவுளைப் பற்றித் துளியளவும் எண்ணாதே. கனவிலும் கூட எந்த நல்லதையும் செய்துவிடாதே. நாற்பது நாட்களில் எனது மந்திரம் உனது மனத்திலிருந்து அந்தக் காதலின் நோவை அகற்றிவிடும்” என்று கூறி அனுப்பினார்.
ஹயாத்தின் அடுத்த நாற்பது நாட்களும் கடவுள் சிந்தனையற்ற நாட்களாகவே கழிந்தன. பள்ளிக்குச் செல்லவில்லை. தொழவில்லை. முக்கியமாக நல்லது எதுவும் செய்யவில்லை. நாற்பது நாட்கள் முடிந்தபின், அந்த மந்திரவாதியை மீண்டும் சந்தித்தார். தனது மனத்திலிருந்து அந்தக் காதலின் நோவு இன்னும் அகலவில்லை என்று சொன்னார்.
ஆச்சரியமடைந்த மந்திரவாதி “நீ ஏதோ நல்லது செய்துள்ளாய். இல்லையென்றால் எனது மந்திரம் கண்டிப்பாக வேலை செய்திருக்கும்” என்று சொன்னார். வரும் வழியில் இருந்த கல் ஒன்றை ஓரமாகப் போட்டதைத் தவிரத் தான் வேறு எதுவும் செய்யவில்லை என்று ஹயாத் சொன்னார். அதைக் கேட்ட அந்த மந்திரவாதி “நாற்பது நாட்கள் நீ இறைவனுக்கு எதிராகச் செயலாற்றியபோதும், நீ செய்த அந்தச் சிறிய நன்மையை இறைவன் வீணாக்க விரும்பவில்லை” என்றார். அந்த நொடியில் ஹத்தாத்தின் வாழ்வு தலைகீழாக மாறியது.
அவருடைய காதல் கடவுளின் மீதான ஒன்றாக அக்கணமே மாறியது. அதன் பின், தினமும் தான் ஈட்டிய பணம் அனைத்தையும் ஏழைகளுக்குத் தானம் செய்தார். தனக்கு வேண்டிய உணவைப் பிச்சையெடுத்துச் சாப்பிட்டார். சில நேரம் குப்பையில் பொறுக்கிச் சாப்பிட்டார்.
ஆன்மிகப் பயணம்
ஒருமுறை அவர் பட்டறையில் அமர்ந்திருந்தபோது “எதிர்பார்க்காதது எல்லாம் கடவுளிடமிருந்து வெளியாகும்” என்று சொன்னபடி ஒரு வயதான பிச்சைக்காரர் சென்றார். அந்தச் சொற்கள் செவியில் நுழைந்ததும், ஹத்தாத் மயக்கமடைந்து விழுந்தார். சற்று நேரம் கழித்து மயக்கம் தெளிந்த ஹத்தாத், உலையிலிருந்து பழுக்கக் காய்ந்த இரும்புக் கம்பியை வெறும் கையில் எடுத்து அதைச் சம்மட்டியால் அடிக்கத் தொடங்கினார்.
அவரைப் பார்த்து’இடுக்கியை எடுக்க மறந்துவிட்டீர்கள்’ என அங்கிருந்த தொழிலாளர்கள் கத்தினார்கள். சுயநினைவுக்குத் திரும்பிய ஹத்தாத், கையில் இருந்த பழுத்த கம்பியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். பின் அந்தக் கம்பியை விட்டெறிந்து விட்டு, கடையைத் துறந்து, ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டார். ’நன்மையளிக்காத எதையும் வைத்துக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை’ என்று பின்னொரு நாளில் இதைக் குறித்து அவர் சொன்னார்.
அவரது ஆன்மிகப் பயணம், அந்தக் காலத்தில் ஆன்மிகப் பூமியாக விளங்கிய பாக்தாத்தில் கொண்டு சென்று அவரை நிறுத்தியது. தூய அரபு மொழியில் ஹத்தாத் ஆற்றிய பல உரைகள், அவரது புகழை பாக்த்தாத் எங்கும் பரப்பியது. பாக்தாத்தில் வசித்த மிகப் பெரும் சூபி ஞானியான ஜூனைத்துடன் ஏற்பட்ட சந்திப்பு, அவர்கள் இருவரது ஆன்மிக நிலையையும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியது.
தியாகம்குறித்து இருவரும் விவாதிக்கும்போது, “உண்மையான தியாகம் என்பது தான் செய்தேன் என்று கருதாமல் இருப்பது” என்று ஜூனைத் சொன்னார். அதற்கு ஹத்தாத் “என்னைப் பொறுத்தவரை மற்றவர்களிடம் இருந்து எந்தவித நியாயத்தையும் எதிர்பார்க்காமல், நாம் அவர்களிடம் நியாயமாக நடந்துகொள்வதில்தான் உண்மையான தியாகம் உள்ளது” என்று பதிலளித்தார். ‘பேசுவதைவிட வாய் மூடி இருப்பதே ஒருவனுக்கு நல்லது’ என்பதே அவர் சீடர்களுக்கு அளிக்கும் முக்கிய அறிவுரை.
மக்காவுக்குச் சென்று திரும்பியபிறகு, பாக்தாத்தில் ஷிப்லி அவர்களது வீட்டில் நான்கு மாதங்கள் தங்கினார். அந்த நான்கு மாதங்களும் தினமும் வித விதமான உணவுகளை அளித்து அவர் ஹத்தாத்தை உபசரித்தார். நான்கு மாதங்கள் முடிந்து, ஹத்தாத் நிஷாப்பூருக்குக் கிளம்பும்போது ஷிப்லியிடம் “நிஷாப்பூருக்கு வாருங்கள். உங்களுக்கு விருந்தோம்பல் என்றால் என்னவென்று சொல்லித் தருகிறேன்” என்றார்.
அதிர்ச்சியடைந்த ஷிப்லி, நான் தங்களைப் போதுமான அளவு உபசரிக்கவில்லை என்றால், மன்னித்துவிடுங்கள் என்றார். “தேவைக்கு அதிகமாக உபசரித்ததே, நீ செய்த தவறு. எப்போதும் விருந்தாளியை அந்நியராகக் கருதாமல், வீட்டில் உள்ள ஒருவராகவே கருத வேண்டும். அவருக்கென்று சிறப்பாக ஏதும் உணவு அளிக்காமல், வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் உண்ணும் உணவையே அவருக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் விருந்தாளியின் இருப்பு சுமையற்றும் அவரது பிரிவு மகிழ்வற்றும் இருக்கும்” என்று ஹத்தாத் சொன்னார்.
ஹத்தாத் தன்னுடைய இறுதிக்காலத்தை நிஷாப்பூரில் செலவிட்டார். ஒருமுறை தன் சீடர்களைப் பார்த்து ‘சக மனிதரின் பிழைகளைப் பொறுக்க முடியாமல் கோபம் கொள்ளும்போது, உங்களிடம் உள்ள பிழையொன்றை நினைத்துப் பாருங்கள். அதன் பின்னும் உங்களது கோபம் அடங்கவில்லை என்றால், அந்த மனிதனிடம் உள்ள நல்ல குணம் ஒன்றை நினைத்துப் பாருங்கள்.
அதன் பின்னும் உங்களது கோபம் கட்டுக்குள் வரவில்லை என்றால், இதைப் போன்று நாற்பது முறை செய்யுங்கள். அதன் பின்னும் அந்த மனிதரின் மீதான கோபம் உங்களுக்குக் குறையவில்லை என்றால், நீங்கள் மனிதனே இல்லை என்பதை உணர்ந்து தொலைந்து செல்லுங்கள்’ என்று கூறினார். ஹத்தாத் என்ற சூபி ஞானியின் குணத்தையும் ஆளுமையையும் இதைவிட வேறு எந்த வார்த்தையாலும் விளக்க முடியாது. ஹத்தாத் வாழ்ந்த காலம் முழுவதும், அவரது வாழ்வு அவரின் இந்தக் கூற்றின் படியே அமைந்தது.
(ஞானிகள் தொடர்வார்கள்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT