Published : 17 Jan 2019 10:24 AM
Last Updated : 17 Jan 2019 10:24 AM
மனித அறிவு இன்று புதிய திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. அரசியல், மதம், கலை, சமூகம், கலாச்சாரம், உளவியல், அறிவியல் என்ற அனைத்துத் தளங்களின் சிந்தனையும் அடிப்படை மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. புதிய பரிசோதனை முயற்சிகள் இந்த எல்லாத் தளங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனித்தனியானவையென இதுவரை கருதப்பட்டு வந்திருக்கும் இத்தளங்கள் பிரக்ஞை (Consciousness) என்னும் மாபெரும் தளமொன்றின் பல்வேறு பிரிக்க முடியாத அங்கங்கள் என்ற உண்மை புரியத் தொடங்கியிருக்கிறது.
இன்று மலர்ந்துவரும் நவீன அறிவியல், வேதியில், உயிரியல் தத்துவங்கள், பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்தும், உயிரின் பரிணாமம் பற்றியும் வெளிப்படுத்தி வரும் புதிய உண்மைகள் வாழ்க்கை அனுபவத்தின் பொருளையே அடியோடு மாற்றியிருக்கின்றன.
இதன் காரணமாக இதுவரை இருந்துவந்திருக்கும் அறிவுத் தளங்கள் குறித்த உண்மைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் புதிய பரிசீலனையில் இறங்காதவர்கள், தம்மைப் பற்றியும் தம் வாழ்வு பற்றியும் புதிய விசாரணையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாதவர்கள், நவீன மனிதர்கள் என்னும் அடையாளத்திற்குத் தகுதியின்றிப் போய்விடுகிறார்கள்.
இன்று இக்கணம்
நவீன மனிதன் என்பவன் இன்று, இக்கணத்தில் வாழ்பவனாக இருக்கவேண்டும். கடந்துசென்றுவிட்ட அளக்க முடியாத காலத்தையும், இன்னும் வெளிப்பட்டு விரியாத, முடிவற்ற எதிர்வரும் காலத்தையும் பிரிக்கும் புள்ளியாக இல்லாமல், இணைக்கும் புள்ளியாகத் தான் இருந்து இயங்கும் உண்மையை அவன் அறிந்துகொண்டாக வேண்டும்.
பழைய அறிதல்களையும் புதிய அவதானங்களையும் ஒன்றிணைத்துப் பார்க்க அவன் கற்கவேண்டும். இந்த ஒன்றிணைந்த பார்வையின் விளைவாகப் பழைய அறிதல் புதிய அர்த்தமும் ஆழமும் கொள்வதையும், புதிய அறிதலுக்குப் பழைய அறிவு ஆதாரமாக அமைவதையும் காண முடியும்.
வளர்ந்துவரும் அறிவுணர்வின் விளைவாக இன்றைய இளைய தலைமுறையினர் நல்ல புத்திசாலிகளாக இருக்கிறார்கள். எதையும் குருட்டுத்தனமாக நம்பிவிட அவர்கள் மறுக்கிறார்கள். எந்த விஷயத்தையும் கேள்வி கேட்டு ஆழமாகப் புரிந்துகொள்ள அவர்கள் விழைகிறார்கள். பல சமயங்களில் அவர்கள் கேள்விக்கான விளக்கங்களைப் பெரியவர்களால் அளிக்க முடியாமல் போகிறது.
அவ்வாறு நியாயமான கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் போகும்போது, அவர்களுக்கு நம் கலாச்சாரம் கண்டறிந்துள்ள உண்மைகளின் மேல் நம்பிக்கையற்றுப் போய்விடும் அபாயமும் நேர்கிறது. வளர்ந்துவரும் அவர்களுடைய அறிவின் தீட்சண்யத்தின் வீச்சில் எழும் கேள்விகளுக்கு மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆழமற்ற தன்மையிலும் முழுமையான விடைகள் கிடைக்காமல் போவதால், அந்த இளம் மனங்கள் நோக்கமிழந்து, கவனம் சிதறிப்போய், பல வகையான தவறான வழிகளில் சென்று, சீர்கெட்டுப் போகும் அவல நிலையையும் இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
பெரியவர்களேகூட வாழ்வின் அகப் பரிமாணத்தைக் கணக்கில் கொள்ளாத அறிவியலின் பாதிப்பால் ஆன்ம நம்பிக்கை பலவீனப்பட்டுப்போய், ஒருபுறம் நம்பிக்கையை விட்டுவிடவும் முடியாமல், மறுபுறம் அறிவும் தர்க்கமும் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ளவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்புபோல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் குழப்பத்தை அரசியல் ஆதாயம் போன்ற பிற காரணங்களுக்காக மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வதும் நடக்கிறது.
நம்பிக்கைகள் புதிய சிந்தனைகள்
முற்காலத்தில் பிரபஞ்சம் பற்றியும் பிரக்ஞை குறித்தும் அடிப்படையான உண்மைகளைக் கதைகளாகவும் அவற்றில் வரும் குறியீடுகளாகவும் புராணக் கதைகளில் பொதித்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். அந்த உண்மைகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி இல்லாதவர்களுக்காகவும், அரைகுறையாகப் புரிந்துகொள்வதால் ஏற்படக்கூடிய அபாயத்தையும் உணர்ந்து இவ்வாறு அவர்கள் செய்திருக்கின்றனர்.
ஆனால் இப்போது அந்த உண்மைகளை வெளிப்படையாக விளங்கிக் கொள்ளுமளவுக்கு மனிதப் பிரக்ஞை முதிர்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது. அவற்றை விளங்கிக்கொள்வதற்கான தேவையும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இன்றைய மனிதன், ஓரளவுக்காவது உளவியலாளனாக, அறிவியலாளனாக, கலைஞனாக, அரசியல் கண்ணோட்டம் கொண்டவனாக, சமூக அக்கறை நிறைந்தவனாக, இருப்பது அவசியமாகிப் போயிருக்கிறது.
வளர்ந்துவரும் அறிவியல் அறிவின் காரணமாக, இளைய தலைமுறையினர் மனத்தில், நம் பண்டைய கலாச்சாரத்தின் நம்பிக்கைகளுக்கும், அறிவியலின் புதிய கருத்துக்களால் விளைந்துள்ள அவநம்பிக்கைக்கும் இடையில் பெரும் குழப்பமும் ஆழ்ந்த அமைதியின்மையும் தோன்றியிருக்கிறது.
இந்த நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, நம் புராண இதிகாசங்களில் வரும் விஷயங்களின் உட்பொருளும், புதிய அறிவியல் கண்டடைந்துள்ள வெளிச்சங்களும் ஒரே உண்மையைச் சுட்டுவனவாக இருப்பதை அறிந்துகொள்வது இந்த நிலைமைக்கு மாற்றாகச் செயல்பட முடியும்.
நம் புராணக் கதைகளைத் தவிர, வேறு கலாச்சாரங்களில் பலகாலமாக வழக்கத்தில் இருந்துவரும் சில கதைகளையும் இந்தத் தொடரில் நாம் பரிசீலிக்கலாம். இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு 'உட்பொருள் அறிவோம்' என்ற இந்தத் தொடரைத் தொடங்கியுள்ளேன்.
வாரம்தோறும் உட்பொருளைத் தேடிப் பயணிப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT