Published : 30 Jan 2019 07:55 PM
Last Updated : 30 Jan 2019 07:55 PM
ஏகாதசி என்பது பெருமாளுக்கு உகந்த அற்புதமான விரத நாள். தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவோம். சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நாளை 31.1.19 வியாழக்கிழமை சர்வ ஏகாதசி. மறக்காதீர்கள்!
ஏகாதசி என்பது பெருமாளுக்கு உரிய திதி என்பார்கள். அதனால்தான் வைகுண்ட ஏகாதசி என்று போற்றுகிறோம். விரதம் இருக்கிறோம். கொண்டாடுகிறோம்.
பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். ஏராளமான பக்தர்கள், மாதந்தோறும் ஏகாதசியில், தவறாமல் விரதம் மேற்கொண்டு, பெருமாளை ஸேவித்து வழிபடுவது வழக்கம்.
ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பதும் அவரைப் பிரார்த்திப்பதும் மிகுந்த பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.
அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்!
அந்த வகையில், தை மாத ஏகாதசி ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. நாளைய தினம், 31.1.19 வியாழக்கிழமை சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.
முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து, நான்குபேருக்கேனும் வழங்குங்கள். உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் உங்களுக்குப் பிடித்தமான உறவுக்காரர்கள் நண்பர்கள் என யார் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் என சேர்த்து, அவர்களுக்காக, அவர்களின் நலனுக்காக உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.
புளியோதரை அல்லது தயிர்சாதம் வழங்குங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும், உங்கள் நண்பர்களும் உறவினர்களும் சிறப்புடன் செழிப்புடன் வாழ்வது உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT