Published : 11 Sep 2014 01:19 PM
Last Updated : 11 Sep 2014 01:19 PM
பகவத் கீதை உரைக்கு முன்னுரை எழுதிய பாரதியார் முதல் பக்கத்திலேயே பைபிளிலிருந்து ஒரு வாசகத்தை மேற்கோள் காட்டுகிறார்.
“நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்” என்னும் இயேசு பிரானின் வார்த்தைதான் அது.
இதே வார்த்தையைப் பல ஆன்மிக ஞானிகளும் தத்துவ வாதிகளும் சொல்வதைக் கேட்டிருப் போம். கவிஞர்கள்கூட இதையே சொல்கிறார்கள்.
குழந்தைகளைப் போல் ஆவது என்றால் என்ன? நமது அறிவு, அனுபவங்கள், சிந்திக்கும் ஆற்றல், திறமைகள், லட்சியங்கள், உணர்ச்சிகள், கடமைகள் எல்லாவற்றையும் துறந்து விட்டுக் குழந்தைகளைப் போல இருப்பதா? அப்படி இருப்பது சாத்தியமா என்பது இருக்கட்டும்.
அது தேவையா? குழந்தை வளர்ந்து பெரியவர் ஆவதுதானே இயல்பு? இயற்கையின் இந்தச் செயல் முறையை மாற்ற முடியுமா? மாற்றுவது அவசியமா?
செடி மரமாகும். அந்த மரம் மீண்டும் செடியாகாது. ஆனால் அந்த மரத்திலிருந்து கிடைக்கும் விதை இன்னொரு செடியை உருவாக்கும். இதுதானே மனிதர்கள் வாழ்வும்? எனில் மனிதர்கள் மட்டும் ஏன் மீண்டும் குழந்தைகளாக வேண்டும்?
அம்மாவின் நினைப்பு எப்போது வரும்
ஞானிகளும் கவிஞர்களும் சொல்லவருவது வேறு. இதை ராமகிருஷ்ண பரமஹம்சர் அழகாக விளக்குகிறார். வழக்கம்போல ஒரு குட்டிக் கதை மூலம்.
குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு அம்மாவின் நினைப்பே வருவதில்லை. விளையாடும்போது கீழே விழுந்து அடிபட்டுவிடுகிறது. உடனே அம்மா என்று கத்துகிறது. அம்மா ஓடி வந்து கவனிக்கிறார். மருந்து போட்டு சமாதானப்படுத்துகிறார்.
குழந்தை மீண்டும் விளையாட ஆரம்பிக்கிறது. அதற்கு திடீரென்று பசிக்கிறது. சொல்லத் தெரியவில்லை. உடனே வீல் என்று கத்துகிறது. கையிலிருக்கும் விளையாட்டுப் பொருள்களை வீசி எறிகிறது. அம்மா ஓடி வருகிறார். விஷயம் புரிகிறது. உணவை ஊட்டுகிறார். குழந்தை நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிடுகிறது.
எழுந்ததும் ம்மா என்று ஒரு சத்தம். அம்மாவின் வருகை. பிறகு அமைதி. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் ம்மா… வேறு ஏதோ பிரச்சினை. மீண்டும் அம்மாவின் உதவி.
இந்தக் குழந்தைபோல நீங்கள் ஏன் கடவுளிடம் நடந்துகொள்ளக் கூடாது என்று ராமகிருஷ்ணர் கேட்கிறார். தன்னால் முடிந்தவரை எதையோ செய்துகொண்டிருக்கிறது. தன்னுடைய சக்தியின் எல்லையை உணர்ந்ததும் உடனே அம்மாவை அழைக்கிறது. முழு நம்பிக்கையுடன் அழைக்கிறது.
அம்மா வருவார் என்பதிலோ தனக்கு வேண்டியதைச் செய்வார் என்பதிலோ குழந்தைக்குத் துளியும் சந்தேகமில்லை. ஒரு குழந்தை தாயை நம்புவதுபோல நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? அப்படி நம்பி அழைக்கிறீர்களா? அப்படியானால் குழந்தைக்கு உதவத் தாய் வருவதுபோல பக்தனுக்கு உதவ இறைவன் வருவான் என்கிறார் ராமகிருஷ்ணர்.
குழந்தைகளைப் போல நடந்துகொள்வதில் இது ஒரு விதம். உள்ளத்தைக் குழந்தைகளைப் போல மாசற்றதாக, தன் முனைப்பு அற்றதாக வைத்துக்கொள்ளுங்கள் என்று ஞானிகள் கூறுகிறார்கள். பாரதியார் சொல்வதைக் கேளுங்கள்:
“‘குழந்தைகளைப் போலாகிவிடுங்கள்’ என்றால், உங்களுடைய லௌகிக அனுபவங் களையெல்லாம் மறந்துவிடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைப் போலவே தாய்ப்பால் குடிக்கவும், மழலைச் சொற்கள் பேசவுந் தொடங்குங்கள் என்பது கொள்கையன்று. ‘ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போல நிஷ்களங்கமாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்பது கருத்து.”
தூய மனமே குழந்தைநிலை
தூய மனத்துடன், முழுமையான நம்பிக்கையுடன் இறைவனை அணுகுவதே குழந்தையின் மனதோடு இருத்தல். இத்தகைய ‘குழந்தை’களை மணிவாசகர் சொன்னதுபோல, “தாயினும் சாலப் பரிந்து” காப்பவர் இறைவன் என்பதே ஞானிகள் வாக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT