Published : 25 Apr 2014 02:44 PM
Last Updated : 25 Apr 2014 02:44 PM
ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குமுன் அருப்புக்கோட்டை நகரின் மேற்குப்பகுதியான பாவடித்தோப்பு என்னுமிடத்தில் அன்னை மாரியம்மனுக்கு ஒரு கோயில் எழுப்பினர். இங்கு வசித்திருந்த நெசவாளப் பெருமக்கள், தங்கள் வாழ்வாதாரம் செழித்து உண்ண உணவும், உடுக்க ஆடையும், இருக்க வசிப்பிடமும் குறைவறத் தந்தருளும் தாயாம் தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மனுக்கு ஆண்டு முழுக்க பல்வேறு விழாக்களை எடுத்து அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவற்றில் சித்திரை மாதம் நடைபெறும் பொங்கல் திருவிழாவே ஏனைய திருவிழாக்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் அமைந்துள்ளது.
வடக்கு நோக்கிய வண்ணம் இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் பின்பக்கம் பிரம்மாண்டமான தெப்பக்குளம் அமைந்துள்ளது. இதனாலேயே இந்த அம்மனின் திருநாமம்அருள்மிகு தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் என வழங்கப்படுகிறது.
கோயிலின் முன்புறம் பலிபீடம், கொடிக்கம்பம், சிம்ம வாகனம் ஆகியவை வரிசையாய் அமைந்துள்ளன. இதனையடுத்து விசாலமான, கலைநயமிக்க முக மண்டபம் காணப்படுகிறது. அடுத்து மகாமண்டபமும், தொடர்ந்து அர்த்த மண்டபமும், கருவறையும் எழிலாக அமைந்துள்ளன. மூலவராக நின்ற கோலத்தில் சாந்த சொரூபியாக திரிசூலம் ஏந்தியவண்ணம் அம்பிகை மாரியம்மன் காட்சி அளிக்கிறாள். அவளுக்கு இடப்புறம் விநாயகர் பீடம் ஒன்று உள்ளது.
சித்திரைப் பொங்கல்
மாதந்தோறும் கடைசி வெள்ளியில் குத்துவிளக்கு பூசை, மார்கழி தனுர் பூசை, தைப்பொங்கல், நவராத்திரி என பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக இத்தலத்தில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனாலும் சித்திரை மாதத்தில் நடைபெறும் விழாவே வெகு விமரிசையாக இங்கு நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
சித்திரைப் பொங்கல் விழா பன்னிரெண்டு நாள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியுடன் விழா இனிதே தொடங்குகிறது. தினந்தோறும் மாலையில் கோயில் கலையரங்கில் சமயம் தொடர்பான பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும். தினமும் உற்சவர் புறப்பாடாகி வீதியுலா எழுந்தருளும் வைபவமும் நடைபெறும். எட்டாம் திருவிழாவை ஒட்டி அன்று மாலையில் கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கன பெண்கள் கலந்துகொள்வர்.
அன்றையதினம் சரியாக நள்ளிரவில் ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தொடங்கும். புது வஸ்திரம் உடுத்தி, அலங்காரங்களும் ஆபரணங்களும் சாத்தி அம்மனை எழில் கோலமாக்கி, நைவேத்திய படையலும் இட்டு, தூப தீபம் காட்டி முடித்து, அர்த்த மண்டபக் கதவை அடைத்துவிடுவார்கள். அதனைத் தொடர்ந்து கோயில் பூசாரி வேப்பிலையைக் கையில் ஏந்தியபடி, அம்மனை மனதார வேண்டிக்கொண்டே உள்பிராகாரத்தை ஒருமுறை ஆத்மார்த்தமாக வலம் வருவார்.
அம்மனை மனதில் வேண்டி வருந்திக் கையிலுள்ள தேங்காயை அர்த்தமண்டப வாசல்படியில் சிதறுகாய் உடைப்பார். அந்த வேளையில் கோயிலைச் சுற்றிக் கூடி நிற்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நெஞ்சமெல்லாம் அம்மனின் நினைவைப் போற்றியபடி அவளின் பெருமைகளைப் பாடியபடி அர்த்தமண்டபக் கதவுகளையே வைத்த கண் மாறாமல் பார்த்திருக்க அந்த தெய்வீகக் காட்சி ஒரு கண்கொள்ளாக் காட்சியாக ஒரு நொடிப்பொழுதில் நம் கண் முன்னே நிஜமாய் நடந்துமுடியும்.
தெய்வ தரிசனம்
அதாவது பூசாரி சிதறுகாய் போட்டு உடைத்த மறுவிநாடியே, சாத்திவைக்கப்பட்டிருக்கும் அர்த்த மண்டபக் கதவுகள் இரண்டும் தானாகத் திறந்து அந்த ஆயிரங்கண் மாரித்தாயின் காணுதற்கரிய அதிஅற்புத தெய்வீக தரிசனக் காட்சி அந்நேரம் அங்கே கூடிநிற்கும் மக்களுக்கு ஆனந்த வரப்பிரசாதமாகக் காணக் கிடைக்கும். ஒன்பதாம் திருவிழா அன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், அக்கினிச் சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கும்.
அதாவது பூசாரி சிதறுகாய் போட்டு உடைத்த மறுவிநாடியே, சாத்திவைக்கப்பட்டிருக்கும் அர்த்த மண்டபக் கதவுகள் இரண்டும் தானாகத் திறந்து அந்த ஆயிரங்கண் மாரித்தாயின் காணுதற்கரிய அதிஅற்புத தெய்வீக தரிசனக் காட்சி அந்நேரம் அங்கே கூடிநிற்கும் மக்களுக்கு ஆனந்த வரப்பிரசாதமாகக் காணக் கிடைக்கும். ஒன்பதாம் திருவிழா அன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், அக்கினிச் சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கும்.
வாடாத மல்லிகை
இருள் கவியத் தொடங்கியதும் கோயில் முன்பாக இரண்டு ஆள் உயரத்துக்கு அடுக்கப்பட்ட பல டன் விறகுகள் தீ மூட்டப்படும். மேலும் மேலும் விறகுக் கட்டைகளைப் போட்டுக் கொண்டே இருப்பர். அம்மனுக்கு நேர்ந்துகொண்ட பக்தர்கள் இப்பூக்குழியில் இறங்கி நடப்பர். இதற்குமுன் மல்லிகைச் சரங்களைப் பூக்குழிக்கு நான்கு பக்கங்களிலும் எல்லைக்கோடாக போட்டுவைப்பர். அது தீ ஜூவாலையினால் வாடாமல், கருகாமல் புதுமலர்போலவே மணம் வீசியபடியிருக்கும். அம்மன் பூக்குழியை பார்வையிட்ட பின்னரே மல்லிகைச் சரங்கள் வாடும். பத்தாம்நாள் விழாவையொட்டி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும். அச்சமயம் பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பர். பதினொன்றாம் நாள் புஷ்பப் பல்லக்கு நிகழ்ச்சியும் வாண வேடிக்கையும் முளைப்பாரியும் நடைபெறும்.
ஆதியில் இத்திருக்கோயில் அமைந்த இடம் இடுகாடாக இருந்தது; எனவே, பல சித்தர்கள் இங்கு ஜீவசமாதி அடைந்துள்ளனர். அக்காரணத்தினால் இத்திருக்கோயில் மிக்க சாந்நித்தியத்துடன் திகழும். அம்பிகை சாந்தசொரூபியாகத் திகழ்வதால் இங்கு உயிர்ப்பலி இடுதல் வழக்கம் இல்லை. மாறாக இங்கு திரளும் பக்தர்களுக்கு அன்னதானமே வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT