Published : 20 Dec 2018 10:23 AM
Last Updated : 20 Dec 2018 10:23 AM
உலகின் தலைசிறந்த ஞானிகளில் ஒருவராக அறியப்படும் சீனத் தத்துவ ஞானி லாவோ சேவின் தத்துவத்தை அடிப்படையாக வைத்து, ஒரு சாமானியன் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் கதையாக எழுதப்பட்டிருக்கும் புத்தகம் ‘Wu Wei: A Phantasy based on the Philosophy of Lao-Tse’.
எழுத்தாளர் ஹென்றி போரெல் எழுதிய இந்தப் புத்தகம் முதன்முதலில் லண்டனில் 1903-ம் ஆண்டு வெளியானது. தமிழில் இந்தப் புத்தகம் பேராசிரியர் ராஜ்ஜா மொழிபெயர்ப்பில் ‘சும்மா கிட’ என்ற பெயரில் 2000-ம் ஆண்டில் வெளியானது.
சீனாவின் ஷியென் ஷான் தீவில் வசிக்கும் ஞானியைத் தேடிச் செல்லும் ஒருவனின் பயணம் ஒரு குறுநாவலாக எழுதப்பட்டிருக்கிறது. அவன் தேடி வந்த குரு, அவன் ஆன்மாவைத் தூய்மையாக்கி, அவனுக்கு உண்மையின் வழியைக் காட்டுகிறார். குருவுக்கும் மாணவனுக்கும் இடையிலான ஒரு சுவாரசியமான உரையாடலாக விரிகிறது இந்தக் குறுநாவல்.
‘தாவோ, கலை, காதல்’ என்ற மூன்று விஷயங்களைப் பற்றி குருவும் மாணவனும் இந்தக் குறுநாவலில் உரையாடுகிறார்கள். அவர்களது உரையாடல், ‘ஊ வெய்’ என்ற தத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ‘ஊ வெய்’ என்றால் தமிழில் ‘சும்மா கிட’ என்று அர்த்தம்.
தாவோ என்னும் பிறப்பிடம்
ஞானி லாவோ சே, ‘தாவோ தே சிங்’ என்ற தன் புத்தகத்தை எழுதத் தொடங்கும்போதே, தாவோவை முதன்மையானது, நிகரற்றது என்ற பொருள்படவே எழுதினார். ஈடு இணையற்ற ஒருவரை வேறு எந்தப் பெயரில் விளக்க முடியும்? கடவுள் என்ற சொல்கூடச் சரியானது கிடையாது. ‘ஊ’ என்றால் ‘சும்மா’. அதுவே தாவோ என்று தன் மாணவனுக்கு விளக்குகிறார் குரு. முதலும் இல்லாமல், முடிவும் இல்லாமல் ஒரு முழுமையான மெய்ம்மை இருக்கிறது.
அதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள இயலாததாலே, அது நமக்கு வெறுமையாகத் தோன்றுகிறது. நாம் மெய்மையை உணர்ந்துகொண்டதாக நினைப்பதும் மாயையே. நாம் மெய் என்று சொல்பவை பொய். நாம் பொய் என்று சொல்பவை மெய். மெய் என்று நாம் எதை கற்பனை செய்துகொள்கிறோமோ அது மெய் இல்லை. இருந்தும் அது மெய்ம்மையின் வெளிப்பாடு. ஏனெனில், அனைத்தும் மெய்ம்மையே.
ஆகவே, இருத்தலும், இல்லாதிருத்தலும் இரண்டுமே தாவோ தான். தாவோதான் அனைத்துக்கும் பிறப்பிடம். மரங்களுக்கும், மலர்களுக்கும், பறவைகளுக்கும், கடலுக்கும், பாலைவனத்துக்கும், மலைகளுக்கும் வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வெப்பத்துக்கும் குளிருக்கும் பகலுக்கும் இரவுக்கும் கோடைக்கும் பனிக்கும் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் கூட மூலம் தாவோதான். என்பதை இந்தப் புத்தகம் எளிமையான உரையாடல்களின் வழியாக நமக்கு விளக்குகிறது.
சும்மா இருத்தல்
“ஊ வெய் (சும்மா கிட) என்ற சொல்லின் மூலம், லாவோ சே கூற வருவது, கண்களை மூடிக்கொண்டு சோம்பேறியாய் இரு என்றோ, செயலற்றுப்போ என்றோ இல்லை. இவ்வுலகில் மாயையைக் கண்டு கொண்டு அதன்மேல் பற்றுவைக்காமல் சும்மா கிட என்பதே அதன் பொருள். இந்தச் சொல்லை, இன்னும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால், கூட்டினில் அடைபட்டிருந்த கிளி தனக்கு விடுதலை கிடைக்கும்போது எப்படி அந்தக் கூட்டின்மேல் பற்று அற்று பறந்து செல்கிறதோ, அதே போல் உன் உடம்பின்மீது கூட பற்று அற்று இரு என்ற பொருள் விளங்கும்.
தாவோவின் மூலமாகவே நம்முள் பரவும் சக்தியிடம் சரண் அடைந்துவிடுவதன் மூலம், அந்தச் சக்தியானது நம்மை மீண்டும் தாவோவிடம் கொண்டு சேர்க்கும்” என்று இந்த ‘ஊ வெய்’ தத்துவத்தில் விளக்கியிருக்கிறார் லாவோ சே.
தாவோ தத்துவத்தோடு வாழ்க்கையின் அடிப்படையான அம்சங்களான கலை, காதல் பற்றியும் இந்தப் புத்தகம் ஆழமான கருத்துகளை முன்வைக்கிறது. தாவோயிஸத்தைப் பற்றிய அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கு இந்தப் புத்தகம் சிறந்த வழிகாட்டியாக விளங்கும்.
ஹென்றி போரெல் இவர் நெதர்லாந்தின் டோர்த்ரெக்ட் நகரத்தில் 1869-ம் ஆண்டு பிறந்தார். ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஹோக்கியன் சீன (மின்னான்) மொழியில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அத்துடன், மாண்டரின் மொழியறிவையும் பெற்ற இவர், டச்சு கிழக்கு இந்திய நிறுவனத்துக்காக சீன விவகாரத் துறை அரசு அதிகாரியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அரசு அதிகாரியாக மட்டுமல்லாமல், பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், காலனியச் செய்தித்தொடர்பாளர் என இவர் சீனாவில் பல பணிகளை மேற்கொண்டார். சீனக் கலாச்சாரத்தின் மீது இவருக்கிருந்த ஆர்வம், இவரது அனைத்து இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தது. ‘தி ரிதம் ஆஃப் லைஃப்’, ‘ஹிஸ்டோரிக்கல் புக்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’, ‘தி நியூ சைனா’ போன்ற புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார். (சும்மா கிட, புத்தகம் தற்போது தமிழில் அச்சில் இல்லை. விரைவில் மறு பதிப்பு வெளியாகும் என்று இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் ராஜ்ஜா தெரிவித்திருக்கிறார்.) |
சீனச் சக்கரவர்த்தியின் மாயமுத்து “ஒரு சமயம் செங்கடல் நோக்கி பயணம் செய்த சீனச் சக்கரவர்த்தி, கூவேன் லூன் மலையின் சிகரத்துக்கு ஏறிச் சென்றார். தென்பகுதி நோக்கித் திரும்பும்போது, தன் மாயமுத்தைத் தவறவிட்டு விட்டார். அதைத் திரும்பப்பெறத் தன் மூளையின் உதவியை நாடினார். பலனில்லை. தன் கண்களின் உதவியை நாடினார். பலனில்லை. தன் வாயின் உதவியை நாடினார். பலனில்லை. கடைசியாக வேறு வழியில்லாமல் அப்படியே சும்மா இருந்துவிட்டார். அவருக்கு மாயமுத்து மீண்டும் கிடைத்தது. மஞ்சள் சக்கரவர்த்தியோ, ‘என்ன விநோதம் இது! சும்மா இருப்பதற்கு இவ்வளவு சக்தியா, மறைந்த மாயமுத்தைத் தேடிக் கொடுக்கும் அளவுக்கு’ என்று ஆச்சரியப்பட்டுப் போனார். மாயமுத்து சக்கரவர்த்தியின் ஆன்மா. மனம், பார்வை, பேச்சு அனைத்துமே ஆன்மாவைப் புலப்படச் செய்யாமல் திரை போட்டு மூடியிருப்பவை. சலனமற்ற அமைதியின்போதுதான், சக்கரவர்த்திக்குத் தன் ஆன்மாவைப் பற்றிய அறிவு புலனாகியிருக்கிறது.
அமைதியான உறக்கம் பல காலங்களுக்கு முன்னால், ஒருநாள் சுவாங் சேயின் மனைவி இறந்துபோனாள். அன்றும்கூட அவர் வழக்கமாகச் செய்யும் பணியான கோயில் மணியை அடித்துக்கொண்டு, நிம்மதியாகத் தரைமீது அமர்ந்து, நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட அவரது நண்பர் ஹீய் சே, சுவாங் சேயின் அக்கறை இல்லாத இயல்பைச் சாடினார். அதற்குப் பதிலளித்த சுவாங் சே, “நீங்கள் பேசுவது இயல்பாக இல்லையே. முதலிலே நான் வருத்தப்பட்டது என்பதோ உண்மைதான். வேறென்ன செய்ய? பிறகு சற்றுச் சிந்தித்துப் பார்த்தேன். தொடக்கத்தில் என் மனைவி இவ்வுலகில் இல்லை. அந்தச் சமயத்தில் அவள் பிறக்கவே இல்லை. அவளுக்கென்று ஓர் உருவமும் இல்லை. உருவம் என்று ஒன்று இல்லாததினாலே, உயிர் என்று ஒன்று அதனுள் செல்லவில்லை. பிறகு கதிரவனின் ஒளி பெறும், உழுநிலம் போல உயிர்ச்சக்தி கிளர்ந்தெழுந்தது. பின் அதற்கு ஓர் உருவம் கிடைத்தது. அந்த உருவமே அவளாய்ப் பிறந்தது. இன்றோ சூழ்நிலை மாறிப்போனது. ஆகவே அவள் இறந்துவிட்டாள். சிந்தித்துப் பார்த்தால், நமக்கு நடப்பது, ஒன்றன்பின் ஒன்றாக வரும் நான்கு காலங்களான இளவேனில், கோடை. இலையுதிர், குளிர் போன்ற காலங்கள் ஆகியவற்றைப் போலவே இருக்கிறது. இப்போது என் மனைவி அந்த மிகப் பெரிய வீட்டில் அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்து போய் இருக்கிறாள். நானும் அழுது-புரண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தால், இவ்வளவு உணர்ந்த பின்னும் ஊர்மெச்ச நடிக்கிறேன் என்றே பொருள். அதனால்தான் அவைகளையெல்லாம் விட்டு அகன்றுவிட்டேன்.” |
(ஆன்மா என்னும் புத்தகம் தொடர் நிறைவடைந்தது)
கட்டுரையாளர், தொடர்புக்கு:gowri.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT