Published : 05 Dec 2018 07:28 PM
Last Updated : 05 Dec 2018 07:28 PM
ஜென் உலகத்தில் ஜென் குரு டோகென் கிகென் (கி.பி. 1200-1253) ஏற்படுத்திய தாக்கத்துக்கும், செய்த சாதனைகளுக்கும் ஈடு இணையே இல்லை என்று சொல்கிறார்கள். அவர்தான் ஜப்பானில் ஜென்னின் சோடோ பள்ளியைத் தோற்றுவித்தவர். “ஞானம்தான் பயிற்சி, பயிற்சிதான் ஞானம்” என்று அவர் அறிவித்தார்.
புத்த இயல்பை அடைவதற்காக தியானத்தில் அமர்வதில்லை. அதை வெளிப்படுத்துவதற்காகத்தான் அமர்கிறோம். புத்தர் அமர்ந்திருக்கும் நிலையில் அமர்ந்திருப்பதாக நீங்கள் கருதினாலே, நீங்கள் புத்தராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
ஜென் வடிவத்தில் அதிகமாகப் பயிற்சி அளிக்கப்படும், அமைதியாக அமரும் ‘ஜாஜென்’(Zazen) முறை, ‘ஷிகான்தாஜா’ (Shikantaza) முறை ஆகியவற்றை அவர் உருவாக்கியிருக்கிறார். தேநீர் விழாக்கள், ஹைக்கூ கவிதை, தோட்டக் கலை, பூக்களை அடுக்குதல், வேலியிடுதல், மல்யுத்தம், வில்வித்தை, தற்காப்புக்கலை, கையெழுத்துக்கலை, ஓவியம் என ஜப்பானிய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஜென் வியாபித்திருக்கிறது.
இந்த ஜென் தத்துவத்தைப் பற்றிய விரிவான பார்வையை ‘ஜென் ஹார்ட், ஜென் மைண்ட்’ (Zen Heart, Zen Mind – The Teachings of Zen Master Ama Samy) புத்தகத்தில் முன்வைக்கிறார் ஜென் குரு அமா சாமி. இந்தப் புத்தகத்தைத் தொகுப்பாக்கம் செய்திருப்பவர் அமா சாமியின் மாணவியும் எழுத்தாளருமான காலம்சென்ற ஸ்ரீதேவி ராவ்.
அமர்ந்தநிலை தியானம்
ஜாஜென் என்பதற்கு முறையான அமர்ந்தநிலை தியானம் என்று அர்த்தம். இதுதான் ஜென் வழிக்கான மையம் என்று கருதப்படுகிறது. நீங்கள் ஜாஜென் முறையில் அமர்ந்து உங்கள் உள்ளொளி, மனப்பான்மைகளைப் பயன்படுத்தி தியானம்செய்யும்போது, அது உங்களைச் சுய மாற்றத்துக்குத் தயார்படுத்தும். இது ஜென்னின் உண்மையான பயிற்சி. இது வாழும் ஜென் என்று விளக்குகிறார் அமா சாமி.
இந்த ஜாஜென் முறையில், எந்த மாதிரியான உள்ளொளிகளையும் மனப்பான்மைகளையும் நீங்கள் பெறுகிறீர்கள், வெளிப்படுத்துகிறீர்கள்? ஜென் தியானத்தில் என்ன நடக்கும், அல்லது என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது? நீங்கள் ஒளியைப் பார்க்க முடியுமா, பேரானந்த நிலையை அடைய முடியுமா, தேவதைகளின் பாடல்களைக் கேட்க முடியுமா? போன்றவையெல்லாம் இயல்பான கேள்விகள்.
ஜாஜென் முறையில் அமர்வது என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அமர்வதாகும். உங்கள் ஆசைகளின் ஆரவாரத்தைத் தவிர, கேட்பதற்கு எதுவுமில்லை. உங்கள் உணர்வுகளின் பாரத்தைத் தவிர, உணர்வதற்கு எதுவுமில்லை. உங்கள் தற்சுயத்தின் மீள்வடிவங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது.
உங்களின் தனி சுயம், ஆசைகள், உணர்வுகளை இப்படிப் பார்ப்பதன் மூலம் மட்டுமே உங்களால் உங்கள் உண்மையான சுயத்தையும் அசலான முகத்தையும் பார்க்க முடியும். உங்கள் உண்மையான சுயத்தினுள் பார்ப்பதுதான் ஜாஜென் என்று சொல்கிறார் அவர்.
ஞானமும் பயிற்சியும்
“ஃபூஜி மலையைப் போல அமர்ந்திரு” என்பது ஜென் ஆசிரியர்களின் பிரபலமான வாக்கு. மேகங்கள் சுழன்று அடித்தாலும், காற்று ஓயாது அடித்தாலும் ஃபூஜி மலை கம்பீரமாக, அசையாமல், நிலையாக அமர்ந்திருக்கும். அதேபோல எண்ணங்கள், உணர்வுகள், பேரார்வங்கள், கற்பனை வடிவங்கள் போன்ற மேகங்கள் உங்களைச் சூழ்ந்திருந்தாலும் அவற்றால் பாதிக்கப்படாமல் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார் அவர்.
இப்படி வெறுமனே அமர்ந்து கவனிப்பது, இங்கே, இப்போது இருப்பது, எந்த எதிர்பார்ப்பும், லட்சியமும் இல்லாமல் இருப்பது ஆகியவைதான் ‘ஷிகான்தாஜா’ பயிற்சி முறை. ஒருவருக்கு உலகத்துடனும் தன்னுடன் இருக்கும் நெருக்கம் இது. இது ஜாஜென்னின் நெருக்கம். இந்தப் பயிற்சியின் மூலம் எல்லாமே அதனதற்குச் சொந்தமான இடத்தில் இருக்கும்.
“சாராம்சமும் வடிவமும் வேறு வேறல்ல. உடலும் மனமும் வேறு வேறல்ல. ஞானமும் பயிற்சியும் வேறு வேறல்ல” என்று அறிவித்திருக்கிறார் ஜென் குரு டோகென். அதனால், புத்தர் நிலையில் அமர்ந்திருப்பதாக நீங்கள் கருதினாலே, நீங்கள் புத்தரைத் தவிர வேறில்லை என்று இந்தப் புத்தகம் விளக்குகிறது.
ஜென் வரலாறு, பயிற்சி முறைகளைப் பற்றிய ஆழமான விரிவான புரிதலைப் பெற விரும்புகிறவர்களுக்கு இந்தப் புத்தகம் சிறந்த வழிகாட்டி.
அமா சாமி ஜப்பானில் அங்கீகரிக்கப்பட்ட ஜென் குருவிடம் தர்ம ஞான முத்திரையைப் (Dharma Seal of Enlightenment) பெற்ற முதல் இந்திய ஜென் குருவாக அறியப்படுபவர் இவர். 1936-ம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் அருள் மரிய ஆரோக்கியசாமி. இவர் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கிறிஸ்தவ சபையில் சேர்ந்து பாதிரியானார். 1972-ம் ஆண்டில் ஜப்பான் சென்று யமடா கோ-உன் ரோஷியிடம் இவர் ஜென் பயிற்சியைப் பெற்றார். இந்தியாவில் 80-களில் ஜென் பயிற்சியை இவர் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். 1996-ம் ஆண்டு கொடைக்கானல் பெருமாள் மலையில் ‘போதி ஜென்டோ’ என்ற ஜென் மையத்தை நிறுவி ஜென் தத்துவத்தைக் கற்றுக்கொடுத்துவருகிறார். இந்த ஜென் மையத்தில் சோடோ, ரின்சாய் முறைகளில் ஜென் பயிற்சியை ஆண்டு முழுவதும் இவர் அளித்துவருகிறார். |
மனம்தான் வழி குரு நன்சென்னிடம் ஜோஷு என்ற மாணவர், “ எது வழி?” என்று கேட்டார். அதற்கு குரு, “சாமானிய மனம்தான் வழி” என்று பதிலளித்தார். “அதை நோக்கி நான் என்னைச் செலுத்த வேண்டுமா, வேண்டாமா?” என்று கேட்டார் ஜோஷு. “நீ அதை நோக்கிச் செல்வதற்கு முயன்றால், அதற்கு எதிராகச் சென்றுவிடுவாய்” என்றார் நன்சென். “ஒருவேளை, அதை நோக்கிச் செல்வதற்கு நான் முயலவில்லை என்றால், எப்படி அதுதான் வழி என்பதைத் தெரிந்துகொள்வது?” என்று கேட்டார் ஜோஷு. “வழி என்பது தெரிவது, தெரிந்துகொள்ள முடியாதது என்பதைச் சேர்ந்த விஷயம் கிடையாது. தெரிந்துகொள்வது என்பது மாயை. தெரிந்துகொள்ள முடியாதது என்பது வெற்று உணர்வுநிலை. எந்தச் சந்தேகத்துக்கும் இடமின்றி நீ உண்மையான வழியை அடையும்போது, வெளியே பார்ப்பதைப் போன்ற அகண்ட, எல்லையற்ற வெளியைக் கண்டடைவாய். சரி, தவறின் தளத்தில் அதை எப்படிப் பேசுவது?” என்று கேட்டார் குரு. இந்த வார்த்தைகளால் ஜோஷு திடீரென்று ஞானமடைந்தார். |
யோசனை அல்லாத யோசனை ஜென் குரு யகுசான் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரிடம் ஒரு துறவி, “ஒரு பாறையைப் போல் அமர்ந்தபடி, எதை யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு குரு, “முற்றிலும் யோசிக்கவே முடியாத ஒன்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார். “முற்றிலும் யோசிக்கவே முடியாத ஒன்றைப் பற்றி எப்படி ஒருவரால் யோசிக்க முடியும்?” என்று கேட்டார் துறவி. “யோசனை அல்லாத ஒன்றை யோசிப் பதன் மூலம்” என்று பதிலளித்தார் குரு. |
கட்டுரையாளர் தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT