Published : 22 Dec 2018 11:35 AM
Last Updated : 22 Dec 2018 11:35 AM
நடராஜப் பெருமான் என்றதும் தில்லை நினைவுக்கு வரும். சிதம்பரம் நினைவுக்கு வரும். தீட்சிதர்கள் நினைவுக்கு வருவார்கள். ரகசியம் என்பது ஞாபகத்துக்கு வரும். முக்கியமாக... திருவாதிரை நன்னாளும் நினைவுக்கு வரும்!
சிதம்பரத்துக்கு அருகே ஒரு கிராமம். சேந்தன் எனும் சிவபக்தன் வாழ்ந்து வந்தான். விறகு வெட்டி, அதை விற்று, காசாக்கி, பிறகு உணவாக்கி... எனும் சாதாரண வாழ்க்கைதான் என்றாலும் தினமும் சிவனடியார் ஒருவருக்காவது உணவு வழங்கிவிடவேண்டும், சேந்தனுக்கு. இல்லையென்றால் தூக்கமே வராது அவனுக்கு!
சமீபத்தில் பெய்தது போல, அப்போதும் செம மழை. இயல்பு வாழ்க்கை பாதித்தது. விறகு வெட்டமுடியவில்லை. அப்படியே வெட்டியெடுத்தாலும் முழுக்க நனைந்திருந்ததால், விற்கவே இல்லை. விற்றால்தான் காசு. காசு வந்தால்தான் அரிசி. அதை உணவாக்கினால்தான் பசியாறமுடியும். முக்கியமாக, சிவனடியாருக்கு வழங்கமுடியும். தவித்துப் போன சேந்தன், கேழ்வரகுதான் இன்றைக்கு என தேற்றிக் கொண்டான். கேழ்வரகில் களி செய்தான். ‘அப்பாடா... சிவனடியாருக்கு உணவு தயாராக இருக்கிறது’ என பூரித்தான். ஆனால் சிவனடியார்?
தன்னையே சதாசர்வமும் நினைக்கும் சேந்தனை ஊரும் உலகமும் நினைக்க வேண்டும் என திருவுளம் கொண்டார் சிவனார். அடுத்து சிறிது நேரத்தில், சேந்தனாரின் முன்னே சிவனடியார் வந்து நின்றார். சிவனடியாரா அவர்... சாட்ஷாத் சிவபெருமான் அல்லவா அவர்!
சேந்தன் சிவனடியாரை வரவேற்றான். கைகூப்பினான். ஆசனத்தில் அமரச் செய்தான். வாழை இலையைக் கொண்டு வந்து எதிரில் வைத்தான். அதில் சுடச்சுட களியைப் பரிமாறினான். அவன் முகம் முழுக்க களிப்பு களைகட்டியது.
சிவனடியாராக வந்த சிவபெருமான், களியை எடுத்து, ரசித்து ரசித்துச் சாப்பிட்டார். ருசித்து ருசித்துச் சாப்பிட்டார். வார்த்தைக்கு வார்த்தை பாராட்டினார். ‘இது களியமுது’ என புகழ்ந்தார். நெகிழ்ந்து நெக்குருகிப் போனான் சேந்தன்!
‘அமிர்தம் அமிர்தம்’ என சாப்பிட்டு கையலம்பினார். ‘இன்னும் கொஞ்சம் கொடு. வழியில் பசித்தால் சாப்பிட்டுக் கொள்கிறேன்’ என்றார். அழுதேவிட்டான் சேந்தன். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.
மறு நாள். விடிந்தது. பிரமாண்டமான சிதம்பரம் கோயில் நடை திறக்கப்பட்டது. தீட்சிதர்கள் சிவபூஜைக்காக, சந்நிதி சந்நிதியாகத் திறந்து, பூஜை கைங்கர்யத்தில் இறங்கினார்கள். அப்போது, சிவனார் குடிகொண்ட கருவறைக் கதவைத் திறந்தார்கள். ஆச்சரியத்தில் அப்படியே பிரமித்து நின்றார்கள்.
கருவறை வாசலில் களி. மூலவரை நோக்கிச் செல்லும் இடமெல்லாம் களித் துளிகள். மூலவரின் திருவாயில் களிப் பருக்கைகள். திருக்கரத்தில் களி. சந்நிதியில் எங்கு திரும்பினாலும் களியமுது!
‘இதுவரை இந்த உணவை இறைவனுக்குப் படைத்ததே இல்லையே... எப்படி இப்படி?’ குழம்பித் தவித்தார்கள் தீட்சிதர்கள். ஊர்மக்களுக்கு இந்த சேதி பரவியது. மன்னனின் காதுகளையும் சென்றடைந்தது.
முதல்நாள் இரவில், மன்னனின் கனவில் வந்த ஈசன், சேந்தனின் களியமுதையும் அதன் ருசியையும் அவனுடைய பக்தியையும் தெரிவித்துச் சென்றிருந்தார். ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என்று மன்னன் அறியவில்லை. சேந்தன் யார்? எந்த ஊர்? அழைத்து வர ஆட்கள் விரைந்தனர். ஆனால் சேந்தனைக் காணோம்!
அன்றைய தினம், ஆலயத்தில்... ஸ்ரீநடராஜர் பெருமான் ரதோத்ஸவத்தில் பவனி வரும் வைபவம். மன்னனும் வந்திருந்தான். மக்களும் கூடியிருந்தனர். தேர் வடம் பிடிக்க மன்னன் உட்பட அனைவரும் ஆவல்கொண்டு இழுத்தனர். முதல்நாள் பெய்த மழையால், சேறாகிவிட்டிருந்தது. சேற்றில் சிக்கிக் கொண்டது தேர்ச் சக்கரம். ஒரு அடி கூட நகர்த்தவே முடியவில்லை.
அந்தக் கூட்டத்தில், தேர் வடம் பிடிப்பவர்களில் ஒருவனாக சேந்தனும் நின்றிருந்தான். கூட்டத்துடன் கூட்டமாக நின்று, வடம் பிடித்துக் கொண்டிருந்தான். அப்போது, ‘சேந்தனாரே! என் மீது பல்லாண்டு பாடுங்கள். நீர் பல்லாண்டு பாடினால்தான் தேர் நகரும்’ என்று கோயிலில் இருந்த அனைவருக்குமாக அசரீரி கேட்டது. மன்னர், தீட்சிதர்கள், மக்கள் என அனைவரும் திகைத்துப் போனார்கள். யார் இந்த சேந்தன் என்று கூட்டத்தைக் கூட்டமாகப் பார்த்தார்கள்.
‘சாமீ. நமக்கு பாட்டெல்லாம் வராது சாமீ’ என்றான் சேந்தன். ‘உன்னைத்தான் தெரியும் எனக்கு. பாட்டு தெரியாதே’ என்றான். ‘முடியும். பாடு. இன்று நீ பாடுவாய்’ என மீண்டும் கேட்டது அசரீரி!
மன்னுக தில்லை... என்று கண்கள் மூடி, கரம் குவித்துப் பாடினான் சேந்தன். பிறகு அவர் பதிமூன்று பாடல்கள் பாடினார். அனைவரும் மெய்யுருகிப் போனார்கள். சட்டென்று சகதியில் இருந்து நகர்ந்து முன்னேறியது தேர்!
அதுவரை சேந்தனாக இருந்தவன், சேந்தனார் எனப் போற்றப் பட்டார். அவரைச் சுற்றிக் கொண்டார்கள். விழுந்து வணங்கினார்கள். அப்போதுதான் நேற்று துவங்கி இதோ... இப்போது வரை நடப்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து, உணர்ந்து, தெளிந்து, சிலிர்த்து உருகினார் சேந்தனார்!
மனிதர்களுக்குள் சாதாரணன், அசாதாரணமானவன் என்பதெல்லாம் உண்டு. ஆனால், ஏழையோ சாமானியனோ... அங்கே உண்மையான பக்தியே கடவுளைக் குளிர்விக்கும். மகிழச் செய்யும். அருள வழிவகுக்கும்!
சேந்தனாருக்கு, சிவபெருமானே வந்து அருள்புரிந்த நன்னாள்... மார்கழித் திருவாதிரைத் திருநாள். எனவே இன்றும் சிவாலயங்களில், மார்கழி திருவாதிரையின் போது, களி செய்து இறைவனுக்குப் படைத்து பிரசாதமாக வழங்குவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது!
‘திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி! உண்ணாதவருக்கு நரகக் குழி’ என்பார்கள் முன்னோர்கள்!
மார்கழித் திருவாதிரை நன்னாள் நாளை மறுதினம். திருவாதிரை விரதம் நாளை 22ம் தேதி. விரதமிருந்து, சிவாலயத்துக்குச் சென்று ஆடல்வல்லானைத் தரிசிப்போம். களியமுது படைத்து வீட்டில் பூஜிப்போம். திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்... என்று சொல்லி சிவனாரைத் துதிப்போம்.
யார்கண்டது? உங்கள் வீட்டுக் களியைச் சாப்பிட, சிவனாரே வந்தாலும் வருவார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT