Published : 05 Dec 2018 07:27 PM
Last Updated : 05 Dec 2018 07:27 PM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 58: கற்றவர் பேரின்பம் உற்றவர்

பாளையாம் தன்மை செத்தும்,

பாலனாம் தன்மை செத்தும்,

காளையாம் தன்மை செத்தும்,

காமுறும் இளமை செத்தும்,

மீளும்இவ் இயல்பும் இன்னே

மேல்வரும் மூப்பும் ஆகி,

நாளும்நாள் சாகின்றோமால்,

நமக்குநாம் அழாதது என்னோ?

(குண்டலகேசி, 9)

-என்று பவுத்தக் காப்பியமான குண்டலகேசியில் ஒரு பாட்டு: எடுத்து மகிழும் இளங்குழந்தையாக இருந்தீர்கள்; இளங்குழந்தைமை செத்துப் போயிற்று. தேடிய பாலரொடு ஓடி நடந்து, அஞ்சு வயதாகி விளையாடினீர்கள்; பாலப்பருவம் செத்துப்போயிற்று. ‘மதனசொரூபன் இவன்’ என மோக மங்கையர் கண்டு, மருண்டு, திரண்ட காளைப்பருவம் வந்தது; அதன் பின்னோடே, கொங்கை திரண்ட அந்த மங்கையரை மருவும் காமப்பருவமும் வந்தது. துள்ளித் திரிந்த காளைப்பருவமும் செத்துப் போயிற்று;

காமம் படர்ந்த இளமைப் பருவமும் செத்துப் போயிற்று. பரமபத விளையாட்டில் பகடை உருட்டி அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நகர்வதுபோலவே, வாழ்வில் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறோம். அடுத்தவர் சாவுகளுக்கெல்லாம் ஓவென்று ஒப்பாரிவைத்து அழும் நாம், ஒவ்வொரு நாளும் நாமே சாகின்ற நிலையில், நம் சாவுக்கு ஏன் அழுவதில்லை?

செத்துக்கொண்டிருக்கிறோம் என்று அறியவில்லை; தேய்மானம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பது உறைக்கவில்லை.

ஆமாறுஉன் திருவடிக்கே

அகம்குழையேன்; அன்புஉருகேன்;

பூமாலை புனைந்துஏத்தேன்;

புகழ்ந்துஉரையேன்; புத்தேளிர்

கோமான்நின் திருக்கோயில்

தூகேன்;மெழுகேன்; கூத்துஆடேன்;

சாமாறே விரைகின்றேன்;

சதுராலே சார்வானே.

(திருவாசகம், திருச்சதகம், 14)

ஒரு நாளாவது உன் திருவடியை நினைத்து மனம் குழைந்திருக்கிறேனா? அன்பில் கசிந்திருக்கிறேனா? உன்னைப் புகழ்ந்து சொல்லியிருக்கிறேனா? உன் திருக்கோயிலைக் கூட்டியிருக்கிறேனா? மெழுகியிருக்கிறேனா? பற்று மிகுதியினால் உன் திருமுன்பு தலைகால் தெரியாது கூத்தாடி இருக்கிறேனா? ஒருபோதும் இல்லை.

என்ன செய்துகொண்டிருக்கிறேன் நான்? தலைதெறிக்கும் வேகத்தில் என் சாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். தானாகவே என்னைத் தேடிவரும் சாவை நானாகவே ஓடிச்சென்று தழுவிக்கொள்ள நினைப்பது அறிவுடைமையா? ஐயா! அறிவினால் அணுகப்படுகிறவனே! என் மூடத்தனம் மறித்து என்னை ஆட்கொள்வாயா?

ஆண்டொன்று போனால், வயதொன்று போகிறது. அடைய வேண்டியதை அடையாமல், கடவுள்நாள் கழிகிறதென்று வருந்தாமல், பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். நரை திரை எட்டிப் பார்த்தால், மையும் மாவும் பூசி, இளமை புதுக்குகிறார்கள். இளமையைப் பற்றி நிற்க இவ்வளவுக்கு மெனக்கெட வேண்டியதே இல்லை. திருமூலர் சொல்கிறார்:

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்

உறுப்புச் சிவக்கும்; உரோமம் கறுக்கும்;

புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

(திருமந்திரம் 575)

வெளியிலிருந்து உடம்புக்குள் புகுந்தும், உடம்புக்குள்ளிருந்து வெளியில் புறப்பட்டும், தன் போக்குக்குத் திரிகின்ற காற்றை நெறிப்படுத்தினால், உயிர்வளி உடல் முழுதும் வழங்கப்பட்டு, உள்அழுக்குத் தூய்மை செய்யப்பட்டுக் கரிவளியால் வெளியேற்றப்படும். ஊக்கமில்லாமல் தளர்ந்திருந்த உறுப்புகள் போதிய ரத்த ஓட்டமும் உயிர்வளியும் பெற்றுப் புதுக்கப்பட்டுச் சிவக்கும்; மயிர் கறுக்கும்; புரிசடையோனாகிய உயிர், காற்றைப்போலப் புறப்பட்டுப் போய்விடாமல் உள்ளேயே தங்கும்.

பாட்டில் பயின்றுவரும் ‘புரிசடையோன்’ என்னும் சொல்லை ‘இறைவன்’ என்று விளக்குவாரும் உளர். ஆனால் ஒழுங்கான மூச்சுப் பயிற்சிக்கும் உயிருக்கும்தான் நேரடித் தொடர்பே அன்றி, இறைவனுக்கு அன்று. உடலில் உயிர் தங்கினால், உயிரில் இறைவன் தங்குவான் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

ஆனால் இறைவன்தானே தையல் ஓர் கூறு உடையான், தண்மதிசேர் செஞ்சடையான்? எனவே புரிசடையோன் என்பது இறைவனாகத்தானே இருக்க வேண்டும் என்றால், உயிரும் சடையான்தான். உயிர் இட்டுக்கொண்டிருக்கிற புரிசடை அதன் மூச்சு இயக்கம்.

இறக்காமல் எப்போதும் இருக்கலாம்

புரி என்றால் முறுக்கு. சமையற்கலங்கள் ஆடாமல், அவற்றுக்கு அண்டக் கொடுப்பதற்காக, வைக்கோல் புரிகளை முறுக்கிச் செய்த கலவடைக்குப் புரிமணை என்று பெயர். புரிபோட்டு முறுக்கிச் சடைபோட்ட பெண்களைப் புரிகுழல் மாதர் என்பது வழக்கு.

சடைபோட மூன்று புரிகள் தேவை. இடப்புரி, நடுப்புரி, வலப்புரி. இவற்றில் நடுப்புரியை நிலையாக வைத்து, இடப்புரியையும் வலப்புரியையும் நடுப்புரியைச் சுற்றிப் பின்னுவது புரிசடை. இடப்புரி இடகலை என்றால், வலப்புரி பிங்கலையும், நடுப்புரி சுழிமுனையும் ஆகும். பின்னிப் பின்னி வருகிற இவை மூன்றாலும் உயிர்க்கிற உயிரைப் ‘புரிசடையோன்’ என்றால் அது பொருந்தும்தானே?

மற்றொரு பாட்டாலும் மேற்படிக் கருத்தை உறுதிப்படுத்துகிறார் திருமூலர்:

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்

துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்

உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்கு

இறக்கவும் வேண்டாம் இருக்கலும் ஆமே.

(திருமந்திரம் 801)

இடக்கை, வலக்கை, துதிக்கை என்பன முறையே இடநாடி, பிங்கலை, சுழிமுனை நாடி ஆகியனவாம். இடக்கையாகிய இடகலையாலும், வலக்கையாகிய பிங்கலையாலும் மூச்சு உயிர்ப்பதைக் காட்டிலும், இரண்டுக்கும் நடுப்பட்ட துதிக்கையாகிய சுழிமுனையின் வழியாக மூச்சு உயிர்ப்போர், நரை, திரை, மூப்பால் தளர்ந்து சோர்ந்து போக மாட்டார்கள். வாழும் கலையை, யாரோ ஒருவர் வந்து தட்டி எழுப்பிக் கற்றுத் தருவார் என்று மயங்கி உறங்கிக் கிடப்பவர்கள், மயக்கம் தெளிந்து, உறக்கம் நீக்கி உணரத் தலைப்படுவார்களேயானால், மற்றவர்கள் கற்றுத் தரவேண்டிய தேவை அற்றுப் போகும். இறக்காமல் எப்போதும் இருக்கலாம்.

கல்வி என்பதையே மூச்சைப் பயிலும் கல்வி என்னும் தொனியில் சில இடங்களில் பேசுகிறார் திருமூலர். அவரைப் பொறுத்தமட்டில் கல்வி என்பது வெறும் நூல் பயில்வதன்று; அனைத்திலிருந்தும் விடுதலை தருவது. மூச்சுப் பயிற்சி உங்கள் உடலை விடுவிக்கிறது; உள்ளத்தை விடுவிக்கிறது; ஆகவே உயிரை விடுவிக்கிறது; என்றால் கற்பார் வேறொன்றும் கற்பரோ?

கல்வி உடையார் கழிந்துஓடிப் போகின்றார்;

பல்லி உடையார் பாம்புஅரிந்து உண்கின்றார்;

எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை;

வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.

(திருமந்திரம் 293)

சாத்திரம், சாத்திரம் என்று நூல்மரபை மட்டுமே கற்றுத் தேர்ந்தவர்கள், உண்மையை உணர மாட்டாமல், இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ போகின்றார்கள். இவர்கள் அப்படியிருக்க, வேறு சிலரோ பல்லியைப்போல இருக்கிறார்கள். பல்லி பற்றிக்கொள்ளும் இயல்பு உடையது. தலைகீழ்ப் பிடிமானம் என்றால்கூட விழுந்துவிடாமல் வலுவாகப் பற்றிக்கொள்ளும். பல்லி இவ்வாறு பற்றுவிடாமல் பற்றிக்கொள்ளக் காரணம் அதன் பாதங்களில் உள்ள மீநுண் இழைகள் (nano spatulas).

பல்லியைப்போலவே தங்கள் மனப்பற்றின் நுண் இழைகளால் இந்த உலகத்தை இறுகப் பற்றிக்கொண்டு விடமாட்டாதவர்கள், பாம்பைப்போலத் தங்களுக்குள் உறையும் ஆற்றலை எழுப்பும் வழி அறியமாட்டாமல், அந்த ஆற்றலைக் கிழடு தட்டவைத்துச் சாகடிக்கிறார்கள். அப்படியானால், செய்ய வேண்டியது என்ன? கற்க வேண்டியது எதை? எல்லி என்பது இருள் விலகாமல், மதியாகிய சந்திரன் மிதக்கும் நேரம்; காலை என்பது கதிராகிய சூரியன் எழும் நேரம். மதி என்பது இடநாடி; கதிர் என்பது பிங்கலைநாடி.

மதியிலும், கதிரிலும், இவை சுழித்துத் திருப்பும் சுழியிலும் கவனத்தைச் செலுத்தினால், வேதியலால் வேதித்து இறுக்கப்பட்ட மாழைபோல (உலோகம்) உடம்பு இறுகியும் மினுங்கியும் இருக்கும்.

பல்லியாக இருப்பது குற்றமில்லை. ஆனால் பற்றுவது எதை என்பதில் கவனம் வேண்டும். பரமனைப் பற்றுமின் என்று அடுத்த பாடல் ஒன்றிலேயே அடியெடுத்தும் கொடுக்கிறார் திருமூலர். பரமன் என்பவன் சரம் பிடித்தவன். கற்றவர் பேரின்பம் உற்றவர்.

(பேரின்பத்தைத் தொடர்வோம்…) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x