Last Updated : 28 Aug, 2014 12:00 AM

 

Published : 28 Aug 2014 12:00 AM
Last Updated : 28 Aug 2014 12:00 AM

வினை தீர்ப்பான் விநாயகன்

உயிர் நண்பனைப் போல வினைகளைக் களைபவன் விநாயகன் என்பதால்தான், இல்லம், சாலை, நடைபாதை என்று எங்கெங்கு காணினும் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

மனதில் எக்கணம் வேண்டுதல் தோன்றுகிறதோ அக்கணம் பார்வையைச் சுழற்றித் தேடினால் சுற்றுப்புறத்தில் படமாகவோ, சிலையாகவோ கண்ணில் பட்டுவிடுவார் விநாயகர்.

விநாயகர் எப்படித் தோன்றினார்?

பார்வதி தேவி சுனையொன்றில் தனிமையில் நீராட விரும்பினார். அப்போது அச்சுனைப் பகுதியில் யாரும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக தனக்குக் காவலாக ஒருவரை நியமிக்க எண்ணினார்.

தனது உடலில் பூசிய மஞ்சளைத் திரட்டி, ஓர் உருவத்தை உண்டாக்கினார். ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்துடன் தேவ உருவம் பெற்றிருந்த அந்தக் குழந்தை, அன்னையின் சக்தியைப் பெற்று மிகுந்த பலவானாக இருந்தது.

பார்வதியைக் காண சிவன் வந்தபோது, குழந்தை வழி விட மறுத்தது. இதர தேவர்கள் போரிடவே தொடங்கிவிட்டனர். ஆனாலும் சிவ பார்வதி அம்சமான அக்குழந்தையை அவர்களால் வெல்ல முடியவில்லை. புதிய பலத்துடன் இருக்கும் இக்குழந்தை அசுரனோ என்று எண்ணிய சிவனும், அதன் தலையைத் துண்டித்தார்.

இதனைக் கண்ட பார்வதி கதற, வடக்கே தலை வைத்துப் படுத்திருந்த யானையின் தலையைக் கொண்டுவந்து பொருத்தினார் சிவன். அக்குழந்தை பலவானாக இருந்ததால், தன் கணங்களுக்குத் தலைமை ஏற்கச் செய்தார். கணங்களின் அதிபதியே கணபதி.

சக்கரத்தைப் பறித்த விநாயகர்

கைலாயத்தில் இக்குழந்தையைக் காண வந்தார் பார்வதி தேவியின் சகோதரர் மகாவிஷ்ணு. அப்போது கைலாயத்தின் வெளி வாயிலின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்குத் தானும் விளையாட்டுக் காட்ட எண்ணித் தனது சக்கரத்தை அக்குழந்தையிடம் கொண்டு காட்டினார் தாய் மாமனான விஷ்ணு.

விநாயகரோ குழந்தைகளுக்கே உரிய வேகத்துடன் அதைப் பறித்துக் கொண்டுவிட்டார். குழந்தை கையில், சக்கரம் காயத்தை ஏற்படுத்திவிடப் போகிறதே என்று விளையாட்டுக் காட்டி அதைத் திரும்பப் பெற முயன்றாராம் விஷ்ணு. அதற்காகத் தனது தலையின் நெற்றிப் பகுதியில் கைகளால் குட்டிக் கொண்டாராம்.

கல கலவென்று சிரித்த குழந்தை சக்கரத்தை வாயில் போட்டுக்கொண்டுவிட்டது. பதறிய தாய் மாமன் மேலும் குழந்தையைச் சிரிக்க வைத்து, சக்கரத்தை உமிழச் செய்யும் முயற்சியாக, இரு காதுகளையும் இரு கைகளால் பிடித்துக்கொண்டு, உட்கார்ந்து எழுந்தாராம்.

இதனைக் கண்டு குழந்தை சிரிக்க, வாயில் இருந்த சக்கரம் துள்ளிக் கீழே விழுந்தது. அச்சக்கரத்தைக் கைப்பற்றிக் கொண்ட விஷ்ணுவும் யானை முகம் கொண்ட குழந்தையின் கன்னத்தை வலி நீக்கும் விதமாகத் தடவிக் கொடுத்தார். தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து வேண்டு வனவெல்லாம் அருளுவார் என்பதைச் சொல்லும் கதை இது.

விநாயகரின் திருநாமங்கள்

பல பெயர்களைக் கொண்ட விநாயகருக்கு, அந்த ஒவ்வொரு பெயருக்கும் கதைகள் உண்டு. இப்பெயர்களை உச்சரித்தலே மகா மந்திரமாகச் செயல்படும்.

உச்சிட்ட கணபதி, உத்தண்ட கணபதி, ஊர்த்துவ கணபதி, ஏகதந்த கணபதி, ஏகாட்சர கணபதி, ஏரம்ப கணபதி, சக்தி கணபதி, சங்கடஹர கணபதி, சிங்க கணபதி, சித்தி கணபதி, சிருஷ்டி கணபதி, தருண கணபதி, திரயாக்ஷர கணபதி, துண்டி கணபதி, துர்க்கா கணபதி, துவிமுக கணபதி, துவிஜ கணபதி, நிருத்த கணபதி, பக்தி கணபதி, பால கணபதி, மஹா கணபதி, மும்முக கணபதி, யோக கணபதி, ரணமோசன கணபதி, லட்சுமி கணபதி, வர கணபதி, விக்ன கணபதி, விஜய கணபதி, வீர கணபதி, ஹரித்திரா கணபதி, க்ஷிப்ர கணபதி, க்ஷிப்ரபிரசாத கணபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x