Last Updated : 21 Aug, 2014 10:00 AM

 

Published : 21 Aug 2014 10:00 AM
Last Updated : 21 Aug 2014 10:00 AM

சென்னையில் பவுத்தச் சுவடுகள்

இன்றைக்குச் சென்னையின் ஒரு பகுதியாகிவிட்ட பல்லாவரம் ஒரு காலத்தில் பல்லவ அரசர்கள் வாழ்ந்த பகுதி. பல்லவபுரம் என்பதுதான் இந்த ஊரின் பெயர். பல்லாவரம் என்று திரிந்துவிட்டது.

இன்றைக்குச் சென்னை யோடு கலந்துவிட்ட இந்த ஊரில் பல்லவர்கள் வாழ்ந்தபோது, அது சிறப்புடையதாக இருந்திருக்க வேண்டும். அதற்குக் காரணமும் இருக்கிறது. முதலாம் மகேந்திர வர்மன் இந்த ஊரில் கற்பாறையைக் குடைந்து அமைத்த குடைவரைக் கோயில் ஒன்று இருக்கிறது.

பல்லவ அரச குடும்பம் வாழ்ந்த ஊரில், புத்தர் கோயில் இருந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால், பல்லவ அரச குடும்பத்தில் ஒரு பிரிவினர் பவுத்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

பவுத்தரும் பிள்ளையாரும்: இந்த ஊருக்கு அருகேயுள்ள கணிக்கிலுப்பை என்ற ஊரில் புத்தர் சிலைகள் இருந்திருக்கின்றன. இந்த ஊரில் இருக்கும் பிள்ளையார் கோயில் பகுதியில் முன்பு புத்தர் கோயில் இருந்திருக்க வேண்டுமென்று பவுத்த ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை பிற்காலத்தில் பிள்ளையார் கோயில்களாக மாற்றப்பட்டதற்கு இந்த ஊரில் உள்ள கோயிலும் ஒரு சான்று என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஊர் மானியம்: அதேபோலச் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு பகுதியாகப் பூந்தமல்லி அருகே இருக்கும் மாங்காடு பகுதியில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. சுந்தரப் பாண்டியத் தேவர் (1251-64) என்ற அரசரின் காலத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு சாசனத்தில், இங்கிருந்த புத்தக் கோயிலுக்கு மாங்காடு கிராமம் மானியமாகக் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.

மாங்காட்டுக்கு அருகில் உள்ள பட்டு என்ற கிராமத்திலும் புத்தர் கோயில் அகற்றப்பட்டு, பிள்ளையார் கோயிலாக மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

காஞ்சியின் புகழ்: காஞ்சியில் இருந்த கச்சிக்கு நாயகர் கோயில் என்ற புத்தக் கோயிலுக்கு, பொன்னேரிக்கு அருகேயிருக்கும் நாவலூர் மானியமாக எழுதப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இந்து மதப் புனிதத் தலமாகக் கருதப்படும் காஞ்சிபுரம், ஒரு காலத்தில் பவுத்த காஞ்சி என்றே அழைக்கப்பட்டுள்ளது. கி.மு. 3-ம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தி கட்டிய ஒரு பவுத்த ஸ்தூபி காஞ்சியில் இருந்ததாக, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிக்கு வந்து சென்ற புகழ்பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங் எழுதியிருக்கிறார்.

இப்படிப் பழைய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இன்றைய சென்னை மாவட்டங்களில் உள்ள பல ஊர்களில் புத்தர் சிலைகளும் தர்மச் சக்கரங்களின் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x