Published : 01 Nov 2018 11:02 AM
Last Updated : 01 Nov 2018 11:02 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 54: பாகன் அறியட்டும் பன்னிரண்டு யானைகள்

ஒரு நல்ல யானைக்கு என்ன உயரம்? ஏழு முழம் என்றொரு கணக்கு. ஏழு முழம் என்பது ஏறத்தாழப் பத்தரை அடி. ஏழு முழ உயரமுள்ள யானை, பட்டத்து யானை ஆகவும் தகுதி உள்ளது.

தோழியர் தோள்மேல் அயர்ந்தாள்; அத் தோழியரும்

ஏழ்உயர் யானை எதிர்ஓடி...

(விக்கிரம சோழன் உலா, 653-54)

யானையின் மீதேறி விக்கிரம சோழன் உலா வர, ‘நீ உலா வரும் அழகில் எங்கள் தலைவி கிறுகிறுத்துப் போனாள், அவளுக்கும் அருளக்கூடாதா?’ என்று தோழிகள் அவன்முன் வந்து முறையிட்டதாக ஒட்டக்கூத்தர் பாடுகையில் அவன் ஏறி வந்த அரச யானையை ஏழு முழமுள்ள யானை என்று குறிக்கிறார்.

கைகேயி கேட்ட வரத்தால் பரதனுக்கு நாடு கொடுத்து, ராமனைக் காடு விடுத்துப் பிரிவாற்றாமல் செத்துப் போனான் தசரதன். மாமன் வீட்டுக்குப் போயிருந்த பரதன், நடந்தது ஏதும் தெரியாமல் திரும்பி வந்தான். ‘அப்பா எங்கே?’ என்று கைகேயியைக் கேட்டான். ‘செத்துப் போனான்; நீ வருத்தப்படாதே’ என்றாள் அவள். பரதன் நொந்தான்; கொதித்தான். ‘அப்பன் செத்துப் போனான்; அதற்காக வருத்தப்பட வேண்டாம் என்று காதில் கொள்ளி வைத்தாற்போலச் சொல்ல முடிந்த ஒரே அம்மை நீதான்’ என்று கைகேயியைச் சாடினான். பிறகு,

ஏழ்உயர் மதகளிற்று இறைவ, ஏகினை;

வாழிய கரியவன், வறியன் கைஎன,

பாழிஅம் புயத்துநின் பணியின் நீங்கலா

ஆழியை இனிஅவற்கு அளிக்க எண்ணியோ?

(கம்ப ராமாயணம், அயோத்தியா காண்டம், பள்ளிப்படைப் படலம், 55)

என்று தசரதனைப் பாடினான். ஏழு முழ உயரமுள்ள யானையின் தலைவா! ஏன் செத்துப் போனாய்? கறுப்பன் ராமன் இன்னும் வெறுங்கையனாக இருக்கிறான்; நாம் இருக்கும்வரை இந்த அரசு அவனுக்குக் கிடைக்காது; ஆகவே சாவோம்; ஆட்சியை, அதிகாரத்தை அவன் பெறட்டும் என்றா செத்தாய்?

ஏழ்உயர் யானை, ஏழ்உயர் மதகளிறு என்று ஒட்டக்கூத்தரும் கம்பரும் சொல்ல, பன்னிரண்டு ஆனை என்கிறார் திருமூலர்.

பன்னிரண்டு ஆனைக்குப் பகல்இரவு உள்ளது;

பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்;

பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்

பன்னிரண்டு ஆனைக்குப் பகல்இரவு இல்லையே. (திருமந்திரம் 577)

ஏழ்உயர் யானை என்றால் ஏழு முழம், அதாவது பத்தரை அடி; பன்னிரண்டு யானை என்றால் பன்னிரண்டு முழம், அதாவது பதினெட்டு அடி. அவ்வளவு உயரத்தில் ஒரு யானை இருக்க முடியுமா? இந்திய யானையின் உச்சகட்ட உயரமே ஏழரை முழம், அதாவது பதினொன்றரை அடிதான் என்றல்லவா கேள்வி? திருமூலர் பன்னிரண்டு என்கிறாரே என்றால், திருமூலர் குறிப்பது யானையும் அல்ல; பன்னிரண்டு என்பது முழமும் அல்ல.

பாகன் என்றால் உயிர்

யானை என்று திருமூலர் குறிப்பது மூச்சுக் காற்றை. கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் யானை என்றார். பன்னிரண்டு என்று திருமூலர் குறிப்பது விரற்கடையை. மூச்சின் நீளம் பன்னிரண்டு விரற்கடை என்று அளக்கிறார் திருமூலர். பாகன் என்றது உயிரை.

பன்னிரண்டு விரற்கடை அளவுள்ள மூச்சுக் காற்றென்னும் யானை பகலும் இரவுமாகக் கட்டுப்பாடில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. பாகனுக்கோ பன்னிரண்டு விரற்கடை யானையைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை; பன்னிரண்டு விரற்கடை யானையைப் பாகன் அறிந்துவிட்டால், பகல் இரவென்ற பேதமில்லாமல் யானையை மேய்க்கத் தொடங்கிவிடுவான். யானை வசத்துக்கு வந்துவிடும்.

மூச்சை விடுவோம்; யானைக்கு வருவோம்: ஒரு மணித்துளியில் ஒரு யானை விடும் மூச்சின் எண்ணிக்கையும் பன்னிரண்டு என்கிறார்கள் யானை அறிஞர்கள். அது மட்டுமல்லாது, யானையின் மூச்சு பகலில் ஓர் அளவாகவும் இரவில் ஓர் அளவாகவும் இருக்கும் என்று சொல்கிறார்கள். பகலில் ஒரு மணித் துளிக்குப் பன்னிரண்டு முறை மூச்சு விடும் யானை இரவில், படுத்திருக்கும் நிலையில், உடல் அமைப்பு காரணமாக, நான்கு மூச்சே விடும்.

ஆமை, யானை, நாய், மனிதன்

ஓர் உயிர், ஒரு மணித்துளியில் விடும் மூச்சுகளின் எண்ணிக்கை குறையக் குறைய வாழ்நாள் மிகும் என்றொரு கணக்கு. மணித்துளிக்கு நான்கு மூச்சுகளே விடும் ஆமை நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளும், நான்கு முதல் பன்னிரண்டு மூச்சுகள் விடும் யானை அறுபது முதல் தொண்ணூறு ஆண்டுகளும், இருபது முதல் முப்பது மூச்சுகள் விடும் நாய் பத்து முதல் இருபது ஆண்டுகளும் வாழ்கின்றன. மணித்துளிக்குப் பதினைந்து முதல் பதினெட்டு மூச்சுகள் விடும் மனிதன் எண்பத்தைந்து முதல் நூறு ஆண்டுகள் வாழ்கிறான்.

நம்மை நட்டம் செய்வன நான்கு என்கிறார் வள்ளலார். அவற்றை ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் என்று வகைப்படுத்துகிறார். இவற்றிலும் ஆகாரமும் மைதுனமும் முக்கியமானவை. அவற்றில் கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேகம் அதிசீக்கிரத்தில் போய்விடும். பின்பு முழுமை அடைவது நிறைவேறாது. முழுமை  அடைவதற்கு இந்த மானுட தேகமே தக்கது. வேறு தேகங்களால் முழுமை அடைவது அரிது.

ஆகவே எந்த விதத்திலாவது இந்தத் தேகம் நீடித்து இருக்குமாறு பாதுகாத்தல் வேண்டும் (உபதேசக் குறிப்புகள்). மேற்சொன்னவற்றில் அளவுக்கு மீறி ஈடுபடும்போது மூச்சு விரயமாகிறது. மூச்சு விரயமானால் தேகம் போகும். ஆகவே மூச்சுக் காற்று அதிகமாகச் செலவாகாமல் கவனத்தோடு பழகுதல் வேண்டும் என்கிறார். காற்றைப் பிடித்தால் கூற்றை உதைக்கலாம் என்னும் திருமூலர் கருத்தையே வள்ளலாரும் வலியுறுத்துகிறார்.

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்,

ஓடுவர், மீளுவர், பன்னிரண்டு அங்குலம்

நீடுவர், எண்விரல் கண்டிப்பர், நால்விரல்

கூடிக் கொளில்கோல அஞ்சுஎழுத்து ஆமே.

(திருமந்திரம் 576)

ஆடுவதற்கு ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஆடுவதற்காக இரண்டு ஆடல் அரசிகள் வந்தார்கள். மேடையில் ஓடி ஓடி ஆடினார்கள். ஆடுகின்ற வேகத்தில், முன்னே நகரும்போது பன்னிரண்டு அங்குலம் நகர்ந்து ஆடியவர்கள், பின்னே நகரும்போது வெறும் எட்டு அங்குலமே நகர்ந்து மீண்டார்கள். கணக்குப்படி நான்கு அங்குலத்தை விட்டுவிட்டார்கள்.

இப்படியே ஒவ்வொரு பின் நகர்விலும் நான்கு நான்கு அங்குலங்களை விட்டுவிட்டு முன் நகர்ந்து ஆடினார்கள் என்றால், மிக விரைவில் மேடையின் விளிம்புக்குப் போய்க் குப்புறக் கவிழ்ந்துவிடுவார்களே? பிறகு ஆடுவதற்கு ஆளில்லாமல் போய்விடுமே? ஆடுவதற்கு ஆளில்லை என்றால் போட்டு வைத்த மேடையினால் என்ன பயன்? மேடை போட்டவன் மேடையைக் கலைத்து எடுத்துக்கொண்டு போய்விட மாட்டானா? பிறகு வேறு மேடை, வேறு ஏற்பாடு, ஆட்டம்; சங்கடம் அல்லவா?

ஆடுவதற்காக அமைத்துவைத்த மேடை, உடல்; ஆட வந்த மங்கைகள் வலது நாசியிலும் இடது நாசியிலும் ஏறியும் இறங்கியும் ஆடுகின்ற மூச்சுக் காற்று; வெளியில் வரும்போது பன்னிரண்டு அங்குலம் வெளியேறும் காற்று, உள்ளே வரும்போது, பன்னிரண்டு அங்குலமாக உள்ளே வராமல், வெறும் எட்டு அங்குலமாக உள்ளே வருகிறது.

இழப்பு நான்கு அங்குலம். பன்னிரண்டை விட்டவன் பதினாறாக உள்ளிழுக்காவிட்டாலும் பன்னிரண்டையாவது உள்ளிழுத்துவிட வேண்டாமா? பங்கு முதலீட்டில் விற்றது மூன்று பங்கு; பெற்றது இரண்டு பங்கு; இழப்பு ஒரு பங்கு. இப்படி இழந்துகொண்டே இருந்தால் குன்ற வான்பொருள் தொலைத்துக் குன்றிப்போய்விட மாட்டோமா?

மூச்சுக்குச் சரம் என்றொரு பெயர். புறம்பே தேடி வரம் வேண்டுவதைக் காட்டிலும் உடம்பில் நாடிச் சரம் வேண்டுவது சிறந்ததில்லையா?

(உடம்பில் நாடுவோம்)
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x