Published : 15 Nov 2018 12:22 PM
Last Updated : 15 Nov 2018 12:22 PM
ஒரு கிழ அரசன் வேட்டையாடச் செல்லும்போது வழியில் இருந்த பாழ்மண்டபமொன்றில் ஒரு பெண் துறவியைப் பார்த்தான். வாரிசுகள் இல்லாத அந்த அரசனுக்கு அந்தப் பெண் துறவியைப் பார்த்ததும் அவரிடம் நாட்டை ஒப்படைக்கும் எண்ணம் வந்தது. மிகுந்த வேண்டுதலுக்குப் பின்னர் அந்தப் பெண் துறவி நாட்டின் அரசியாகச் சம்மதித்தார். தான் ராணியாகச் சம்மதித்தால் தனக்கென்று தனி அறை ஒன்று தனிச்சாவியுடன் தரவேண்டுமென்பதுதான் அவர் விதித்த ஒரே நிபந்தனை.
கிழ அரசனும் சம்மதித்தான். பெண் துறவி ராணியாக்கப்பட்டார். அரண்மனைக்கு வந்தபின்னரும் பெண் துறவியின் உடலிலும் முகத்திலும் இருந்த தேஜஸ் குறையவேயில்லை. நாளுக்கு நாள் அவரது காந்த ஈர்ப்பு கூடியபடி இருந்தது. அரசனுக்கோ ஒரே வியப்பு. ஒரு நாள் மறைவாக ராணியின் அறைக்குப் போய்ப் பார்க்க முடிவு செய்தான் கிழ அரசன்.
ராணி வழக்கம் போல, தன் அறைக்குத் திரும்பும்போது அரசன் பின்தொடர்ந்தான். ராணி தன் அறைக்கதவை உள்ளே தாழிட்டார். அரசன் முதல்முறையாகப் பார்த்த பாழ்மண்டபத்தில் அணிந்திருந்த சாக்குத்துணியால் செய்யப்பட்ட ஆடை தொங்கப்பட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்ற ராணி, தனது அரச உடையைக் களைந்து சாக்குத்துணியை அணிந்துகொண்டார். நகைகள் அனைத்தையும் துறந்தார். பின்னர் பத்மாசனத்தில் அமர்ந்து நெடுநேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
அரண்மனைப் பணியாளர்கள் ராணியின் அறையில் அரசன் பார்ப்பதற்கு ஏற்படுத்தியிருந்த துளையின் பக்கமாக அந்தத் துறவி திரும்பினார். அரசனோ திடுக்கிட்டார். “இங்கே நான் மட்டுமே இருக்கிறேன். ராணி ஆவதற்கு முன்னர் கடவுளை மட்டுமே நேசித்த அந்தப் பெண் மட்டுமே இருக்கிறாள்” என்றார். அரசன் நெஞ்சுருக அரண்மனைக்குத் திரும்பினான்.
அந்த ராணியின் பெயரோ யாருக்கும் ஞாபகத்தில் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT