Published : 04 Oct 2018 11:45 AM
Last Updated : 04 Oct 2018 11:45 AM
ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் திருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோப காரம் என்றால் சரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு சம்ஸ்காரம் என்று தோன்றலாம்.
“உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ண முடியாமலிருக் கிறது. செத்துப் போனபின் பிணத்துக்கு என்ன சேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ சம்பிரதாயம் என்று வந்துவிட்டதால், அதை விடுவதற்குப் பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிசிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘சம்ஸ்காரம்’ பண்ணுகிறேன் என்று இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் சம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்போட்டுக் கொள்ள வேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?” என்று கேட்கலாம்.ஜீவாத்மா என்ற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத சம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது சம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது. (சம்ஸ்காரம் என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம்.)வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹூதி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி [சிதைத் தீ] யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.
தேகம் என்னும் அற்புத இயந்திரம்‘தேகம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபட வேண்டும்’ என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால், இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேகம் என்பது ஒரு மஹா அற்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான காரியத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா – இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூடக் கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது.
பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம் செய்ய முடிகிறது. பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற காரியங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின் அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு – என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூக்ஷ்மமான கற்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது! பகவான் தந்திருக்கிற இந்த அற்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.கடவுளுக்கே திருப்பிக் கொடுக்கிறோம்எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த் தாலும் ப்ரேத சம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய சமயச் சடங்காக இருக்கிறது.செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பா விட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது?
அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body-ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தா னென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத் தான் வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டதிற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய சம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும்.
”அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்” என்ற எண்ணத்துடன் ஸம்ஸ்காரம் பண்ண வேண்டும்.‘உயிரோடு இருக்கிறவரையில் உபகாரம் பண்ண வேண்டியதுதான்; போன உயிரும் வேறு எங்கோ இருக்குமாதலால் அதற்கு ச்ராத்தாதிகள் பண்ண வேண்டியதுதான்; ஆனால் உயிர்போன உடலுக்கு எதற்கு ஸம்ஸ்காரம்?’ என்று முதலில் கேட்டுக்கொண்டோம். இப்போது அலசிப் பார்த்துக் கொண்டதிலோ பகவானின் பராமத்புத ஸ்ருஷ்டியான சரீரம் உயிரற்ற பிறகுங்கூட அதற்கான மரியாதையைப் பெற்று பகவானிடமே சேர்ப்பிக்கப்பட வேண்டும்; உடம்புக்குச் செய்கிற இந்த ஸம்ஸ்காரந்தான் முழுக்க நம் பொறுப்பில் இருப்பது; அதனால் இதைச் செய்யாவிட்டாலே நமக்குப் பெரிய தோஷம் என்று தெரிகிறது!
(தெய்வத்தின் குரல் மூன்றாம் பாகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT