Published : 25 Oct 2018 11:37 AM
Last Updated : 25 Oct 2018 11:37 AM
காலா! உனை நான்சிறு புல்என மதிக்கிறேன்; என்றன்
கால்அருகே வாடா! சற்றேஉனை மிதிக்கிறேன்!
எமனுக்கு அஞ்சாமை உரைத்தவர் பாரதியார் ஒருவர் மட்டுமே அல்லர்; பெரியாழ்வாரும் உரைக்கிறார்:
சித்திர குத்தன் எழுத்தால், தென்புலக் கோன்பொறி ஒற்றி,
வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி ஒளித்தார்;
முத்துத் திரைக்கடல் சேர்ப்பன், மூதறி வாளர் முதல்வன்,
பத்தர்க்கு அமுதன் அடியேன்; பண்டுஅன்று; பட்டினம் காப்பே.
(நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 444)
‘என்னுடைய பேரேட்டுக் கணக்கில் இன்னானுடைய பற்றுவரவு முடிந்து போயிற்று; அவனைத் தூக்குங்கள்’ என்று தான் எழுதிய ஓலையில், தென்புலத் தலைவனாகிய எமனின் ஏற்புக் கையெழுத்துப் பெற்று, அதிகார முத்திரை இட்டு, எமப் பணியாளர்களிடம் கொடுத்து அனுப்பினான் எமனின் கணக்கனாகிய சித்திரகுப்தன்.
ஓலை தாங்கி ஆளைத் தூக்க வந்த எமப் பணியாளர்கள், ஆள் யாரென்று தெரிந்ததும் அரண்டு, ஓலையைப் போட்டுவிட்டு ஓடி ஒளிந்தார்கள். யார் அந்த ஆள்? ஓர் அடியவன். யாருக்கு? முத்துத் திரைக் கடலைச் சேர்ந்து நிற்கும் பரதவனும் அறிவுள்ளவர்களின் முதல்வனும் பத்தர்களுக்குச் சாகாவரம் அளிக்கும் அமுதனும் ஆகிய நாராயணனின் அடியவன். அட மட எமப்பயல்களே!
நிலைமை பழைய மாதிரி இல்லை தம்பிகளே! நினைத்த மாத்திரத்தில் தூக்கிவிட முடியாது; இப்போது பெருமாளின் பார்வையில் பட்டினம் பாதுகாப்பாக இருக்கிறது என்று பாடுகிறார் பெரியாழ்வார்.
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்உயிர்ச் சாபம்;
நலியும் நரகமும் நைந்த; நமனுக்குஇங்கு யாதொன்றும் இல்லை;
கலியும் கெடும்;கண்டுகொள்மின்; கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்துஇசை பாடி ஆடி உழிதரக் கண்டோம்.
(நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 3352)
என்று திருவாய் மொழிகிறார் நம்மாழ்வார். பிறப்பு என்று ஒன்று எடுத்துவிட்டால் இறப்பு தவிர்க்க முடியாதது. பிறப்பும் இறப்பும் உயிருக்கு விதித்த சாபம். மகிழ வைக்கும் சுவர்க்கமும் வரும்; நலிய வைக்கும் நரகமும் வரும். பிறந்து பிறந்து இறக்கும் துன்பம் பிடித்து ஆட்டும். ஆனால், கடல்வண்ணக் கறுப்பனாகிய மாயோனின் அடியார்க்கு இறப்பென்னும் வல்லுயிர்ச் சாபம் கிடையாது; அது போயிற்று. நலிய வைக்கும் நரகமும் நைந்து போயிற்று;
உயிர் பிடிக்க வரும் எமனுக்கு இங்குப் பிடித்துச் செல்ல யாரும் இல்லை; அவனுக்கு இனி யாதொரு வேலையும் இல்லை; இறந்து இறந்து பிறக்கும் துன்பம் கெட்டு ஒழிந்தது; கண்டுகொண்டு, பொலிக பொலிக பொலிக.
ஒரே உடம்பில் இருந்துவிட்டால்?
பிறப்பினால் ஓர் உடம்புக்குள் புகும் உயிர், இறப்பினால் அந்த உடம்பிலிருந்து வெளியேறுகிறது. பின் வேறொரு பிறப்பு; வேறோர் உடம்பு; வேறோர் இறப்பு என்று பற்றித் தொடர்கிறது.
குத்தகை எடுத்துக் குடி புகுவார் குத்தகை முடிந்ததும் குடி நீங்கி, வேறொரு வீட்டைக் குத்தகை எடுத்துக் குடி புகுவதுபோல. அடிக்கடி குத்தகை மாற்றிக் குடி புகுவது களைக்கச் செய்கிறது, இல்லையா? குத்தகை வீடாக இருப்பதால்தானே குடி நீங்க வேண்டியிருக்கிறது? சொந்த வீடாகவே இருந்துவிட்டால் குடி நீங்கத் தேவையில்லையே என்று கணக்கிட்டுச் சொந்த வீடு வாங்கப் பாடுபடவில்லையா மக்கள்? அதைப் போலவே, பிறந்தும் இறந்தும் உடம்புகளை மாற்றிக்கொண்டே இருக்காமல், ஒரே உடம்பில் இருந்துவிட்டால்? செத்தால்தானே இன்னொரு உடம்பு? சாகாமலே இருந்துவிட்டால்?
சாகாமல் இருப்பது சாத்தியமா? மேலே சொன்ன பக்தர்கள், இறை அருள் இருந்தால் எமன் என்ன செய்துவிட முடியும் என்று இறைவனைச் சார்ந்து பேசுகிறார்கள். சித்தர்களோ தம்மைச் சார்ந்தே பேசுகிறார்கள். தேரையர் என்னும் சித்தர் பாடுகிறார்:
பால்உண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம்;
பகல்புணரோம்; பகல்துயிலோம்; பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்;
இரண்டுஅடக்கோம்; ஒன்றைவிடோம்; இடதுகையில் படுப்போம்;
மூலம்சேர் கறிநுகரோம்; மூத்ததயிர் உண்போம்;
முதல்நாளில் சமைத்தகறி அமுதுஎனினும் அருந்தோம்;
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்;
நமனார்க்குஇங்கு ஏதுகவை நாம்இருக்கும் இடத்தே?
பால் அருந்துவோம்; எண்ணெய்க் குளியல் என்றால் வெந்நீரில் குளிப்போம்; பகலில் பெண் உறவு கொள்ளவும் மாட்டோம்; உறங்கவும் மாட்டோம்; பெண்களில் மூப்பையும், வெயிலில் இளமையையும் விரும்ப மாட்டோம்; மலம், சிறுநீர் அடக்க மாட்டோம்; இடதுபுறம் ஒருக்களித்துப் படுப்போம்; மூலநோய் தூண்டும் கறிகளை உண்ண மாட்டோம்; புளித்த தயிர் உண்போம்; அமுதம்போலச் சுவைத்தாலும் முதல்நாள் சமைத்த கறியை அருந்த மாட்டோம்; உலகமே கிடைத்தாலும் பசிக்காமல் உண்ண மாட்டோம்; இவ்வாறு செய்தால் நாம் இருக்கும் இடத்தில் நமனார்க்கு என்ன வேலை?
ஆறுதிங்கட்கு ஒருதடவை வமனமருந்து அயில்வோம்;
அடர்நான்கு மதிக்குஒருகால் பேதிஉரை நுகர்வோம்;
தேறுமதி ஒன்றரைக்குஓர் தரம்நசியம் பெறுவோம்;
திங்கள்அரைக்கு இரண்டுதரம் சவரவிருப்பு உறுவோம்;
வீறுசதுர் நாட்குஒருகால் நெய்முழுக்கைத் தவிரோம்;
விழிகளுக்குஅஞ் சனம்மூன்று நாட்குஒருகால் இடுவோம்;
நாறுகந்தம் புட்பம்இவை நடுநிசியில் முகரோம்;
நமனார்க்குஇங்கு ஏதுகவை நாம்இருக்கும் இடத்தே?
(தேரையர், பிணி அணுகா விதி)
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்திக்கு மருந்தெடுப்போம்; நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்தெடுப்போம்; ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறை மூக்குக்கு மருந்து உறிஞ்சுவோம்; வாரத்துக்கு ஒருமுறை மழித்துக்கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்; மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இடுவோம்; நறுமணப் பொருள்களையும் பூக்களையும் நள்ளிரவில் முகர மாட்டோம். இவ்வாறு செய்தால் நாம் இருக்கும் இடத்தில் நமனார்க்கு என்ன வேலை?
கூற்றை உதைக்கும் வழி
எமனாரை வெல்ல, உணவையும் கடைப்பிடிகளையும் ஒழுங்கு செய்துகொள்க என்று தேரையர் சொல்ல, காற்றைப் பிடிக்கச் சொல்கிறார் திருமூலர்:
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்குஅறி வார் இல்லை;
காற்றைப் பிடிக்கும் கணக்குஅறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறிஅது ஆமே.
(திருமந்திரம் 571)
மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் அளவையும், உள்நிறுத்தும் அளவையும், வெளிவிடும் அளவையும் கணக்கிட்டு அறியத் தெரியவில்லை. கணக்கறிந்து காற்றைப் பிடிக்கக் கற்றுக்கொண்டால் வாழ்நாள் நீடிக்கும்; எமன் வரும்போது எட்டி உதைக்கலாம்.
வண்டி வைத்திருக்கிறவர்கள் வண்டிக்குக் கல்லெண்ணெய் ஊற்றும்போது உருளைக்குக் காற்றும் பிடிப்பார்கள். குறைவாகக் காற்றுப் பிடித்தால் உருளை அமுங்கிச் சாலையில் உராய்ந்து வேகம் தடுக்கும்; மிகுதியாகக் காற்றுப் பிடித்தால் உருளை சாலையில் மேவாது குதிக்கும்; காற்றைப்
பிடிக்க அளவுண்டு; அளவு அறிந்து ஆற்றுக.
(இறைமணம் நாடலாம்)கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT