Last Updated : 25 Oct, 2018 11:36 AM

 

Published : 25 Oct 2018 11:36 AM
Last Updated : 25 Oct 2018 11:36 AM

நபிகள் வாழ்வில்: மரணமில்லாத நித்திய ஜீவன்

“தொழுகை.. தொழுகை.. தொழுகை.. பணியாட்கள்… பணியாட்கள்.. பணியாட்கள்.. பெண்கள்.. பெண்கள்.. பெண்கள்..” இந்த முணு முணுப்பினூடே...

நேரம் செல்லச் செல்ல கனக்க ஆரம்பித்தது அந்தப் பொன்னுடல்.

மூச்சுவிட மிகவும் சிரமமான அந்நிலையிலும், தொழுகையை அதற்குரிய பேணுதலுடன் நிறைவேற்றும்படியும், பணியாட்களின் உரிமைகளை நிறைவேற்றும்படியும், பெண்ணுரிமைகளை அளித்து பெண்ணினத்தைப் போற்றும்படியும் வார்த்தைகள் உதிர்ந்தன.

கடைசியான அந்தத் தருணம் வரவும் செய்தது.

“உயரிய தோழனான இறைவனிடமே நான் மீள்கிறேன்!” என்று மும்முறை அசைந்த அதரங்கள் அதன்பின் அசையாமல் மௌனமாயின.

பேரருள் சுமந்துவந்த கண்கள் காரிருளில் கரைந்தன.

இவ்வளவு நேரமாக தமது அருமைக் கணவரும், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரும், இறைவனின் திருத்தூதருமான நபிகளாரை தமது மடியில் சுமந்திருந்த அன்னை ஆயிஷாவின் விழிகள் அருவியாயின. அந்த பேரிழப்பைத் தாங்க முடியாமல் விம்மல் வெடித்துச் சிதறியது.

நொடியில், இறைவனின் திருத்தூதர் காலமான செய்தி மதீனா பெருநகரெங்கும் எரிதழலாய் பற்றிப் படர்ந்தது.

நபிகள் காலமான தகவல் நபித்தோழர் அபுபக்கருக்கும் எட்டுகிறது. அவர், அதை உறுதிப்படுத்திக் கொள்ள நேராகத் தனது அருமை மகள் ஆயிஷாவின் இல்லத்தை நோக்கி விரைந்தார். நபிகளாரின் பொன் முகத்தை இமைக்காமல் நோக்கினார். இறைத்தூதரின் வரலாறு நெடுக நிறைந்திருந்த சம்பவங்கள் எல்லாம் அவர் மனதில் தோன்றி.. தோன்றி மறையலாயின. அந்த பேரிழப்பை எப்படி உள்வாங்குவதென்று ஒரு கணம் தடுமாறினார்.

“உயிருடனிருந்தபோது பூரண நிலவாய் தகதகத்தது போலவே, இப்போதும் நான் உங்களைக் காண்கிறேன் எனதருமைத் தோழரே! இறைவனின் திருத்தூதரே, “தாங்கள் மரணமுற்றது உண்மைதான்..!” – என்று கனத்த இதயத்துடன் கூறியவாறு நபிகளாரின் நெற்றியில் முத்தமிட்டார். துணியால் நபிகளாரின் திருமுகத்தைப் போர்த்திவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

வீட்டுக்கு வெளியே தமது தோழர் உமர், நபிகளாரின் இறப்புச் செய்தியைத் தாங்க இயலாமல் வலியோடு நடந்து கொண்டிருப்பதைக் கண்டார். அவரைச் சமாதானப்படுத்தி அமர வைத்தார். பிறகு அங்கு கூடியிருந்த மக்களிடம் சொன்னார்:

“தோழர், தோழியரே! அருமை சகோதர, சகோதரிகளே! நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்; இறைவனின் திருத்தூதரை வணங்குபவர்கள் உங்களில் யாராவது இருந்தால் அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நபிகளார் இறந்துவிட்டார். மாறாக, இறைவனை வணங்குபவர்கள் இருந்தால் அவர்கள் அறிந்து கொள்ளட்டும். இறைவன் பிறப்பு, இறப்பு அற்றவன். அவன் மரணமில்லா நித்திய ஜீவன்..!”

 இந்தப் பிரகடனத்துக்குப் பின் நபித்தோழர் அபுபக்கர் தொடர்ந்து உரையாற்றினார். மக்களை ஆற்றுப்படுத்தினார்.

நபித்தோழர் அபூபக்கரின் இந்தப் பிரகடனத்தைக் கேட்டு நபித்தோழர் உமர் வாளை வீசி எறிந்து அழுது புலம்பலானார்.

மதீனா பெருநகர் முழுவதும் கண்ணீர் சூழ்ந்து கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x