Published : 07 Aug 2014 10:00 AM
Last Updated : 07 Aug 2014 10:00 AM
ஒரு காலத்தில் துறவி ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் மிகுந்த நற்பண்புகளைக் கொண்டவர். கடவுளின் குணங்களை எல்லாம் ஒருசேரக் கொண்ட மனிதனாக இவன் இருக்கிறானே என்று தேவர்களே ஆச்சரியம் கொண்டனர்.
ஆனால் துறவிக்கோ, தான் நற்பண்புகள் கொண்டவன் என்றுகூடத் தெரியாது. நட்சத்திரங்கள் ஒளிவிடுவதைப் போல, பூக்கள் நறுமணம் பரப்புவதைப் போல அவர் இயல்பாக இருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் கொடுத்தார், மன்னித்தார். அவற்றைத் தவிர வேறு எதையுமே அவர் செய்யவில்லை. ஆனால் கொடுப்பது குறித்தோ, மன்னிப்பது குறித்தோ அவர் உதடுகள் உச்சரித்ததே இல்லை.
அவரைப் பார்த்து வியந்த தேவர்கள், கடவுளிடம் சென்று, அந்தத் துறவிக்கு அற்புதம் நிகழ்த்தும் வரம் தரவேண்டும் என்று பரிந்துரைத்தனர். என்ன வரம் வேண்டும் என்று துறவியிடம் கேட்டுவரக் கடவுள் உத்தரவிட்டார்.
தேவர்கள் பூமிக்கு வந்து அந்தத் துறவியிடம், “நோயுற்றவர்களைத் தொட்டவுடன் குணப்படுத்தும் வரம் வேண்டுமா?” என்று கேட்டனர்.
“ நான் கடவுள் இல்லையே” என்றார் துறவி.
“பாவிகளைத் திருத்தி, நல்ல ஆன்மாக்களாக மாற்ற விரும்பு கிறீர்களா?” என்று தேவர்கள் கேட்டனர்.
“ அது தேவர்களின் வேலை” என்று கூறி மறுத்துவிட்டார் துறவி.
“ பொறுமைக்கு உதாரண புருஷராக மாறி, உங்கள் நற்பண்புகளால் மனிதர்களை வென்று, கடவுளாக மாற விருப்பமா” என்று கேட்டனர்.
“ என்னால் மனிதர்கள் கவரப்படுவாரானால், அவர்கள் கடவுளை மறந்துவிடுவார்களே. அதனால் வேண்டாம்” என்றார்.
பொறுமையிழந்த தேவர்கள், துறவியிடம், “ஒரு வரமாவது உங்களுக்கு நாங்கள் கொடுத்துதான் ஆக வேண்டும். தயவு செய்து ஒரு வரம் கேளுங்கள்” என்றனர்.
தேவர்களின் கோரிக்கையை மறுக்க முடியாத அத்துறவி ஒரு வரத்தைக் கேட்டார். “யாரும் அறியாமல், நான்கூட அறியாமல் பிறருக்கு நன்மை புரியும் வரம் வேண்டும்” என்றார்.
தேவர்கள் அனைவரும் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். துறவி எழுந்து நடக்கும்போதெல்லாம் அவர் நிழல் படியும் இடங்களெல்லாம் நலம் அடையும் வரம் அளிக்கப்பட்டது. அவர் நிழல்பட்ட நோயாளிகள் குணமடைவார்கள். தீராத வலிகள் நீங்கும். துயரம் எல்லாம் சந்தோஷமாக மாறும்.
துறவி சென்ற இடத்தில் எல்லாம் தரிசாக இருந்த நிலங்கள் பசுமையாயின. வாடிய செடிகள் பூத்துக் குலுங்கின. தூர்ந்த கிணறுகள் நீரால் நிரம்பின. சோர்வுற்ற மனிதர்கள் மகிழ்ச்சியாகினர்.
துறவி சென்ற இடமெல்லாம் நட்சத்திரத்தைப் போல இயல்பாக ஒளிர்ந்தார். பூக்களைப் போல இயல்பாக மணம் வீசினார். ஆனால் அதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லை. அவரது பணிவைக் கண்டு மக்கள் வியந்தனர். அமைதியாக அவரைப் பின்தொடர்ந்தனர். அவரிடம் யாரும் அவரது அற்புதங்கள் குறித்துப் பேசவேயில்லை. விரைவில் அந்தத் துறவியின் பெயரையும் மறந்தே போயினர். அவர்களுக்கு அவர் ‘புனித நிழல்’ ஆக இருந்தார்.
ஒரு மனிதனாகச் செய்யக்கூடிய மகத்தான புரட்சி என்பது இந்தப் புனித நிழல் ஆவதுதான். கடவுளின் நிழல். மனிதன் தனது மையமாக வைத்திருக்கும் சுயத்தை அகற்றி, கடவுளை அங்கே வைக்க வேண்டும். அப்போதுதான் மனிதர்களால் கடவுளின் நிழலாக வாழ முடியும்.
நான் என்ற மையத்தைத் துறக்கும்போது அகந்தையின் அடிப்படையில் யோசிக்க முடியாமல் போய்விடும். ‘நான்’ என்ற வார்த்தையையே உபயோகிக்க முடியாது. எதுவுமே உங்களுக்குச் சொந்தமானதல்ல. நீங்கள் கடவுளுக்குச் சொந்தம். நீங்கள் ஒரு புனித நிழலாக மாறிவிடுகிறீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT