Published : 18 Oct 2018 07:40 PM
Last Updated : 18 Oct 2018 07:40 PM
புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் உண்டு. ஒரு காலத்தில் அந்தக் கோயிலின் மேற்புறம் குளம் ஒன்று இருந்ததாகவும், கடற்கரை ஓரம் என்பதால் கொஞ்சம் மணலடித்துக் கிடந்ததாகவும், ஆகவே அது மணல் குளம் என்று அழைக்கப்பட்டதாகவும், அதன் கரையில் உட்கார்ந்திருந்த விநாயகர் மணற்குள விநாயகராகி, மணக்குள விநாயகர் ஆகிவிட்டதாகவும் செய்தி.
குளக்கரைகள்தோறும் பிள்ளையார் இருப்பார். ஏன்? எளிய கதை ஒன்று சொல்லுவார்கள்: பிள்ளையாருக்குப் பெண் பார்க்கத் தொடங்கியபோது, தாயைப்போல் ஒரு பெண் வேண்டும் என்று பெண் தேடக் குளத்தங்கரையில் வந்து உட்கார்ந்து கொண்டார் பிள்ளையார். தாயைப்போல ஒரு பெண் கிடைக்கவே இல்லை.
நீர்த் துறைகளான ஆற்றிலும் குளத்திலும் கிணற்றிலும் திருமணமாகாத பிரம்மச்சாரியான பிள்ளையார் காலங்காலமாக உட்கார்ந்திருக்கிறார்; அந்த நீர்த் துறைகளுக்கு நீராடவும் நீர் சேந்தவும் வரும் பெண்கள் பிரம்மச்சாரிப் பிள்ளையாரை, எந்த விதிவிலக்குமின்றி, எல்லாக் காலங்களிலும் தொழுதுகொண்டே இருக்கிறார்கள்.
குளக்கரைகள்தோறும் பிள்ளையார்கள் இருப்பதற்குக் காரணம் இதுவும் ஆகலாம்: குளம் என்பது ஒட்டுமொத்த ஊரும் உண்பதற்காக நீர் தொகுக்கும் நீர்நிலை; ஊருணி. ஊர்ப் பொதுவாகிய ஊருணி பாதுகாக்கப்பட வேண்டியது.
ஊருணியை யாரும் களவாண்டுவிடாமல் இருக்கக் காவலுக்குப் பிள்ளையாரை வைத்திருக்கலாம். பிள்ளையார் வழிபாட்டுக்காகவேனும் குளம் பாதுகாக்கப்பட்டுவிடும் என்பது கருத்தாக இருக்கலாம். இப்போதோ பிள்ளையார் குளக்கரைகளை விட்டுக் கோயிலுக்குக் குடி போய்விட, பிள்ளையார் குளங்கள் களவாடப்பட்டுப் பிளாட்டுகள் ஆகிவிட்டன.
மனக்குளத்துக்குக் காவல்
மணக்குளத்தை ‘மனக் குளமாக’ வைத்துக்கொண்டால் என்ன? மணக்குளத்துக்கு விநாயகரைக் காவல் அமர்த்தியதுபோலவே, கண்காணிப்புக்கும் காவலுக்கும் ஆளில்லாமல் பாழ்பட்டுக் கிடக்கிற மனக் குளத்துக்கும் விநாயகரைக் காவல் அமர்த்தினால் என்ன? மனந்தானே எல்லாச் சிக்கல்களையும் உருவாக்குகிறது?
புறத்தில் உள்ளவைதாம் எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம்; அவைதாம் நம்மை மயக்குகின்றன என்று பொதுவாகச் சொன்னாலும், அவற்றுக்கு இடம் கொடுத்து நம்மை மயக்கிச் சிக்கலுக்கு உள்ளாக்குவது நம்முடைய மனம்தான். பல்பொருள் அங்காடிகளில் பலவற்றையும் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ‘வாங்கு, வாங்கு’ என்று அவையா நம் கையைப் பிடித்து இழுத்து நம்மை மயக்குகின்றன? அவை சும்மா தம்மைக் காட்டி நிற்கின்றன.
மனம்தான் அவற்றில் நம்மை ஈடுபடுத்தி, மயக்கி, அது நமக்குத் தேவையே இல்லையென்றாலும், அதைப்போலவே நம்மிடமே வேறு ஒன்று இருந்தாலும், ‘இதையும் வாங்கு’ என்று அவற்றை வாங்கத் தூண்டுகிறது. மனத்தின் கொட்டம் அடங்கிவிட்டால், மனம் மாய்ந்துவிட்டால், பிறகு நம்மைக் கிளர வைப்பதும் பதற வைப்பதும் ஏதொன்றும் இல்லை.
சினம்இறக்கக் கற்றாலும்
சித்திஎல்லாம் பெற்றாலும்
மனம்இறக்கக் கல்லார்க்கு
வாய்ஏன் பராபரமே?
(தாயுமானவர் பாடல்கள், பராபரக்கண்ணி, 169)
நான் துறவி; யோகி; ஞானி; சினத்தைச் சாகடித்துவிட்டேன் என்கிறார்கள். அட்டமா சித்திகளும் எனக்கு வாய்த்திருக்கிறது; எதை வேண்டுமானாலும் செய்வேன் என்கிறார்கள். மனத்தையும் மனத்தினால் வரும் மயக்கத்தையும் சாகடிக்க வழியில்லாத இவர்களுக்குக் காதுவரை கிழிகின்ற வாய் எதற்கு என்று கேலி பேசுகிறார் தாயுமானவர். உயிர் சிறக்கவேண்டுமானால் மனம் இறக்கவேண்டும்.
மனம்அது செம்மை ஆனால்
மந்திரம் செபிக்க வேண்டா;
மனம்அது செம்மை ஆனால்
வாயுவை உயர்த்த வேண்டா;
மனம்அது செம்மை ஆனால்
வாசியை நிறுத்த வேண்டா;
மனம்அது செம்மை ஆனால்
மந்திரம் செம்மை ஆமே.
(அகத்தியர் ஞானம் 2:1)
மனச் செம்மைதான் மையம். மனம் செம்மையாகிவிடுமானால், மந்திரம் செபிக்க வேண்டாம்; வாயுவைக் கிளப்ப வேண்டாம்; மூச்சைப் பிடிக்க வேண்டாம். சரிதான். ஆனால் மனத்தைப் பிடிக்கவேண்டுமானால் என்ன செய்ய? மனத்தைப் பிடிக்க வேண்டுமானால், முதலில் அடம் பிடிக்க வேண்டும்.
வசப்படுத்துவது ஹடயோகம்
அதென்ன அடம் பிடித்தல்? இடறாமல் தளராமல் இறுக்கமாகப் பிடித்த பிடியில் நிற்பது அடம் பிடித்தல். பாத்திரத்தில் பிடித்த பிடி விடாமல் அப்பிக்கொண்டிருக்கும் கரி அட்டக் கரி. கொஞ்சம்கூட வெளுக்காத கடும்பிடிக் கறுப்பு அட்டக் கறுப்பு. கீழ்நோக்கி நீளும் காலை அடமாகப் பிடித்து இழுத்துக் குறுக்காக மடக்கி மடிமேலே போட்டுக்கொள்வது அட்டணைக் கால்.
உடம்பு சொல்வதை நாம் கேட்காமல் நாம் சொல்வதை உடம்பு கேட்கும்படி உடம்பைச் சமைப்பது அடம் பிடித்தல். இது யோகத்தின் முன்கட்டுகளில் ஒன்றான ஹடயோகம். விசையுறு பந்தினைப்போல் வேண்டியபடி உடம்பினை வசப்படுத்தி வைத்துக்கொள்வது ஹடயோகம்.
உள்ளத்தைப் பிடிக்க வழி கேட்டால் உடம்பைப் பிடிக்கவா வழி சொல்வார்கள்? உடம்பையே பிடிக்காமல் எவ்வாறு உள்ளத்தைப் பிடிக்க? எதைப் பிடிப்பதாக இருந்தாலும் அதைப் பிடிப்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் கருவி உடம்புதான். உடம்பை ஆளாமல் உள்ளத்தை ஆள முடியாது. உடல் உள்ளத்தைக் குலைக்கும்; உள்ளம் உடலைக் குலைக்கும். இரண்டும் சேர்ந்து உயிரை அலைக்கும். எனவே உடம்பைக் கட்டுவது உள்ளம் கட்டும் வழி.
அடம் பிடித்து உடம்பைக் கட்டுதல் என்பது உடம்பைத் தண்டிப்பது அன்று; உடம்பில் உறங்கிக் கிடக்கும் ஆற்றல்களைத் தட்டுதல். தட்டியெழுப்பி, அவற்றை ஒன்றோடொன்று இசைவித்து, உடம்பை வளர்த்து உயிர் வளர்த்தல்.
கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாள்கோத்து
நட்டம் இருக்க நமன்இல்லை தானே.
(திருமந்திரம் 799)
கால்கள் தொய்ந்து கழன்று கீழே விழுந்துவிடாமல் நன்றாகக் கட்டி, அடம் செய்து அட்டணைக்காலிட்டு அமர்க. காற்றை அடைத்தும் ஊதியும் உடம்பில் சூட்டைக் கிளப்புக; உறங்கிக் கிடக்கும் ஆற்றல் எழுப்புக. எழும்பிய ஆற்றல் உடம்பெல்லாம் பரவ, வேண்டியபோது வாரிக்கொள்ள வகை செய்து உள்ளேயே தேக்குக. ஹடயோகம் செய்து நட்டமே நிற்பார்க்கு அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
பூவினில் கந்தம் பொருந்தி வாறுபோல்
சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது;
ஓவியம்போல உணர்ந்துஅறி வாளர்க்கு
நாவி அணைந்த நடுதறி ஆமே.
(திருமந்திரம் 1459)
நட்டமே நிற்பார்க்குக் கிடைக்கும் பலன் என்ன? சீவனுக்குள்ளே சிவமணம் பூப்பதுதான். இவ்வளவு காலம் இல்லாத சிவமணம் திடீரென்று எங்கிருந்து வந்தது? மொட்டவிழாத பூவாக இருந்தவரை வெளிப்படாத பூமணம், மொட்டவிழ்ந்து பூக்கும்போது வெளிப்படுகிறதில்லையா? மனம்போன போக்கில் திரிந்தபோது வெளிப்படாமல் இருந்த சிவமணம், அடம் செய்து, உடம்பறிந்து, உள்ளம் அறிந்து, உயிர் அறிந்த நிலையில், தானும் பூத்துத் தன்னை அறிவிக்கிறது.
நாவி என்பது புனுகுப்பூனை. அது, இனப்பெருக்கத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையில், புனுகு என்கிற வாசனைப் பிசினைச் சுரக்கும். புனுகைப் பெறுவதற்காகப் புனுகுப்பூனையை ஒரு நடுதறியில் கட்டிவைத்து வளர்ப்பார்கள்.
புனுகுக்காகப் பூனையைக் கட்டியவர்கள் அறிவோடு புனுகைத்தான் எடுக்க வேண்டுமே தவிர, மடத்தனமாகப் பூனையின் மலத்தைப் புனுகென்று கருதி எடுக்கக்கூடாதில்லையா? ஹடயோகம் பயில்கிறவர்களும் பயில்விக்கிறவர்களும், அதை உயிர் வளர்க்கப் பயன்படுத்துவார்களேயானால் அது புனுகு; பொருள் செய்யப் பயன்படுத்துவார்களேயானால் அது மலம். மனம் செம்மையாகவில்லை என்று பொருள். அவமணம் விடுத்துச் சிவமணம் தேடுக.
(இறைமணம் நாடலாம்)கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT