Published : 04 Oct 2018 10:50 AM
Last Updated : 04 Oct 2018 10:50 AM
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு உலகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் காந்தியைப் பற்றி லட்சக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இருந்தாலும் இந்தக் கணத்திலும் உலகின் பல்வேறு இடங்களில் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் பத்திரிகையாளர்களும் காந்தியைப் பற்றி எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள். காந்தியையும் அவரது கொள்கைகளையும் மற்றவர்களின் பார்வையில் படிப்பது எந்த அளவுக்குச் சுவாரசியமானதோ அதே அளவுக்கு அவரின் பார்வையில் அவரது சுயசரிதையில் படிப்பதும் சுவாரசியமானதே.
இருபதாம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மிகப் புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகம் ‘சத்திய சோதனை’ (An Autobiography: The Story of My Experiments with Truth). குஜராத்தி மொழியில் நவஜீவன் இதழில் 1925-ம்
ஆண்டிலிருந்து 1929-ம் ஆண்டு வரை வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் சத்திய சோதனை. அதற்குப் பிறகு, மஹாதேவ் தேசாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அந்தக் கட்டுரைகள் ‘யங் இந்தியா’ இதழில் வெளியாயின. காந்தி பிறந்த 1869-ம்
ஆண்டிலிருந்து 1921-ம் ஆண்டு வரையிலான அவரது வாழ்க்கைக் கதையை இந்தப் புத்தகம் ஐந்து பகுதிகளாக 105 கட்டுரைகளில் விளக்குகிறது.
வாழ்வின் சோதனைகள்
காந்தி தன் சுயசரிதையில் பெரும்பாலான பகுதியைத் தன் இளமைப் பருவத்தை விளக்குவதற்கு ஒதுக்கியிருக்கிறார். காந்தி என்ற ஆளுமை எப்படி உருவானார் என்பதற்கான பதில்கள் இந்தப் பகுதிகளில் அடங்கியிருக்கின்றன. சுயசரிதையின் கடைசிப் பகுதியில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக 21 ஆண்டுகள் சத்தியாகிரக முறையில் போராடியதைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சைவ உணவுமுறை, புலனடக்கம், அகிம்சை, எளிமையான வாழ்க்கைமுறை ஆகிய அம்சங்களைப் பின்பற்றியபோது தான் எதிர்கொண்ட சோதனைகளை இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் காந்தி. வாழ்வின் உண்மை, இறைவன் என்ற இரண்டு அடிப்படைக் கொள்கைகளைப் பற்றிய அவரது பார்வையையும் இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் அவர். வாழ்வில் ஆன்மிக அனுபவத்தை உணர விரும்புபவர்கள் உண்மையுடன் பயணம் செய்ய வேண்டும் என்னும் கருத்தைத் தன் வாழ்க்கையின் வழியாக முன்வைக்கிறார் அவர்.
உண்மைக்கான தேடல்
வாழ்வின் உண்மைக்கான தேடல்தான் தனக்கு அகிம்சை, சத்தியாகிரகம், துறவு ஆகிய அம்சங்களின்மீது நம்பிக்கை ஏற்படுத்தியாகச் சொல்கிறார் அவர். தன் வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் அகிம்சையையும் சத்தியாகிரகத்தையும் அவர் பின்பற்றியிருக்கிறார். வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை அடைவதற்காக சக உயிர்களுக்கு ஆபத்து விளைவிப்பதையோ அவற்றைத் துன்புறுத்துவதையோ எந்தக் காரணம்கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அவர் அகிம்சைக் கொள்கையாக வலியுறுத்துகிறார். சக மனிதனைத் தாக்குவது என்பது நம்மை நாமே தாக்கிக்கொள்வதுபோன்றதுதான், ஏனென்றால், நாம் அனைவருமே படைத்தவரின் பிரதிநிதிகள் தாம் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார். அகிம்சையின் புரிதலின் அடிப்படையில்தான் சத்தியாகிரகக் கொள்கையையும் அவர் கட்டமைக்கிறார். உணர்வுகளால் தூண்டப்படும் சாமானிய போராட்டத்தைப் போன்று அல்லாமல் இந்தச் சத்தியாகிரகப் போராட்டம் பற்றற்ற பிடிவாதத்திலிருந்து தனக்கான வலிமையைப் பெறுகிறது. காந்தியின் இந்தப் போராட்ட வடிவம், இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா, அமெரிக்கத் தலைவர் மார்டின் லூதர்கிங் ஜூனியர் ஆகியோருக்கும் வழிகாட்டியது.
ஆன்மிகத் தாக்கங்கள்
பகவத் கீதை, வேதாகமத்தின் புதிய ஏற்பாடு, குரான் எனப் பல்வேறு மதங்கள் சார்ந்த நூல்களையும் அவர் ஆரம்ப காலத்திலிருந்தே வாசித்துப் புரிந்துகொண்டார். மதங்களின் உண்மையை அறிந்துகொள்வதில் தனக்கிருந்த தேடல் பற்றி அவர் சுயசரிதையின் தொடக்க அத்தியாயங்களில் விளக்குகிறார். ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் ‘கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறது’ (The Kingdom of God is Within You), ஆங்கில எழுத்தாளர் ஜான் ரஸ்கினின் ‘கடையேனுக்கும் கடைத்தேற்றம்’ (Unto This Last) ஆகிய புத்தகங்கள் காந்தியின் ஆன்மிகப் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியவை. அனைத்து மதப் பாரம்பரியங்களும் ஒரே கடவுளின் வெளிப்பாடுகள்தாம் என்ற கருத்தை வலியுறுத்திய காந்தி, இந்தியாவில் மதச்சார்பின்மையை நிலைநாட்டுவதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்தார்.
நாட்டில் தற்போது வளர்ந்துவரும் தனிமனித மதச் சகிப்பின்மை போக்கை எதிர்கொள்வதற்கு காந்தியின் கொள்கைகளை வாசிப்பதும் பகிர்ந்துகொள்வதும் இன்றியமையாதவையாக இருக்கின்றன.
கட்டுரையாளர்
தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT