Last Updated : 04 Oct, 2018 11:19 AM

 

Published : 04 Oct 2018 11:19 AM
Last Updated : 04 Oct 2018 11:19 AM

நலம் தரும் நவராத்திரி: சக்திக்கு உகந்த ஒன்பது நாட்கள்

உலகம் முழுவதும் சக்தி மயம் என்பதை உணர்த்தவே நவராத்திரி கொண்டாடப் படுகிறது. சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றால் சக்திக்கு ஒன்பது நாள் நவராத்திரி.

 

புரட்டாசியும் பங்குனியும் எமனின் கோரைப்பற்களாகக் கருதப்படுகின்றன. எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதிலிருந்து தற்காத்துக்கொள்ளவே ஒன்பது நாளும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபட வேண்டும்.

 

நால்வகை நவராத்திரி

 

நவராத்திரியை நான்கு பிரிவாகச் சொல்லலாம். ஆவணி அமாவாசைக்குப் பிறகு வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வருவது சாரதா நவராத்திரி. தை அமாவாசைக்குப் பிறகு வருவதை மஹா நவராத்திரி எனவும் பங்குனி அமாவாசைக்குப் பிறகு வருவதை வசந்த நவராத்திரி எனவும் சொல்கிறார்கள். நான்கு நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரியைத் தவறாது கொண்டாடுவார்கள்.

 

ஒன்பது மலர்கள், ஒன்பது வகை அலங்காரங்கள், ஒன்பது வகை நிவேதனம் என்ற கணக்கில் வழிபட வேண்டும். இறைவனை அலங்கரித்து அழகுபடுத்தினால் வாழ்க்கையும் அழகுடன் அமையும் என்ற தத்துவம்தான் நவராத்திரி வழிபாட்டுக்குப் பின்னால் இருக்கிறது.

 

ஒன்பது வகை அலங்காரம்

 

l முதல் நாள் இரண்டு வயதுக் குழந்தையை அலங்கரித்து அம்மனை குமாரிகாவாக வணங்க வேண்டும். இப்படிச் செய்வதால் பணக்கஷ்டம் தீரும்.

 

l இரண்டாம் நாள் மூன்று வயதுக் குழந்தையை அலங்கரித்து திரிமூர்த்தியாக வணங்கினால் தன, தானியங்கள் பெருகும்.

 

l மூன்றாம் நாள் நான்கு வயதுக் குழந்தையை அலங்கரித்து கல்யாணியாக வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

 

l நான்காம் நாள் ஐந்து வயதுக் குழந்தையை அலங்கரித்து ரோகிணியாக வழிபட்டால் கல்வி வளர்ச்சி மிகும்.

 

l ஐந்தாம் நாள் ஆறு வயதுச் சிறுமியை அலங்கரித்து காளிகாவாக வணங்கினால் துன்பம் நீங்கும்.

 

l ஆறாம் நாள் ஏழு வயதுச் சிறுமியை அலங்கரித்து சண்டிகா தேவியாக வணங்கினால் செல்வ வளர்ச்சி மிகும்.

 

l ஏழாம் நாள் எட்டு வயதுச் சிறுமியை அலங்கரித்து சாம்பவி வடிவில் வழிபட்டால் தம்பதிகளுக்குள் இணக்கம் கூடும்.

 

l எட்டாம் நாள் ஒன்பது வயதுச் சிறுமியை அலங்கரித்து துர்கையாக வணங்கினால் துக்கம் விலகும்.

 

l ஒன்பதாம் நாள் பத்து வயதுச் சிறுமியை அலங்கரித்து சுபத்ராவாக வழிபட்டால் மங்களம் கிடைக்கும்.

 

படிகள் சொல்லும் பாடம்

 

உலகத்து உயிர்கள் அனைத்திலும் அம்பிகை இருக்கிறாள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததே கொலு. கொலுப்படிகளை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கு வரைமுறை உண்டு.

 

l கொலுப்படிகளை ஒற்றைப்படையில்தான் அமைக்க வேண்டும். முதல் படியில் ஓரறிவு உயிர்களான செடி, கொடி, பூங்கா, தோட்டம் போன்றவற்றை வைக்கலாம்.

 

l இரண்டாம் படியில் ஈறறிவு உயிர்களான அட்டை, நத்தை, சங்கு, ஊறும் பூச்சி ஆகியவற்றின் உருவங்களை வைக்கலாம்.

 

l மூன்றாம் படியில் மூன்றறிவு கொண்ட உயிர்களை (கரையான், எறும்பு) வைக்கலாம்.

 

l நான்காம் படியில் நான்கறிவு உயிர்களின் உருவங்களை (சிறு வண்டு, பறவைகள்) வைக்கலாம்.

 

l ஐந்தாம் படியில் ஐந்தறிவு உயிர்களான பசு, நாய், சிங்கம் போன்ற விலங்குகளின் பொம்மைகளை வைக்கலாம்.

 

l ஆறாம் படியில் ஆறறிவு உயிர்களான மனித உருவம் கொண்ட பொம்மைகளை வைக்கலாம். வாத்தியக் குழு, செட்டியார் பொம்மை, திருமண கோஷ்டி போன்றவற்றை வைக்கலாம்.

 

l ஞானிகளுக்கு ஏழாவது அறிவும் உண்டு என்று சொல்வார்கள். அதனால் ஏழாவது படியில் மகான்கள், ஞானிகள், தபசிகளின் வடிவங்களை வைக்கலாம்.

 

l எட்டாம் படியில் தெய்வ அவதாரங்களை வைக்க வேண்டும்.

 

l ஒன்பதாம் படிதான் முக்கியம். அதில் பூரண கும்பம் வைத்து நிறைவு செய்யலாம்.

 

வாழ்க்கைத் தத்துவத்தைப் படிப்படியாக உணர்த்தவே கொலுப் படிகளில் பொம்மை வைக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x