Published : 18 Oct 2018 07:40 PM
Last Updated : 18 Oct 2018 07:40 PM
ஷெல்டன் கோப், அமெரிக்காவின் பிரபல மனநல ஆலோசகராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுபவர். இவர் எழுதிய ‘இஃப் யூ மீட் தி புத்தா ஆன் தி ரோட், கில் ஹிம்!’ (‘If You Meet the Buddha on the Road, Kill Him!’) என்ற புத்தகம் 1972-ம் ஆண்டு வெளியானது. உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தும் மனநல ஆலோசகரைப் பார்க்க விருப்பமில்லாமல் இருப்பவர்களுக்கு வழிகாட்டுவதற்காக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
நாத்திக வாசகர்களையும் கவனத்தில்கொண்டு எழுதப்பட்ட புத்தகம் இது. உளவியல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் ஓர் ஆன்மிக யாத்திரையாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் மருத்துவர் ஷெல்டன் கோப். “நமக்கு வேறு கதி கிடையாது, இந்த உலகம் மட்டுமே நமக்கு எஞ்சியிருக்கிறது” என்ற கருத்தை முன்வைத்து இந்தப் புத்தகத்தைத் தொடங்குகிறார் அவர்.
குரு அவசியமில்லை!
வாழ்க்கையில் குரு என்ற நபர் அவசியமில்லை என்ற கருத்தை தன்னைத் தேடி வரும் நோயாளிகளுக்கு உணரவைப்பதை இலக்காகக் கொண்டு அவர் பணியாற்றுகிறார். ‘உனக்கு நீதான் நீதிபதி’ என்ற கருத்தை அவர் இந்தப் புத்தகம் முழுவதும் வலியுறுத்துகிறார். அதனால், தனக்கு வெளியிலிருந்து வரும் எந்தக் கருத்தையும் நம்பத் தேவையில்லை என்பதை அவர் வலியுறுத்துகிறார். அதனால்தான், இந்தப் புத்தகத்துக்கும் கவனத்தை ஈர்க்கும்படியான ஒரு தலைப்பை வைத்திருக்கிறார்.
நீங்கள்தான் அந்த குரு!
இந்தப் புத்தகத்தின் முதல் பகுதியில், மனநிலை சிகிச்சை பெறுபவர்களுக்கான அடிப்படையான இலக்குகளை முன்வைக்கிறார் ஷெல்டன். அதில் ஓர் அம்சமாகத்தான், அவர் தன் நோயாளிகளுக்கு அவர்கள்தான் அவர்களுடைய ‘குரு’ என்பதை அடையாளம் காட்டுகிறார். அதேநேர, ஒரு மனநல ஆலோசகர் குருவைப் போன்று நடந்துகொள்ளக்கூடாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு மனநல ஆலோசகர் குருவைப் போன்று நடந்துகொண்டால், அது அவருடைய நோயாளிகளை வெறுப்படைய வைக்கும் என்றுகூறும் அவர், அதனால்தான் பல நோயாளிகள் விரைவான, தொழில்முறையான பதில்களை மட்டும் ஓர் ஆலோசகரிடம் எதிர்பார்க்கிறார்கள். ஒரு மனநல ஆலோசகர், தன் நோயாளியுடன் யாத்திரையில் பயணிக்கும் சகபயணியாகத்தான் நடந்துகொள்ள வேண்டும்.
ஒரு நோயாளி அனுமதிக்கும்போது, தன் வாழ்க்கை அனுபவங்களை அவரிடம் பகிர்ந்துகொள்வதுதான் ஒரு மனநல ஆலோசகருக்கு ஏற்றதாக இருக்கும் என்று சொல்கிறார் ஷெல்டன்.
அன்பு, அதிகாரம், அர்த்தத்துக்கான தேடல் இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பகுதி, ஓர் ஆன்மிக யாத்திரையின் தனிப்பட்ட கூறுகளை செவ்வியல் இலக்கியங்களை உதாரணங்களாக வைத்து விளக்குகிறது. ‘சித்தார்த்தா’, ‘டான் குயிக்ஸாட்’, ‘கேன்டர்பரி டேல்ஸ்’,
‘மேக்பெத்’, ‘தி கேஸில்’ போன்ற இலக்கியப் படைப்புகளை உதாரணங்களாக முன்வைத்து மனிதனின் தேடல்களை அவர் அவர் விளக்குகிறார்.
மனிதனுக்குள் இருக்கும் நேசத்துக்கான தேடல், அதிகாரத்துக்கான தேடல், வாழ்வின் அர்த்தத்துக்கான தேடல் போன்றவற்றை இந்தப் புத்தகம் விரிவாக அலசுகிறது. வாழ்க்கை இறுதியில் அர்த்தமற்ற ஒன்று என்ற கருத்தை ஷெல்டன் வலியுறுத்தினாலும், வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதாக நம்பும் செவ்வியல் இலக்கிய கதாபாத்திரங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்து இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதி, ஒரு மனநல ஆலோசகராக ஷெல்டனின் அனுபவங்களை விளக்குகிறது. சிறைகைதிகளுக்கு ஆலோசனை வழங்கும்போது அவருக்குக் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பை இந்தப் பகுதியின் சிறப்பாகக் குறிப்பிடலாம். ஒரு மனிதனின் மனநிலையின் தாக்கங்களைப் புரிந்துகொள்வதற்குப் பல்வேறு வகைகளில் இந்தப் புத்தகம் உதவிசெய்கிறது.
நித்திய உண்மைகள் 10
இந்தப் புத்தகத்தின் கடைசியில் இடம்பெற்றிருக்கும் நித்திய உண்மைகள் பட்டியலிலிருந்து…
> எதுவும் நிரந்தரமில்லை!
> நீங்கள் விரும்பும் அனைத்தையும் அடைவதற்கான வழிகள் எதுவுமில்லை.
> நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ, அதை மட்டுமே உங்களால் வைத்திருக்க முடியும்.
> நீங்கள் இழந்து போன சிலவற்றுக்கு குறிப்பிட்ட காரணங்கள் என்று எதுவும் இல்லை.
> உங்களால் யாரையும் உங்கள் மீது நேசம் கொள்ள வைக்க முடியாது.
> அன்பு மட்டுமே போதுமானதல்ல. ஆனால், அது நிச்சயம் உதவிசெய்யும்.
> நமக்காக நாம் மட்டுமே இருக்கிறோம். அது மட்டுமே பெரிய விஷயமில்லை. ஆனால், அதுமட்டும்தான் இருக்கிறது.
> நம்மிடம் நாம் சரணடைவதில் மட்டும்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.
> எல்லா முக்கியமான போர்களும் நம்முள் நடத்தப்படுபவையே.
> உங்களை மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.ஷெல்டன் பி. கோப்
ஷெல்டன் பி. கோப் இவர் நியூயார்க்கில் 1929-ம் ஆண்டு பிறந்தார். இவர் வாஷிங்டனில் மனநல ஆலோசகராகவும், உளவியல் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘சைக்காலஜி டுடே’, ‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சைக்கோதெரபி’, ‘சைக்கியாட்ரிக் குவார்ட்டர்லி’ போன்ற பிரபல இதழ்களில் இவர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ‘குரு’, ‘தி ஹேங்க்டு மேன்’, ‘ஹு ஆம் ஐ ரியலி’, ‘வாட் டுக் யூ ஸோ லாங்’ போன்றவை இவரது முக்கியமான படைப்புகளில் சில. இவர் 1999-ம் ஆம் ஆண்டு காலமானார். |
கட்டுரையாளர் தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT