Last Updated : 04 Oct, 2018 10:46 AM

 

Published : 04 Oct 2018 10:46 AM
Last Updated : 04 Oct 2018 10:46 AM

சமயச் சார்பற்ற ஆன்மிகவாதி காந்தி!

“அனைத்து மதங்களும் உண்மை என்று எப்படி உங்களால் நம்ப முடிகிறது?” என்று காந்தியடிகளிடம் கேட்கப்பட்டபோது,

“பல வருடங்களாக இதுவே என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது. உலகை மதிப்பீடு செய்பவராக ஆகிவிடக் கூடாது என்பதிலிருந்துதான் இந்தச் சிந்தனை தொடங்குகிறது. தேடினால், எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை மதங்கள் தென்படும். இப்படி நூற்றுக்கணக்கான மனிதர்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் உண்மையைத் தங்கள் வழியில் விளக்குவார்கள். அதில் எந்த இருவரும் ஒத்துப்போக வாய்ப்பில்லை. ஒரு மரத்தின் எந்த இரு இலைகளும் ஒன்றுபோல இருப்பதில்லையே!

அதேபோலத்தான் அவரவருக்கு ஏற்றாற்போல் கடவுளை வழிபடுகிறார்கள். இதற்கிடையில் மற்றவர்களைக் காட்டிலும் நான் சிறப்பாக வழிபடுகிறேன் என்று தீர்ப்பளிக்க நான் யார்? இஸ்லாமியர்களை, பார்சிகளை, கிறிஸ்தவர்களை, யூதர்களை நான் ஒருபோதும் முன்தீர்மானத்துடன் பார்ப்பதில்லை. ஒரு பாதையில் நான் கடவுளைக் கண்டுவிட்டேன் என்பதற்காக அதே வழியில்தான் ஒட்டுமொத்த உலகமும் கடவுளைக் காண வேண்டும் என்று நான் சொல்லக் கூடாது. அனைத்து மதங்களும் உண்மை, அனைத்தும் சமம். என்னுடைய மதம் எனக்கு எவ்வளவு உண்மையோ அதேபோன்றுதான் மற்றவர்களுக்கு அவர்களுடைய மதங்களும் உண்மை. நான் யாருடைய மதத்தையும் மதிப்பீடு செய்ய முடியாது. இதுவே என்னுடைய மூலாதாரமான நிலைப்பாடு” என்றார் காந்தியடிகள்.

கோட்பாட்டளவில் மட்டுமே ஒன்றே கடவுள் ஒன்றே சமயம் என்பது சாத்தியம். சமூகப் பண்பாட்டுச் சூழலில் கடவுள் குறித்த கருத்தியலில் இரு வேறு மனிதர்கள் ஒன்றாக இருக்க முடியாது என்பதை யதார்த்தமாக அணுகியவர் காந்தியடிகள்.

சமயப் பன்மைத்துவத்தை ஏற்று சக மனிதரின் மதத்தை மதிக்கக் காந்தியடிகளுக்குக் கற்றுத் தந்தது அவருடைய வாழ்க்கை அனுபவங்களும் ஆழமான வாசிப்பு பழக்கமும்தான். தன்னுடைய தந்தையை இந்துக்களும் சமணர்களும் பார்சிகளும் பெளத்தர்களும் இஸ்லாமியர்களும் அடிக்கடி வீட்டுக்கு வந்து சந்திப்பதையும் சமயம், அரசியல் குறித்த விவாதங்களில் அவர்கள் ஈடுபடுவதையும் பால்யத்தில் இருந்தே பார்த்துப் பழகியவர் காந்தி. “இந்து மதத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அதன் சகோதரிச் சமயங்களையும் சகிப்புத்தன்மையோடு அணுகுவதற்கான பதியம் என்னுடைய இளம்வயதில் நான் ராஜ்காட்டில் வசிக்கும்போதே போடப்பட்டது” என்று ‘சத்திய சோதனை’யில் எழுதி இருக்கிறார்.

தன்னலமின்மை கற்பித்த கீதை

வைஷ்ணவச் சம்பிரதாயத்தின்படி வளர்க்கப்பட்டாலும் 1888-ல் லண்டனில் சட்டம் படிக்க ஆரம்பித்த பிறகுதான் பகவத்கீதையை வாசிக்கத் தொடங்கினார் காந்தி. அதே காலகட்டத்தில் அவர் பிரம்ம ஞானத்தின் கருத்தாக்கம், எட்வின் அர்னால்ட் எழுதிய , ‘ஆசிய ஜோதி’ (Light of Asia), புதிய ஏற்பாடு குறிப்பாக மலைப் பிரசங்கம், லியோ டால்ஸ்டாயின் ‘விண்ணகத்தின் ராஜ்ஜியம் உங்களுக்குள்’ (Kingdom of Heaven Within You) உள்ளிட்டவற்றை ஆழமாக வாசிக்கத் தொடங்கினார்.

தாய்மடிபோல கீதையிடம் அவர் இளைப்பாறிய தருணங்கள் அனேகம். எல்லா நம்பிக்கைகளையும் மதங்களையும் சமமாகப் பாவிக்கும் ‘சர்வ தர்மம்’, ‘சம பாவம்’ ஆகிய தத்துவக் கொள்கைகளைப் பகவத் கீதையில் இருந்து தழுவிக்கொண்டார்.

 ‘அனாசக்தி’ எனப்படும் ‘தன்னலமற்ற செயல்’ என்பதையே கீதையின் சாரமாகக் கருதினார். அகிம்சையை உள்ளடக்கியது

அதையும் கடந்தது தன்னலமின்மை என்றார்.

அவர் தத்துவங்களைக் கொண்டாடினாரே தவிர, சாத்திரங்களைத் தலையில் தூக்கிவைத்து ஆடவில்லை. சாத்திரங்களைக் கடந்த ஆன்மிகத்தையே முன்மொழிந்தார்.

டால்ஸ்டாய் பண்ணையில் நோன்பு

இந்து-இஸ்லாமியர்களின் ஒற்றுமைக்குத் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர். இஸ்லாமியத்தின் மத நம்பிக்கைகளையும் போற்றி வணங்கினார். நபிகளின் போதனைகளை அகிம்சை கோட்பாட்டுக்கு இணக்கமானதாகக் கருதினார். அப்பழுக்கற்ற இறை நம்பிக்கை கொண்டவர் மட்டுமே நோன்பு அனுசரிக்க முடியும் என்பதை நபிகளிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதாக அறிவித்தார். தியாகம் உள்ளிட்ட கிறிஸ்தவ அறநெறிகளை அவர் ஆழ்மனத்தில் விதைத்கதவை லியோ டால்ஸ்டாயின் எழுத்துகள். அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாகத் தென்னாப்பிரிக்காவில் ‘டால்ஸ்டாய் பண்ணை’யைத் தோற்றுவித்தார். அந்தப் பண்ணையில் 1910 முதல் 1914 வரை காந்தியும் வசித்துவந்தார். அவருடன் மிகச் சில இஸ்லாமியர்கள்தாம் இருந்தார்கள். என்றாலும், குரான் விதிமுறைகளின்படி அவர்களை நோன்பு இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

கீதை இல்லையேல் மலைப் பிரசங்கம்

கிறிஸ்தவ மதப் போதகர்களின் செயல்பாட்டில் அவருக்கு ஆட்சேபணையும் மாற்றுக் கருத்தும் இருந்துவந்தது. ஆனால், அவருடைய புனித நூல்களில் ஒன்றாக என்றுமே விவிலியம் இடம்பெற்றிருந்தது. “என்னிடமிருந்து இன்று கீதை பறிக்கப்பட்டால்; அதன் உள்ளடக்கத்தை நான் முழுவதுமாக மறக்க நேரிட்டால்; அதற்குப் பதிலாக என்னிடம் பிரசங்கத்தின் ஒரு பிரதி இருக்குமேயானால், கீதையில் இருந்து நான் பெற்ற ஆனந்தத்தைப் பிரசங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வேன்” என்று தன்னுடைய இதழான ‘யங் இந்தியா’–வில் 1927-ல் எழுதினார். சத்தியாகிரகமும் அகிம்சையும் தன்னுடைய இரு கண்களாக மாறியதில் இயேசு கிறிஸ்துவின் பங்கு பெருமளவு இருப்பதாகத் தெரிவித்தார்.

எது ராமராஜ்ஜியம்?

புத்தர் மேற்கொண்ட துறவறமும் அவர் முன்மொழிந்த மகாகருணையும் சகிப்புத்தன்மையும் காந்தியைப் பெரிதும் கவர்ந்தன. அதைவிட இளம்பிராயத்திலேயே அகிம்சையைத் தீர்மானித்ததில் சமணத்துக்குப் பெரும் பங்குள்ளது. தந்தை இறந்த பிறகு காந்தி உயர்கல்விக்காக இங்கிலாந்து செல்ல முடிவெடுத்தார். அப்போது அவருடைய தாய் கேட்டுக்கொண்டதன் பேரில் சமணத் துறவி ஒருவர் அளித்த புத்திமதிதான் பிற்காலத்தில் காந்தியின் போக்கைத் தீர்மானித்தது எனலாம். அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பொருள் பற்றின்மை ஆகிய கொள்கைகளை மட்டுமல்ல அனேகாந்த வாதத்தையும் அவர் சமணத்திடம் இருந்தே பெற்றார். அதுவே பன்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை அவரிடம் வளர்த்தது.

இப்படியான பல் சமய நாகரிகத் தொட்டிலில் இருந்து தன்னைத்தானே வார்த்தெடுத்தார் காந்தி. உண்மை, அகிம்சை, கொல்லாமை, சகோதரத்துவம் உள்ளிட்ட தத்துவார்த்தச் சமயக் கொள்கைகளை வெவ்வேறு சமய நூல்களிலிருந்தும் பாரம்பரியங்களில் இருந்தும் உள்வாங்கிக்கொண்டார். இவை அனைத்தையும் தன்னுடைய ஆன்ம விடுதலைக்காக மட்டும் எடுத்துக்கொண்டு துறவறம் சென்றுவிடவில்லை அவர். சமயக் கோட்பாடுகளுக்குச் செயல் வடிவம் கொடுத்தார். சமூக மாற்றத்துக்கான தேச விடுதலைக்கான அஸ்திரமாக அவற்றை மாற்றினார்.

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற சமூக-அரசியல் திட்டமான ‘சர்வோதயா’-வுக்கு அடிநாதமாகப் பொருளாதாரச் சித்தாந்தத்தை அவர் முன்மொழியவில்லை. மாற்றாகச் சமயச்சார்பின்மையும் ஆன்மிகமும் கைகோத்தால் சர்வோதயம் சாத்தியம் என்று நம்பினார். அதையே பின்பற்றினார்.

‘ராமராஜ்ஜியத்தை’ நிலைநாட்டுவதே தன்னுடைய மதம் என்றார். ஆனால், “ராமராஜ்ஜியம் என்றால் இந்துக்களின் ஆட்சியைக் குறிப்பிடவில்லை. தெய்வீகமான ஆட்சியைத்தான் குறிப்பிடுகிறேன். அதாவது, கடைக்கோடி மக்களுக்கும் நீதி சமமாகப் பரிபாலனம் செய்யப்பட்ட காலம் என்றொன்றிருந்தது. அப்படிப்பட்ட உண்மையான ஜனநாயகமே ராமராஜ்ஜியம்” என்று ஆணித்தரமாக விளக்கினார்.

எல்லா மதங்களும் ஒன்றே என்று சொல்லி கடைசியில் இந்து மதத்துக்கு அத்தனையும் கொண்டுவந்து முடிச்சுப் போடவில்லை அவர். அவரவர் மத நம்பிக்கையும் பழக்க வழக்கங்களும் அவரவருக்கு என்ற பார்வையைக் கொண்டிருந்தார். இஸ்லாம், கிறிஸ்தவம், பெளத்தம், சமணம் என ஒவ்வொன்றிலிருந்தும் நற்சிந்தனைகளைத் தேர்ந்தெடுத்து கோத்து தன்னைத் தானே வார்த்தெடுத்தார். தத்துவார்த்தச் சிந்தனையோடு மதங்களை ஜனநாயகப்படுத்த முயன்றார்.

தொடர்புக்கு:

susithra.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x