Published : 02 Aug 2018 11:16 AM
Last Updated : 02 Aug 2018 11:16 AM
ஒரு அபாயகரமான காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடிய மாவீரன் வேண்டும் எனத் தன்னுடைய மந்திரவாதியிடம் கூறினார் மன்னர். நீண்ட தேடலுக்குப் பிறகு நான்கு பலசாலி ஆண்களை மன்னருக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார் மந்திரவாதி. நான்கு பேரில் அசகாயசூரனை அடையாளம் கண்டுபிடிப்பதற்கான போட்டி ஒன்றை ஏற்பாடு செய்யும்படி மந்திரவாதிக்குக் கட்டளையிட்டார் மன்னர்.
ஆள் மறைக்கும் கதிர்கள் வளர்ந்த மிகப் பிரம்மாண்டமான வயல்வெளி ஒன்றின் எல்லைப் பகுதியில் மன்னரும் மந்திரவாதியும் அந்த நான்கு ஆண்களும் போய் நின்றார்கள். எதிர் முனையில் ஒரு தானியக் களஞ்சியம் இருந்தது. “ஒவ்வொரு வீரனும் அந்தக் களஞ்சியம்வரை நடந்து சென்று, அதில் உள்ளதை எடுத்து வர வேண்டும்” என்று அறிவித்தார் மந்திரவாதி.
முதல் நபர் வயல்வெளியைக் கடந்து நடக்கத் தொடங்கினார். உடனே சூறாவளி கிளம்பியது; மின்னல் வெட்டியது; இடி இடித்தது; பூமி அதிர்ந்தது. பயந்துபோன அந்த வீரன் நடைபோடத் தயங்கினார். மேலும் புயல் வலுத்ததும் அச்சத்தில் அவர் சுருண்டு விழுந்தார்.
அடுத்த நபர் அடியெடுத்து வைத்ததும் சூறாவளி இன்னமும் வலுத்தது. இருந்தாலும் முதல் வீரனைக் கடந்து முன்னேறினார் இரண்டாமவர். ஆனால் அவரும் கடைசியில் தடுமாறி விழுந்தார்.
மூன்றாமவர் அரக்கப்பறக்க கிளம்பி முதல் இரண்டு நபர்களையும் தாண்டிச் சென்றுவிட்டார். உடனே, சொர்க்கம் திறந்தது, பூமி பிளந்தது. களஞ்சியமே அலைக்கழிக்கப்பட்டு விரிசல்விட்டு. அதன்பிறகு மூன்றாமவரும் நடுநடுங்கி விழுந்தார்.
கடைசியாக நான்காமவர் மெல்ல வயலில் இறங்கினார். தனது காலடி ஓசையையே அவர் கேட்டார். அவருடைய முகம் பயத்தில் வெளிறிப்போனது. எங்கே தான் அஞ்சுவதாக மற்றவர்கள் நினைத்துவிடுவார்களோ என்ற எண்ணமே அவருக்குப் பயத்தை உண்டாக்கியது. பாதையில் விழுந்து கிடந்த முதல் வீரனைக் கடந்தார். “இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்” என்று தனக்குத்தானே அவர் சொல்லிக்கொண்டார். அடுத்து இரண்டாவது வீரனைப் பார்த்தார். அவனையும் கடந்தார். “இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்” என்று கூறி நடந்தார். புயல் சுழன்றடிக்கத் தொடங்கியது.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாவது வீரனையும் அவர் நெருங்கிவிட்டார். அதற்குள் புயல் வலுத்தது. பயத்தில் உறைந்துகிடந்த மூன்றாமவரையும் கடந்து சென்றபோது, “இதுவரை நான் நன்றாகத்தான் இருக்கிறேன். எனக்கு எதுவும் நேர்ந்துவிடவில்லை. என்னால் இன்னும் கொஞ்ச தூரம் செல்ல முடியும்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். இப்படியே அங்குலம் அங்குலமாக நகர்ந்து களஞ்சியத்தை நெருங்கினார். ஒருவழியாகக் களஞ்சியத்தை அடைந்துவிட்டார். அதன் தாழ்ப்பாளைத் தொடுவதற்கு முன்னதாக, “இதுவரை நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் என்னால் முன்னேற முடியும்” என்று சொல்லிக்கொண்டார். அதன் பிறகு அதன் தாழ்ப்பாளில் கை வைத்தார்.
அந்த நொடிப் பொழுதில் சூறாவளி சட்டென நின்றது, பூமி நிலைகொண்டது, சூரிய ஒளிக் கீற்று பாய்ந்தது. ஆச்சரியமடைந்தார் அவர். இப்போது எதையோ மெல்லும் சத்தம் களஞ்சியத்துக்குள் இருந்து கேட்டது. யாரோ தன்னை ஏமாற்ற முயல்வதாக முதலில் நினைத்தவர், “நான் இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறேன்” எனச் சொல்லிக்கொண்டு களஞ்சியத்தின் கதவைத் திறந்தார். உள்ளே தானியக் கதிரை மென்று தின்றபடி ஒரு வெள்ளைக் குதிரை நின்று கொண்டிருந்தது. அருகில் ஒரு வெள்ளைப் படைக்கவசம் இருந்தது. அதை அணிந்துகொண்டு குதிரை மீது ஏறினார். மன்னரையும் மந்திரவாதியையும் சென்றடைந்தவர், ‘நான் தயார் ஐயா’ என்றார்.
‘எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்ட மன்னரிடம், “இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT