Published : 30 Aug 2018 10:40 AM
Last Updated : 30 Aug 2018 10:40 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 46: திருமூலர் காட்டும் கடவுள்

பெரியவற்றை வாழ்த்துதல் என்பது ஒரு மரபு. இப்போதெல்லாம் எல்லாவற்றையும் வாழ்த்துகிறார்கள். ஏனென்றால், வாழ்த்துகிறவர்கள் மட்டும்தான் வாழ்வு பெறமுடியும் என்று சரியாகவோ பிழையாகவோ ஒரு மனப்பதிவு உருவாகியிருக்கிறது. ஆகையால், வாழ்வு பெற நினைக்கிறவர்கள்,

அதை வழங்குகிற இடத்தில் இருக்கிற எல்லோரையும் வரிசைமுறை பார்த்து வாழ்த்துகிறார்கள்.

எளிய மனிதர்களை வாழ்த்துவதற்கே என்ன சொல்லி வாழ்த்துவது என்ற நெருக்கடி ஏற்படும் என்றால், இறைவனை வாழ்த்துகிறவர்கள் என்ன சொல்லி வாழ்த்துவார்கள்? ‘நான் செய்தேன், நான் செய்தேன்’ என்று பட்டயம் கட்டிக்கொண்டு மனிதர்கள் செய்த எல்லாமே இறைவன் செய்தவை என்று நம்புகிறது பக்தி மார்க்கம்.

வாழ்த்துகிறவன், வாழ்த்து உட்பட எல்லாமே இறைவன் செயல் என்றால், அவனை என்ன சொல்லி வாழ்த்த? மலைப்பாகத்தான் இருக்கிறது. ஆனாலுங்கூட இறைவனை வாழ்த்தியவர்கள் யாரும் ‘வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்’ என்று கும்பிட்டுக் கதையை முடித்துக்கொள்வதே இல்லை. எதையாவது சொல்லி வாழ்த்தவே விழைகிறார்கள்.

அரியானை, அந்தணர்தம்

சிந்தை யானை,

அருமறையின் அகத்தானை,

அணுவை, யார்க்கும்

தெரியாத தத்துவனைத்

தேனைப் பாலைத்

திகழ்ஒளியைத் தேவர்கள்தம்

கோனை, மற்றைக்

கரியானை, நான்முகனைக்

கனலைக் காற்றைக்

கனைகடலைக் குலவரையைக்

கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப்

புலியூ ரானைப்

பேசாத நாள்எல்லாம்

பிறவா நாளே (தேவாரம், 6:1:1)

- என்று வாழ்த்துகிறார் அப்பர். அவன் அரியவன், ஏனென்றால், அவனைப் போல அவன் ஒருவன்தான் உண்டு; உயிர்கள் அனைத்துக்கும் அந்தண்மை பூண்டு ஒழுகும் சீலர்களின் உள்ளங்களில் குடியிருப்பவன்; மறைகளின் மடிப்புகளால் மறைத்து வைக்கப்பட்டிருப்பவன்; அணுப்போல நுண்ணியவன்;

யாருக்கும் தெரியாத உண்மை அவன்; கேட்டால் தேன்; சுவைத்தால் பால்; பார்த்தால் ஒளி; தேவர்களின் அரசன்; கரியனாகிய திருமால், நான்முகனாகிய பிரம்மன், கனல், காற்று, கடல், மலை என்று எல்லாவற்றிலும் கலந்து நிற்கும் பெரியான்; பெரும்பற்றப்புலியூர்க்காரன்; அவன் புகழைப் பேசவில்லை என்றால் அந்த நாள் வாழாத நாளே.

மாணிக்கவாசகரும் வாழ்த்துகிறார்:

வான்ஆகி, மண்ஆகி,

வளிஆகி, ஒளிஆகி,

ஊன்ஆகி, உயிர்ஆகி,

உண்மையும்ஆய், இன்மையும்ஆய்க்

கோன்ஆகி, யான்எனதுஎன்று

அவரவரைக் கூத்தாட்டு

வான்ஆகி நின்றாயை

என்சொல்லி வாழ்த்துவனே

(திருவாசகம், திருச்சதகம், 15)

வான் ஆனான்; மண் ஆனான்; வளி ஆனான்; ஒளி ஆனான்; கோன் ஆனான்; ஊன் ஆனான்; உயிர் ஆனான்; உண்மை ஆனான்; இன்மை ஆனான்; அவரவரைக் கூத்தாட்டுவானும் ஆனான். அவனை என்னவென்று சொல்லி வாழ்த்த என்று மறுகி நிற்கிறார் மாணிக்கவாசகர்.

விடுதலை பெற வாழ்த்து

வாழ்த்துகிறவர்கள் எல்லாரும் தங்கள் வாழ்வுயரவே வாழ்த்துகிறார்கள். பார்க்கிறவர்கள், தான் வாழ்த்துவதையும் அப்படி நினைத்துவிடக் கூடாதே என்று கருதும் மாணிக்கவாசகர் தன் வாழ்த்துக்கு நியாயம் கற்பிக்கிறார்:

வாழ்த்துவதும் வானவர்கள்

தாம்வாழ்வான் மனம்நின்பால்

தாழ்த்துவதும் தாம்உயர்ந்து

தம்மைஎல்லாம் தொழவேண்டிச்

சூழ்த்துமது கரம்முரலும்

தாரோயை நாய்அடியேன்

பாழ்த்தபிறப்பு அறுத்திடுவான்

யானும்உன்னைப் பரவுவனே.

(திருவாசகம், திருச்சதகம், 16)

வானவர்களுந்தான் உன்னை வாழ்த்துகிறார்கள். எதற்காக என்றால், தங்களுடைய நிலை மேலும் உயர வேண்டி. அது எதற்காக என்றால், தாம் உயர்நிலை பெற்றால்தான் மற்றவர்கள் எல்லோரும் தம்மைத் தொழுவார்கள் என்பதற்காக. நாய்ப் பயலாகிய நானும்தான் உன்னை வாழ்த்துகிறேன். எதற்காக என்றால், இந்த அற்பப் பெருமிதங்களில் என்னைப் பற்றுவித்து என்னை உழட்டும் பிறப்பை அறுத்து விடுதலை பெறுவதற்காக.

நல்லது. இறைவனை வாழ்த்துகிறவர்கள் எதற்காக வாழ்த்துகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். எதைச் சொல்லி வாழ்த்துகிறார்கள் என்று பார்த்தால், இறைவனின் இயல்பைச் சொல்லி வாழ்த்துவதைக் காட்டிலும், இறைவனின் இருப்பைச் சொல்லியும் இருப்பிடத்தைச் சொல்லியுமே வாழ்த்துகிறார்கள். ஏனென்றால், இறைவனை விசாரிக்கிறவர்கள் அவனது இயல்பை விசாரிப்பதைக் காட்டிலும் இருப்பையே விசாரிக்கிறார்கள்; இருக்கிறான் என்றாலோ இருப்பிடம் விசாரிக்கிறார்கள்.

திருமூலர் அளிக்கும் பதில்

அங்கிருக்கிறான், இங்கிருக்கிறான் என்று சுட்டிக்கொண்டே வந்த பக்திப் பதில்சொல்லிகள் ஒரு கட்டத்தில் ‘பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தம்’ கடவுள் என்று கைதூக்கிவிடுகிறார்கள்.

திருமூலர் பதில் சொல்ல வேண்டிய முறை வருகிறது. மலக் குதத்துக்கும் பால் காட்டும் குறிக்கும் பக்கத்தில் கூடாரம் அடித்துக் குடியிருக்கிறான் இறைவன் என்று இறைவனின் இருப்பிடத்தை அடையாளம் காட்டுகிறார் திருமூலர். இதென்ன கருமம்? தொடர்வண்டிகளின் இரண்டாம் வகுப்பில் ஒரு நாளிரவு பயணம் போகிற மனிதர்கள்கூடக் கழிவறைக்குப் பக்கத்துப் படுக்கையை வேண்டாம் என்று தள்ளுகிற நிலையில், உடம்புக்குள் குடியிருக்கவே வந்த இறைவனார் மலக்குதத்துக்கும் பாற் குறிக்கும் பக்கத்திலா கூடாரம் அடித்துக் குடியிருப்பார்? அப்படித்தான் சொல்கிறார் திருமூலர்:

மாறா மலக்குதம் தன்மேல் இருவிரல்

கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்;

ஆறா உடம்புஇடை அண்ணலும் அங்குஉளன்;

கூறா உபதேசம் கொண்டுஅது காணுமே (திருமந்திரம் 733)

மாறாமல் எப்போதும் மலம் கழிப்பதை மட்டுமே தன் வேலையாகக் கொண்டிருக்கிற குதத்துக்கு இரண்டு விரற்கடை மேலேயும், நேரடியாகக் குறித்துச் சொல்லக் கூசி இடக்கரடக்கிச் சொல்கிற ‘இலிங்கம்’ என்கிற பால் அடையாளக் குறிக்கு இரு விரற்கடை கீழேயும் கவனத்தை நிறுத்துங்கள். ஏனென்றால், சூடு ஆறாமல் உயிர் தங்கியிருக்கும் நம் உடம்பில் இறைவன் தங்கியிருக்கும் இடம் அது. உபதேசிகள் உபதேசிக்காத உபதேசம் இது. கண்டுகொள்க.

‘இதய அம்புயனே’—இதயமாகிய தாமரையில் வீற்றிருப்பவனே—என்று இறைவனின் இருப்பிடமாக இதயத்தைத்தானே வள்ளலார் சுட்டுகிறார்? (திருவருட்பா, VI:35:6). திருமூலர்மட்டும் ஏன் இப்படிச் சொல்கிறார்? ஒருவேளை பிழையாகச் சொல்லிவிட்டாரா? இல்லை. வேறு பாட்டாலும் தெளிவுபடுத்துகிறார்:

எருஇடும் வாசற்கு இருவிரல் மேலே

கருஇடும் வாசற்கு இருவிரல் கீழே

உருஇடும் சோதியை உள்கவல் லார்க்குக்

கருஇடும் சோதி கலந்துநின் றானே. (திருமந்திரம் 584)

எரு இடும் வாசல் என்பது மலக் குதம். கருவிடும் வாசல் என்பது பிறப்பிக்கும் குறி. முன்னதற்கு இருவிரல் மேலே, பின்னதற்கு இருவிரல் கீழே இருக்கிறது சோதி. கண்டுகொள்க.

இவை இரண்டால் மட்டும் அல்லாது இன்னும் சில பாடல்கள்வழியும் செய்தியைச் செறிவாக அழுத்துகிறார். என்ன கருத்து திருமூலருக்கு? இறைவனை வெளியில் சுட்டிக்காட்டி மாளாது. ஆகவே உடம்புக்குள்ளேயே சுட்டிவிடுவோம் என்பதா? உடம்புக்குள் என்றாலும் ஏன் இந்த இடம்? எதற்காக எல்லாவற்றையும் மடக்கி மடக்கி உடம்புக்குள்ளேயே கொண்டு வருகிறார் திருமூலர்? விசாரிக்கத்தான் வேண்டும்.

(தொடர்ந்து விசாரிக்கலாம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x