Published : 09 Aug 2018 10:20 AM
Last Updated : 09 Aug 2018 10:20 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 43: உழவை மறந்தான் உலகத்தில் விழுந்தான்

கொடுப்பதைத் தமிழ் அறநெறி மரபு முதன்மைப் படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் நிறையக் கொடைஞர்கள் இருந்திருக்கிறார்கள். கணக்குப் பார்க்காமல் கொடுத்திருக்கிறார்கள். இன்னார், இனியார் என்று பார்க்காமல் கொடுத்திருக்கிறார்கள். சில நேரத்தில் மடத்தனமாகக்கூடக் கொடுத்திருக்கிறார்கள். மடத்தனமாகக் கொடுப்பதைத் தமிழ் மரபு ‘கொடை மடம்’ எனும். கொடுப்பதில் உண்டாகும் மடம்.

மடம் என்பது, ஒருவர் தன்னுடைய அறிகருவிகளால் ஆராய்ந்து, தனக்கான கருத்தாக, கொள்கையாக ஏற்றுக்கொண்ட ஒன்றை, எத்தனை இடையூறுகள் வந்தாலும், எவ்வளவு சங்கடங்கள் நேர்ந்தாலும், சாவே வந்து அணைந்தாலும், கொண்டதைக் கைவிடாமல் கடைசிவரை இறுகப் பற்றிக்கொள்ளுதல்.

சாவே வந்தாலும் கைவிடாமல் பற்றிக்கொள்வது என்பதென்ன எளிதான செயலா? அரிதான செயல் இல்லையா? அரிதான செயல்தான். ஆனால், அறிவான செயலா? இல்லைதான். ஆகவேதான் அது மடம் எனப்பட்டது. ஆராய்ந்து ஏற்றுக்கொண்ட கொள்கைதான் என்றாலும், தேவையான இடத்தில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுந்தானே? மடம் என்பது பெண்ணின் குணம் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது ஆணின் குணமும்தான். சில கட்சிகளில் தங்களைப் பூட்டிக்கொண்டவர்கள், அந்தக் கட்சி எத்தனை கோளாறுகள் செய்தாலும் சீர்தூக்கிப் பார்க்காமல், திசை மாற்றிக்கொள்ளாமல், நிலை மாறாமல் மடம் கொண்டு நிற்பார்கள்.

கடைமடையனாக இருக்கலாம்

இந்த மடமையும்கூட ஒரு புகழைக் கொடுக்கும். மயிலுக்குப் போர்வை கொடுத்த கொடைஞன் அப்படித்தான் புகழ்பெற்றான். அவன் பெயர் பேகன். தமிழ் மரபு கொண்டாடுகிற வள்ளல்களில் ஒருவன். பொதினி மலைக்குத் தலைவன். ஒரு குளிர்காலத்தின் அதிகாலையில் போர்வையைப் போர்த்திக்கொண்டு நடை பழகிக்கொண்டிருந்தான்.

மயில் ஒன்று உடல் சிலிர்த்து அகவியது. குளிரில் நடுங்கித்தான் மயில் அகவுகிறது என்று எண்ணித் தான் போர்த்தியிருந்த போர்வையை மயிலுக்குப் போர்த்திவிட்டானாம் பேகன். அவன் செயலைக் கேட்டவர்கள், ‘அட அறிவுக் களஞ்சியமே! இப்படியா இருப்பான் ஒருவன்? இவ்வளவு மடையனாகவா? தலைவனாக இருக்கத் தகுந்தவன்தானா இவன்?’ என்று பகடி பேசினார்கள். மறுதலையாகப் பரணர் பாடுகிறார்:

அறுகுளத்து உகுத்தும்

அகல்வயல் பொழிந்தும்

உறும்இடத்து உதவாது

உவர்நிலம் ஊட்டியும்

வரையா மரபின் மாரி போலக்

கடாஅ யானைக்

கழல்கால் பேகன்

கொடைமடம் படுதல் அல்லது

படைமடம் படான்பிறர்

படைமயக்கு உறினே. (புறநானூறு 142)

மழை இருக்கிறதே, அது காய்ந்துபோன குளத்திலும் பெய்யும்; வறண்டு வெடித்துக் கிடக்கிற வயலிலும் பெய்யும்; சில சமயங்களில் தேவைப்படும் இடங்களில் பெய்யாமல், உழவுக்குப் பயன்படாத உவர்நிலத்தில் பெய்து வீணாகியும் போகும். மழையின் போக்குக்கு வரைமுறை கிடையாது; இன்னார் இனியார் என்ற கணக்குக் கிடையாது. அதைப் போலத்தான் இந்தப் பேகன். வேண்டியவர்களுக்கும் கொடுப்பான்; வேண்டாதவர்களுக்கும் கொடுப்பான்; பயன்படுமா என்று பார்த்தும் கொடுப்பான்; மயிலுக்குக் கொடுத்ததுபோல வீணாகவும் கொடுப்பான். அதனால் அவனைக் கொடை மடையன் என்று சொல்லலாம்.

அவன் கொடை மடையனே தவிரப் படை மடையன் அல்லன். போர் என்று வரும்போது, இன்னாரையும் இனியாரையும் அவனால் வேறுபடுத்தி அறிய முடியும். எதிர்த்து நின்றவர்களை வெட்டுவான்; தஞ்சமென்று வந்தவர்களைத் தழுவுவான். தகுதி தெரிந்து சண்டை இட வேண்டும் என்ற அறம் தெரிந்தவன் அவன்.

புகழைப் புகழும் வள்ளுவர்

போர்வை கொடுத்த பேகன் ஒருவன்தான் கொடைமடையன் என்றில்லை. அவனுக்குப் போட்டியாகத் தேர் கொடுத்த பாரி, தலை கொடுத்த குமணன், சதை கொடுத்த சிபி ஆகியோரும் இருக்கிறார்கள்.

போர்வை கொடுத்ததும் தேரைக் கொடுத்ததுமே மடத்தனம் என்றால் தன்னையே கொடுக்கத் துணிவது முழு மூடத்தனம் இல்லையா? இல்லை; ‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்’ என்கிறது புறநானூறு (182). புகழைப் புகழ்கிற வள்ளுவர்,

நத்தம்போல் கேடும் உளதுஆகும்; சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது. (குறள் 235)

நத்தை இருக்கிறதே, அது தன்னைச் சுற்றிச் சங்கு என்னும் உறையை உருவாக்கிக்கொள்கிறது. பிறகு அதைப் பிறர் கொள்ளக் கொடுத்துவிட்டுத் தான் சாகிறது. கொடுக்கிறவர்கள், செத்தாலும் புகழ் விளங்குமாறு சாகிறார்கள். நிலையில்லாத பூத உடலைக் கொடுத்து, அழியாத புகழ் உடலைப் பெற்றுவிடுகிறார்களே, இவர்கள் வித்தகர்கள் இல்லையா?

திருவள்ளுவரே சொல்கிறார்தான்; என்றாலும் ஒரு கேள்வி வருகிறது. செத்துப்போன பிறகு வருகிற இந்தப் புகழை வைத்துக்கொண்டு என்ன செய்ய? ஏதும் செய்வதற்காக அல்ல புகழ். எந்தப் பயனும் இல்லாத நம்முடைய நிழல்போலப் புகழ் சில சமயம் தானாகவே நம்மோடு வருகிறது; பின் தானாகவே காணாமல் போகிறது. புகழைக் கருதி யார் செய்தார்கள்? ‘நல்லன செய்தால் நல்லன விளையும்; ஆகவே நல்லது செய்க’ என்று மெய்ம்மை பயிற்றும் மரபுகளைப் புறத்தமிழ் மரபு புறந்தள்ளுகிறது. நல்லனவே விளையாவிட்டாலும் நல்லன செய்க. விளைவுக்காக அல்ல, அறத்துக்காகவே அறம்.

...எத்துணை ஆயினும்

ஈத்தல் நன்றுஎன

மறுமை நோக்கின்றோ? அன்றே!

பிறர் வறுமை நோக்கின்று

அவன்கை வண்மையே! (புறநானூறு 141)

அடுத்த பிறப்பில் யாராகப் பிறப்பேன்? செத்துப்போன பிறகு அவ்வுலகில் எனக்கு என்ன கிடைக்கும்? என்று மறுமை பார்த்தா கொடுத்தான் பேகன்? பிறர் வறுமை பார்த்தல்லவா கொடுத்தான்? ‘மேல் உலகம் இல்லெனினும் ஈதலே நன்று’ என்று இதை வள்ளுவரும் ஆமோதித்து விடுகிறார். திருமூலர் சும்மா இருப்பாரா?

தன்னது சாயை தனக்குஉத வாதுகண்டு

என்னது மாடுஎன்று இருப்பர்கள் ஏழைகள்;

உன்உயிர் போம்;உடல் ஒக்கப் பிறந்தது;

கண்அது காண்ஒளி கண்டுகொ ளீரே (திருமந்திரம் 170)

வெயிலில் போகும்போது ஒதுங்குவதற்கு நிழல் தேடுகிறீர்கள்; அதுவோ ஒன்றுமில்லாத மொட்டைவெளி; உங்கள் காலடியிலோ உங்களுக்கென்றே அளவெடுத்துச் செய்ததுபோலக் கச்சிதமாய் உங்கள் நிழல். அதில் ஒதுங்க முடியுமா? உங்களது நிழல் உங்களுக்கு என்றைக்காவது உதவியிருக்கிறதா?

அவ்வாறே உங்களுடைய செல்வமும் உங்களுக்கு உதவாது என்று நிழற்பாடம் படித்த பிறகுமா உங்களுக்குப் புரியவில்லை? என்னுடைய செல்வம் என்னுடைய துன்பத்தைப் போக்கும் என்று சுவிஸ் வங்கிகளில் வைத்துப்பூட்டிச் செல்வத்தைக் காக்கும் ஏழைகளே! உங்கள் உடம்போடு கூடவே வந்த உயிரே உடம்பைக் காக்காமல் கைவிட்டுப் போகும் நிலையில், இடையில் வந்த செல்வமா உங்களைக் காக்கப் போகிறது? உங்களுக்கெல்லாம் காட்டுவதற்குக் கண்ணும் இருக்கிறது. காண்பதற்கு அறிவும் இருக்கிறது. காணக்கூடாதா?

அறிவைத் தொகுத்தலே இன்பம்

மனிதருக்குத் துன்பம் எது? செல்வ வறுமையா? புகழ் வறுமையா? அறியாமையே துன்பம். நிலையானது எது, நிலையில்லாதது எது என்று வேறுபடுத்தி அறியத் தெரியாத மெய்ம்மடமே துன்பம். செல்வத்தைத் தொகுத்தலும் புகழைத் தொகுத்தலும் அல்ல, அறியாமை நீங்க அறிவைத் தொகுத்தலே இன்பம். அறிவைத் தொகுக்கவிடாமல் உலகியல் கவ்வி இழுக்கிறது.

உழவன் உழவுஉழ, வானம் வழங்க,

உழவன் உழவில் பூத்த குவளை,

உழவன் உழத்தியர் கண்ஒக்கும் என்றிட்டு

உழவன் அதனை உழவுஒழிந் தானே. (திருமந்திரம் 1619)

உழவன் உழுதான். மழையும் பெய்தது. உழுத நிலத்தில் குவளைப்பூப் பூத்தது. உழவு நிலத்தில் குவளை களை இல்லையோ? களைவதற்காகக் கிட்டத்தில் வந்தபோது, உழத்தியின் கண்போலத் தோன்றியது குவளை. அதன்பின் களைவானா? உழவை மறந்தான்; உலகத்தில் விழுந்தான்.

உலகியல் தன்னுடைய கற்பிதங்களால் தொடர்ந்து மடமைப்படுத்திக்கொண்டே இருக்கிறது. களைத்துப் போகாமல் அறிவைத் தொகுத்துக்கொண்டே இருக்க வேண்டும்—பாரஞ் சுமக்கிற காளைகள் முக்கி மேடேறுவதைப் போல.

(அறிவைக் காதலிப்போம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x