Last Updated : 23 Aug, 2018 10:52 AM

 

Published : 23 Aug 2018 10:52 AM
Last Updated : 23 Aug 2018 10:52 AM

ஒன்றில் இரண்டு 12: அபிஷேகம் அற்ற ஆதிபுரீஸ்வரர்

திருவொற்றியூரில் மனத்தைக் கவரும் விதத்தில் உயர்ந்து நிற்கும் ஆதிபுரீஸ்வரர் ஆலயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திருத்தலத்திலுள்ள பெருமான் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் ஆகிய திருநாமங்களால் அழைக்கப்படுகிறார்.  எனினும், ஆதிபுரீஸ்வரர் எனும் தியாகராஜர் ஒரு சன்னிதியிலும், திருவொற்றீஸ்வரர் தனியாக ஒரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள்.

காளியின் வடிவாக உள்ள வட்டப்பாறை அம்மன் இங்கே அருள் பாலிக்கிறார்.  தொண்டைமான் சக்கரவர்த்தி இங்கு வழிபட்டிருக்கிறார்.  பஞ்சபூதத் தல லிங்கங்களும் இந்த ஆலய வளாகத்தில் உள்ளன.

குறுமுனி அகஸ்தியர் சிவபெருமானின் திருமணகோலத்தைக் கண்டுகளித்தது இங்குதான்.  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம் இது. சங்கீத மும்மூர்த்திகளாலும் கீர்த்தனைகள் இயற்றப்பட்ட ஆலயம் இது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரைத் தவிர ஐயடிகள், காடவர், கோன், கலிய நாயனார் போன்ற நாயன்மார்களும் வழிபட்ட திருத்தலம். சிறப்புப் பெற்ற சொர்ண பைரவரைக் கொண்டுள்ள இந்தக் கோயிலில் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தனித்தனி சிவலிங்கம் கட்டி திருப்பணி செய்யப்பட்டுள்ளது. திரிபுரசுந்தரியான வடிவுடையம்மன் ஞான சொரூபமாக நின்று அருள் பொழியும் அற்புதத் தலம் என்று பல சிறப்புகள் கொண்டது.

பிரம்மாண்டமான சிவலிங்கம்

நுழைந்தவுடன் நேர் எதிராக இருப்பது  முருகர், விநாயகர் ஆகியோரின் சன்னிதிகள்தாம்.  இரண்டு கோயில்களிலுமே முக்கிய நுழைவுவாயிலில் நுழைந்து இடப்பக்கமாகச் சென்று அங்குள்ள நீண்ட மண்டபத்தில் நுழைந்து, பிறகு வலப்புறமாகத் திரும்பி நுழைந்தால் சிவபெருமானைத் தரிசிக்கலாம்.

கோயிலில் தொன்மையின் நெடி வீசுகிறது. வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்தால் அங்கே காணப்படுகிறது திருவொற்றீஸ்வரர் சன்னிதி.  இதுவே ஒரு தனி ஆலயம்போல் காட்சியளிக்கிறது.

இந்த ஆலயத்துக்கு மேலும் பல சிறப்புகள் உண்டு.  தேவாரத்தில் பாடல் பெற்ற தலமாக சுந்தரரோடு  வெகு நெருக்கமான இடம் இது. சுந்தரர், சங்கிலி நாச்சியாரை சிவபெருமான் முன்னிலையில் மணமுடித்த தலமும் இதுதான்.

பட்டினத்தார் இங்கே பலமுறை வந்திருக்கிறார்.  அவர் முக்தி அடைந்ததும் இங்குதான். அறுபத்து மூன்று நாயன்மார்களில் கலியமூர்த்தி நாயனார் அமரத்துவம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.  சிவன் சன்னிதியில் தினந்தோறும் பல எண்ணெய் விளக்குகளை ஏற்றிவைக்கும் வழக்கம் கொண்ட இவர், வியாபாரம் சரிந்துவிட, மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்.  ஒரு கட்டத்தில் விளக்குகளுக்கு எண்ணெய் வாங்கக்கூட பணம் இல்லாமல் போக, ரத்தத்தாலாவது  விளக்கு ஏற்றுவேன் என்று தன் உடலையே சிதைத்துக் கொள்ளப் போக, ஈசன்  தடுத்தாட் கொண்டாராம்.

நடன முத்திரையுடன் உற்சவர்

பல்லவர்கள் காலத்தில் – அதாவது ஏழாவது நூற்றாண்டிலேயே - இந்த ஆலயம் இருந்திருக்கிறது.  பதினோராம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் இந்த ஆலயம் விரிவடைந்து மேலும் முக்கியத்துவம் பெற்றது.  ஆலயத்தின் திருக்குளம் மிகப் பெரியது. திருவாரூர் தியாகராஜர் போலவே இங்குள்ள உற்சவரும் அதே மாதிரி நடன முத்திரையோடு காட்சியளிக்கிறார்.

ஒரு காலத்தில் மாபெரும் கல்விக் கூடமாகவும் இந்த ஆலயப் பகுதி விளங்கியது.  முக்கியமாக பாணினியின் இலக்கணங்கள் இங்கு விவாதிக்கப்பட்டன.

மாலிகாஃபூர் படையெடுப்பின்போது இந்த ஆலயத்தில் கணிசமான பகுதிகள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் விஜயநகரப் பேரரசு அவற்றைச் சரிசெய்தது.

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியன்று ஆதிபுரீஸ்வரரின் மீதுள்ள கவசம் நீக்கப்படுகிறது.  புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி ஆகியவை இதன்மீது தடவப்படுகின்றன.

குணாலய கணபதி மற்றும் ஆதிசங்கரரின் உருவங்களை இங்கே காண்கிறோம்.  ஆதிபுரீஸ்வரரின் சன்னிதியைச் சுற்றி வருகையில் வட்டப்பாறை அம்மன் காட்சி தருகிறார்.  துர்க்கை, கண்ணகி ஆகியோரையும் இந்த அம்மனுடன் இணைத்துப் பார்க்கின்றனர்.

தியாகராஜ சுவாமி ஆலயம் எது என்று கேட்பதைவிட வடிவுடையம்மன் ஆலயம் எது என்று கேட்டால் பலரும் எளிதாக வழிகாட்டி விடுவார்கள் என்று படுகிறது.  பொதுவாக, அம்மன் என்றால் அவருடைய இணையாக அது அந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானைக் கூறுவார்கள்.  ஆனால், இங்கே எழுந்தருளும் அம்மன் ‘பால’திரிபுர சுந்தரி  (கன்யாகுமரி போல).   சங்கரரால் நிறுவப்பட்டது இந்த சன்னிதி.  பாலாதிரிபுர சுந்தரி என்பதைவிட வடிவுடையம்மன் என்ற பெயர்தான் பிரபலம்.

சென்னைக்கு அருகே அமைந்த மூன்று ஆலயங்களை சக்தி ஆலயங்களாகக் கருதுகிறார்கள்.  இச்சா சக்தியின் வடிவமாக உள்ள திருவுடையம்மன் மேலூரில் காட்சி தருகிறாள்.  கிரியா சக்தியின் அடையாளமான கொடியிடையம்மன் திருமுல்லைவாயிலில் உறைந்திருக்கிறார். வள்ளலார் வருகைபுரிந்து பாடிய திருத்தலம் இது.

ஞானசக்தியின் உருவகம்தான் வடிவுடையம்மன். இவரது சன்னிதியில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளிக்கிழமையிலும் பவுர்ணமியிலும் மேலும் பல மடங்கு கூட்டம், அந்த நாட்களில் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ள நுழைவுக் கட்டணத்தையும் பொருட்படுத்தாது தரிசனத்துக்காகப் பலர் காத்திருக்கிறார்கள்.  இந்த ஆலயத்தில் 27 நட்சத்திரங்களும் வழிபட்டதாக நம்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x