Published : 23 Aug 2018 10:52 AM
Last Updated : 23 Aug 2018 10:52 AM
ஜென் போதனைகள் அனைத்தையும் சீன மொழியிலிருந்து ஜப்பானிய மொழிக்கு மொழிபெயர்ப்பது துறவி டெட்சுகென்னின் கனவாக இருந்தது. இந்தக் கனவை நனவாக்குவதற்காக அவர் நாடு முழுவதும் பயணம் செய்து தேவையான பணத்தைச் சேகரித்தார்.
ஆனால், அவரால் அந்தத் திட்டத்தின் முதல்கட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணத்தை மட்டுமே சேகரிக்க முடிந்தது. இந்த நேரத்தில் உஜி ஆற்றில் எதிர்பாராதவிதமாக பெருவெள்ளம் வந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைப் பார்த்த துறவி டெட்சுகென், தான் சேகரித்துவைத்திருந்த பணத்தை மக்களின் நிவாரணப் பணிகளுக்கு வழங்கினார்.
கொஞ்ச காலத்துக்குப்பிறகு, மீண்டும் தன் கனவை நனவாக்கும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஜப்பானின் பல தீவுகளுக்குப் பயணம்செய்து தனது மொழிபெயர்ப்புத் திட்டத்துக்குத் தேவையான பணத்தை சேகரித்தார். இப்போது அவரிடம் அந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான மொத்த பணமும் இருந்தது.
அவர் தன் ஊருக்குத் திரும்பினார். அப்போது காலரா நோய்த் தொற்றால் அவரது ஊர் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். மீண்டும் தான் சேகரித்து வந்திருந்த மொத்த பணத்தையும் மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காப் பயன்படுத்தினார்.
ஊக்கம் குறையாமல் மீண்டும் தன் மொழிபெயர்ப்புத் திட்டத்துக்குப் பணம் சேர்க்க தொடங்கினார் துறவி. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பானிய மொழியில் அந்த நூலை ஏழாயிரம் பிரதிகளாக வெளியிட்டார். துறவி டெட்சுகென், புனித ஜென் வசனங்களை மூன்று பதிப்புகளாக வெளியிட்டதாக அம்மக்கள் கூறுகின்றனர். ஆனால், முதல் இரண்டு பதிப்புகள் கண்ணக்குப் புலனாகாதவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT