Published : 23 Aug 2018 10:52 AM
Last Updated : 23 Aug 2018 10:52 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 45: உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது;

ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்;

ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்,

ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.

(திருமந்திரம், 188)

உடையவன் ஒருவன், தன்னுடைய நிலம் ஒன்றை, ஐவருக்குக் குத்தகை உரிமையாக வழங்கினான். ஐவரும் தங்கள் திறனால் அதை நன்றாகப் பேணி வந்தார்கள். நிலமும் பொன்னாக விளைந்து கொடுத்தது. ஒருகட்டத்தில் நிலத்துக்கு உடையவன் குத்தகையை மாற்றக் கருதி அவர்கள் ஐவரையும் நிலப் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஓலை விட்டான். ஐவரும் அந்த நிலத்தைக் கைவிட்டு விலகினார்கள்.

இங்கே ஐவர் என்றது ஐம்புலன்களை; நிலம் என்றது உயிரை; விளைதல் என்பது, அறிந்தும் உணர்ந்தும் உயிர் தன்னை மெருகேற்றிக்கொள்ளும் தொழிற்பாட்டை; நாயகன் என்றது இறைவனை; ஓலை என்றது சாவின் அழைப்பை; காவல் விடுதல் என்றது சாவை.

உயிர் ஓர் அறிவுப் பொருள். மேசை, நாற்காலிபோல எதையும் அறியவொண்ணாத சடமாக இல்லாமல், எல்லாவற்றையும் அறிகின்ற இயல்புடையது. ஆனால், எதையும் அது தானாக அறியாது. அறிவிக்க அறியும். அழுந்தி அறியும். அதாவது, எதையும் தோய்ந்து அனுபவித்தே அறியும். உயிரை, உலகப் பொருள்களில் தோயச் செய்து, அதற்கு உண்மை பொய்ம்மைகளை அறிவிப்பதற்குப் புலன்கள் தேவை. புலன்கள் இல்லாமல் உயிரின் அறிவு நிகழ்வதில்லை. உழுநிலத்துக்கு உழுவான் தேவை என்பதைப் போல; உழுகிறவன் கைவிட்ட நிலம் கரம்பையாய்ப் போவதைப் போல.

பொறிஇன்றி ஒன்றும் புணராத புந்திக்கு

அறிவுஎன்ற பெயர்நன்று அற.

(திருவருட்பயன், 15)

- என்று உயிரின் நிலை சொல்கிறது, உமாபதி சிவம் எழுதிய சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றான திருவருட்பயன். உயிரின் இயல்பு அறிவதுதான் என்கிறீர்கள்; உயிருக்குப் பெயரே அறிவுதான் (சித்து) என்கிறீர்கள்; ஐந்து பொறிகளின் துணை இல்லாமல் எந்த ஒன்றையும் அறிய முடியாமல் தடுமாறுகிற உயிருக்கு அறிவு என்ற பெயரா? நன்றாகத்தான் இருக்கிறது.

புலன் சார்பற்ற அறிவு?

எனவே, உயிர் அறிய வேண்டுமானால், அறிவிப்பதற்குப் புலன்கள் வேண்டும். புலன்கள் எல்லாவற்றையுமே அறிவிக்குமா? உலகியலுக்கு அப்பால் உள்ள பாதாள, பரலோகங்களை அறிவிக்குமா என்றால், வாய்ப்பில்லை. அவை கருத்தால் மட்டுமே சென்றடையக்கூடிய இடங்கள்; புலன்களால் அவற்றுக்கு வழிநடத்த முடியாது. ஆனால், உலகியலுக்கு அப்பால் ஏதேனும் இருக்கின்றனவா என்ற கருத்துலக ஆய்வுக்குள் நுழைய வேண்டுமானால், முதலில் பருவுலகில் இருப்பவற்றை அறிய வேண்டாமா?

புலன்சார்பற்ற அறிவு (a priori) என்று ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது புலன்களைப் பயன்படுத்தாமல், வெறும் சிந்தனையின் வழியாகவே நாம் சிலவற்றை அறிய முடியும் என்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாகக் கணக்கியலைக் காட்டுகிறார்கள். நாம் எப்படிக் கணக்கிடுகிறோம்? என்னிடம் இரண்டு மாம்பழங்கள் இருக்கின்றன; நண்பர் மூன்று மாம்பழங்கள் கொண்டு வந்தார். எடுத்துவைத்து எண்ணினால், என்னிடம் கையில் இருப்பவை மொத்தம் ஐந்து. ஐந்துமே புலன்களால் கண்டவை. இது எளிய கணக்கிடும் முறை.

இதைக் கொஞ்சம் மாற்றிக் கருதிப் பார்க்கலாம்: என்னிடம் இரண்டு மாம்பழங்கள் இருக்கின்றன; இன்னும் மூன்று மாம்பழங்களைச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவற்றையும் சேர்த்தால் என்னிடம் இருக்கக்கூடிய மாம்பழங்கள் மொத்தம் ஐந்து. இந்த முறை, கையில் இருப்பவை இரண்டு; கருத்தில் இருப்பவை மூன்று. அதாவது புலன்களால் கண்டவை இரண்டு; காணாதவை மூன்று.

இன்னும் கொஞ்சம் மாற்றிக் கருதிப் பார்க்கலாம்: என்னிடம் எதுவுமே இல்லை. உடன் பணியாற்றுகிறவர்களில் ஒருவர், மாம்பழம் வாங்கினேன்; நாளை வரும்போது இரண்டு கொண்டு வருகிறேன் என்கிறார்.  மற்றொருவர், நானும் வாங்கினேன்; மூன்று கொண்டு வருகிறேன் என்கிறார். இரண்டும் மூன்றும் ஐந்து என்று கணக்கிடுகிறேன் நான். இந்த முறை, கையில் எதுவுமே இல்லை; ஐந்தும் கருத்தில். அதாவது, புலன்களால் கண்டவை ஒன்றுமில்லை; காணாதவை ஐந்து.

எனவே, கணக்கியலுக்குப் புலன்களால் காண வேண்டும் என்ற அவசியமில்லை; கணக்கியல் புலன் சார்பற்றது என்று சொல்லப்படுகிறது. இரண்டும் மூன்றும் ஐந்து என்று கண்களால் பார்க்காமல் கருத்தாலேயே கணக்கிட்டீர்கள்; சரி. ஆனால் இரண்டையும் மூன்றையும் எப்படி அறிந்தீர்கள்? இரண்டு மாம்பழம், மூன்று நெல்லிக் காய்கள் என்று கண்டும் கையால் தொட்டு எடுத்து வைத்து எண்ணியும்தானே அறிந்தீர்கள்?

புலன்களால் அறியப்படக்கூடிய எதுவுமே இல்லாமல், இது ஒன்று, இவை இரண்டு, மூன்று என்று எப்படி எண்ணுவீர்கள்? எண்ணி அறிந்த பிறகு அவை கருத்துருவம் ஆகிவிட்ட எண்கள் என்பது சரி; ஆனால், எண்ணிக் கருத்துருவம் ஆகும்வரை அவை பருண்மையான பொருட்கள்தாமே? பொருட்களே இல்லாமல் எண்கள் எப்படி உங்கள் மண்டைக்குள் வந்தன? பொருட்களே இல்லாமல் நம்முடைய எண்ணத்துக்குள் எண்கள் வரலாம் என்றால், எதுவும் வரலாந்தானே? பிறகு ஏன் நாம் பார்க்க வேண்டும்? கேட்க வேண்டும்? சுவைக்க வேண்டும்?

எல்லாம் மனக்கணக்கு தான்

எண்ணிப் பார்த்தால், கருத்துருவங்களை உருவாக்குவதும் காட்சி உருவங்களே அல்லவா? கருத்துருவமான கடவுளுக்கு நாம் வடிவம் கொடுத்ததுங்கூடக் காட்சி உருவங்களைப் பார்த்தே அல்லவா? மகனுக்குப் பெண் பார்த்துவிட்டு வந்து, மருமகள் மகாலட்சுமியைப்போல் இருக்கிறாள் என்னும் தாய்மார்களில் எவர் மகாலட்சுமியைப் பார்த்திருக்கிறார்கள்? மண்ணில் கண்டவளின் வடிவந்தான் விண்ணில் வாழ்பவளுக்கும் என்றொரு மனக்கணக்குதான்.

ஆக, ஐந்து புலன்கள் உருவாக்கித் தரும் அடிப்படை இல்லாமல் அறிவு இயல்வதில்லை; புலன்களோ உடம்பின் வழியில் வருபவை. எனவே, அறிவைப் பெறுவதற்கு ஆதாரமாக இருப்பது உடம்பு. அதை இழிவென்றும் பொய்யென்றும்  கருத வேண்டாம்; ஊத்தைச் சடலம் என்றும் உப்பிருந்த பாண்டம் என்றும் இகழ வேண்டாம் என்று துந்துபி முழங்குகிறார் திருமூலர்:

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்;

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,

உடம்பை வளர்த்தேன்; உயிர்வளர்த் தேனே.

(திருமந்திரம் 724)

உடம்பு இருந்தால்தானே அதில் குடியிருக்கும் உயிர் அறிவைச் சேகரிக்க முடியும்? உடம்பு அழிந்தால், அறிவைச் சேகரிக்கும் உயிரின் பணி பாதியிலேயே தொங்கிப் போய்விடாதோ? அது முற்றுப் பெற வேண்டாமோ? ஆகவே உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேன்.

உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்;

உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்;

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று

உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே.

(திருமந்திரம் 725)

சில மரபுகள் சொல்வதைப் போல உடம்பு அழுக்கும் இழுக்கும் என்றுதான் நானும் எண்ணியிருந்தேன்; ஆனால், இறைவனையே அறிவதென்றால்கூட, உடம்பில்லாமல் எப்படி அறிய? உடம்பில்லாமல் இறைவனை அறிய முடியாதென்றால், இறைவன் இருப்பிடமும் உடம்பே அல்லவா? ஆகவே, உடம்பையே கோவிலாகக் கருதிக் காக்கும் வகையெல்லாம் காக்கின்றேன்.

ஊழிப் பெருவெள்ளம் சூழ்கிறது. ஓடிப் பிழைக்க வேண்டுமென்றால் ஓடம் வேண்டாமா? திருமூலரின் பெயரன் சிவவாக்கியர் சொல்கிறார்:

ஓடம் உள்ளபோதலோ ஓடியே உலாவலாம்?

ஓடம் உள்ளபோதலோ உறுதிபண்ணிக் கொள்ளலாம்?

ஊழிப் பெருவெள்ளத்தால் சூழப்பட்டவர்களே! ஓடத்தை உறுதி செய்துகொள்க!

(உடலைப் போற்றுவோம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x