Published : 02 Aug 2018 11:35 AM
Last Updated : 02 Aug 2018 11:35 AM
போதிச்சிட்டா என்ற பௌத்தக் கருத்தாக்கம் வழியாக வாழ்வில் அமைதியையும் கருணையையும் அடைவதை ஆராய்ந்த புத்த பிக்குனி பேமா சோட்ரோன். ‘போதிச்சிட்டா’ என்பது திறந்த மனத்தை, அதாவது எவ்வளவு மோசமான மனிதராக இருந்தாலும் அவருக்குள்ளும் இருக்கும் மென்மையான இடத்தைப் பற்றி விவரிப்பதாகும். பௌத்தத்தின் இந்தப் பாரம்பரிய கருத்தாக்கத்தைச் சமகால மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காகத் தொடர்ந்து பணியாற்றிவருகிறார் பேமா சோட்ரோன்.
“பெரும்பாலான மக்கள் தங்களுக்குள் இருக்கும் மென்மையான இடத்தைக் கடினமானதாக மாற்றிவிடுகிறார்கள். இதன்மூலம் மற்றவர்களுக்காக மனத்தில் தோன்றும் பரிவுணர்வு எழாமல் அடைத்துவிடுகிறார்கள்” என்று இந்த போதிச்சிட்டா தத்துவத்தை விளக்குகிறார். மனத்தில் எழும் போதிச்சிட்டா உணர்வை, முன்தீர்மானங்கள், தீர்ப்புகள் எனச் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட தடைகளால் தடுக்க முயல்கிறோம்.
ஆனால், நம் மனத்தில் இருக்கும் மென்மையான இடங்கள் ’சுவரில் இருக்கும் விரிசல்கள்’ போன்று அப்படியே நிலைபெற் றிருக்கின்றன. அவை நமது உண்மையான இயல்பை நமக்குச் சுட்டிக்காட்டும்படி, எப்போதும் நமக்குள் இருக்கின்றன.
பேமா சோட்ரோனின் ‘தி ப்ளேஸ் தட் ஸ்கேர் யூ: எ கைடு டூ ஃபியர்லெஸ்நெஸ் இன் டிஃபிகல்ட் டைம்ஸ்’ (The Place that Scare You: A Guide to Fearlessness in Difficult Times) என்ற புத்தகம், மத்திய கிழக்கு நகரம் ஒன்றுக்கு வரும் அமெரிக்கப் பெண்ணின் அனுபவமாக எழுதப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்கள் என்ற காரணத்தால் அவரும் அவர் தோழியும் தொடர்ந்து ஏளனம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற நிலையை அங்கே எதிர்கொண்டார்கள். இந்த உணர்வு, அவருக்கு வரலாற்றில் இந்தக் கட்டத்தை எதிர்கொள்ளும் சிறுபான்மையினரின் வலியைப் புரிந்துகொள்ள உதவியது.
இந்த மாதிரியான ஒரு சம்பவத்தை எதிர்கொள்ளும் மனிதர்கள், பொதுவாகத் தங்களைத் தங்கள் ஓட்டுக்குள் பின்னிழுத்துக் கொள்வார்கள். ஆனால், இந்தச் சம்பவத்திலிருந்து பேமா, மதிப்புமிக்க ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். “போதிசத்துவர்கள், துணிச்சலுடன் வலியை எதிர்கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களைவிடத் திறந்த மனத்துடன் இருப்பவர்கள். அந்த நேரத்தில், ஒரு போதிச்சத்துவரைப் போன்று முதல் அடியை நான் எடுத்துவைத்தேன்” என்று சொல்கிறார் பேமா.
உணர்வுகளை அனுமதித்தல்
போதிச்சிட்டா போதனைகள் முதன்முதலில் இந்தியாவில்தான் பிறந்தன. திபெத்தில் னொன்றாம் நூற்றாண்டில் அவை அறிமுகமாயின. அன்றாட வாழ்க்கையின் அசவுகரியங்களில் இருந்து தப்பிப்பதற்கான வழியாகப் பலரும் தியானத்தை நம்புகிறார்கள் என்று சொல்கிறார் பேமா. ஆனால், போதிச்சிட்டாவின் வழியில் செல்வதற்கு முற்றிலும் இதற்கு எதிர்மறையான வழியில் பயணிக்க வேண்டும் என்று அவர் விளக்குகிறார். அன்றாடம் நமக்குள் எழும் நல்லது, கெட்டது என இரண்டு உணர்வுகளுக்குள்ளும் ஆழமாக ஊடுருவிச் செல்ல வேண்டும்.
அப்போது நம்மால் ஞானத்தை அடைய முடியும். முதல் முறையாக தியானம் செய்பவர்கள் அமைதி அடைவதற்குப் பதிலாக தங்களுக்குள் வலிமையான எண்ணங்கள் எழுவதை உணர்வார்கள். இந்த வலிமையான எண்ணங்களை அனுமதிக்கும்போது அவற்றை நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும். “உங்களுக்கு ஏதாவது ஒன்று கோபத்தை ஏற்படுத்துகிறது என்றால் அந்தக் கோபத்தை முழுமையாக உணர்வதற்கு அனுமதியுங்கள். அப்படிச் செய்வதன்மூலம் உங்களுக்குள் குற்ற உணர்வு எதுவும் எழாமல் உங்களைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடியும்” என்று விளக்குகிறார் அவர்.
வாழ்வு மட்டும் அல்ல
இந்தப் புத்தகத்தில், புத்தரிடம் தான் கற்றுக்கொண்ட கருத்தாக இதை முன்வைக்கிறார். “நாம் எப்போதும் ஒரு சாதாரண வாழ்க்கையை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மனிதர்களையும் சூழ்நிலைகளையும் நம்மால் கணிக்க முடியாது. இது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.”
மனிதர்கள் தங்களுக்குப் பிடிக்காத தாங்கள் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கும்போது, மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள். சில விஷயங்கள் நாம் நினைத்ததற்கு எதிராக நடக்கும்போது நமக்கு வலி ஏற்படுகிறது. ஆனால், அதை நமது தனிப்பட்ட தோல்வியாக நினைக்கத் தேவையில்லை.
ஏனென்றால், இதுதான் வாழ்க்கையின் இயல்பு. இதில் நாம் விரும்புவது, விரும்பாதது என இரண்டுமே கிடைக்கும் என்று விளக்குகிறார் அவர். ’நான் நன்றாக இருக்கிறேன்’ என்று நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என இரண்டு விதமான நாட்களிலும் நம்மால் கூறமுடியும். இப்படிக் கூறுவதால் அன்றாட வாழ்க்கையில் முன்னேறுகிறோம்.
அச்சுறுத்தும் இடங்கள்
வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் விரும்பத்தக்கவையாக இருக்க வேண்டும் என நாம் விரும்புவதைச் சுட்டிக்காட்டுகிறார் பேமா. நிரந்தரம் என்ற கருத்தாக்கத்துடன் நம்மை உணர்வுபூர்வமாக இணைத்துக்கொள்கிறோம். அதனால், அந்த நிரந்தரத்தை உணர முடியாமல் போகும்போது உடைந்து பாதுகாப்பற்ற நிலைக்குச் சென்றுவிடுகிறோம்.
‘மாற்றத்தில் அமைதியைக் காண்’ என்பதுதான் பௌத்தத்தின் வழி. நிச்சயமற்ற தன்மை நம்மை அச்சுறுத்துவதால்தான் நிச்சயத்தை விரும்புகிறோம். “நாம் எல்லாவற்றையும் சரியாகச் செய்தால், பாதுகாப்பான, வசதியான இடத்தில் மீதி வாழ்க்கையைக் கழிக்கலாம்” என்று பெரும்பாலானோர் விரும்புவதைச் சுட்டிக்காட்டுகிறார் பேமா.
ஆனால், வாழ்க்கை எப்போதும் அனைவருக்கும் நிச்சயமற்றதாகவே இருக்கிறது. நம்மை அச்சுறுத்தும் உணர்வைக் களைய நினைக்காமல், அதற்குள் ஊடுருவிப் பயணக்கும்போது அதன் வீரியத்தை அது இழந்துவிடுகிறது. ஒரு விஷயத்தைக் கையாள முடியாத சூழலில் எப்படி உணர்கிறோம்? நாம் எதைவிடுத்து ஓட நினைக்கிறோமோ அதைப் பிடிப்பதுதான் வளர்ச்சிக்கான வழி. “துரோகம், மறுப்பு என எந்த ஒரு வலிமிகுந்த உணர்விலும் நிலைபெற்றிருக்கும்போது, அது நம்மை மென்மையானதாக மாற்றுகிறது” என்று சொல்கிறார் அவர்.
இந்த உணர்வுகளை நமக்குள் அடக்கிவைக்கும்போது உடைந்துபோய்விடுகிறோம். ஒரு வலியை ஆழமாக உணர்வது கடினமானது என்று நினைக்கலாம். ஆனால், இப்படிச் செய்வது நமக்கு நிம்மதியைக் கொடுக்கும். இது நமக்கு நாமே கருணைக் காட்டிக்கொள்வதாகும் என்று விளக்குகிறார் அவர். அப்படிச் செய்யாமல் விடும்போது, நமக்குள் அகந்தை உருவாகிறது. அந்த அகந்தை நம்மை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துகிறது. நமக்குள் இருக்கும் அச்சுறுத்தும் இடங்களுக்குத் துணிச்சலுடன் பயணப்படும்போதுதான் இந்த அகந்தையைவிட்டு வெளியேற முடியும்.
இந்தப் புத்தகத்தில் பேமா விளக்கியிருக்கும் கருத்துகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. ஆனால், அவை துல்லியமாகச் செயல்படுவதாக நிரூபணமாகியிருக்கின்றன. அமைதியான கருணை மிகுந்த வாழ்க்கையை விரும்பும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் அவர்.
பேமா சோட்ரோன்
1936-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த பேமா சோட்ரோனின் இயற்பெயர் டெய்த்ர ப்ளோம்ஃபீல்ட்-ப்ரவுன். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆரம்ப கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இவர் தன் முப்பத்தைந்தாவது வயதில் ‘பிரஞ்சு ஆல்ப்’ மலைப்பகுதிக்குச் சென்றபோது, திபேத்திய பவுத்த குரு லாமா சைம் ரின்போச்சேவின் மூலம் அவருக்கு பௌத்தம் அறிமுகமானது.
அதற்குப் பிறகு, 1972-ம் ஆண்டு, பேமா அவரது மூல குரு சோக்யம் ட்ருங்பா ரின்போச்சேவிடம் ஆன்மிகக் கல்வி கற்றார். 1981-ம் ஆண்டு, திபேத்திய பாரம்பரிய புத்த பிக்குனியாக மடாலய நியமனம் பெற்றார். தற்போது கனடாவின் ‘கம்போ அப்பே’ புத்த மடாலயத்தின் இயக்குநராக இருக்கிறார். ‘தி விஸ்டம் ஆஃப் நோ எஸ்கேப்’, ‘ஸ்டார்ட் வேர் யூ ஆர்’, ‘வென் திங்க்ஸ் ஃபால் அபார்ட்’ உள்ளிட்டவை இவரது படைப்புகளில் சில.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT