Last Updated : 30 Aug, 2018 10:41 AM

 

Published : 30 Aug 2018 10:41 AM
Last Updated : 30 Aug 2018 10:41 AM

ஆன்மா என்னும் புத்தகம் 17: புலன்கள் மட்டும் போதாது

“மானுட அனுபவத்தின் உண்மையான நோக்கம் எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கான பதிலை நாம் தேட முயன்றிருக்கிறோமா? கேரி ஸுகாவ் அதற்கான பதிலை முன்வைக்கிறார். ஆன்மாவின் ஆரோக்கியம்தான் அந்த உண்மையான நோக்கம் என்கிறார் அவர்.

கேரி ஸுகாவ் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆன்மிக எழுத்தாளர்.1989-ம் ஆண்டு வெளிவந்த இவரது ‘தி சீட் ஆஃப் தி சோல்’ (The Seat of the Soul) என்ற புத்தகம், வாழ்க்கையில் நிறைவை உணர்வதற்கு ஆன்மாவையும் ஆளுமையையும் எப்படி இணைத்துப் பார்க்க வேண்டும் என்பதை விளக்குகிறது.

 தத்துவ அறிஞர் வில்லியம் ஜேம்ஸ், உளவியல் நிபுணர் கார்ல் யுங், அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்றவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து ஆய்வுசெய்துவந்தார்  கேரி ஸுகாவ். அந்த ஆய்வின் முடிவில், மனித வாழ்க்கை, பிரபஞ்சம் பற்றிய சிறந்த கருத்துகள் ‘ஆளுமை’க்கு அப்பாற்பட்டு இருப்பதாக முடிவுக்கு வருகிறார் அவர்.

இந்த ஆளுமைக்கு அப்பாற்பட்டு இருக்கும் திறன் ஆன்மிக உணர்வாகவோ சமய உணர்வாகவோ இருக்கும் என்று அவர் நம்பவில்லை. அதை அவர் ‘உண்மையான ஆற்றல்’ என்று குறிப்பிடுகிறார். இந்த ஆற்றல்தான் நம்மை ஆன்மாவுடன் இணைத்து, வாழ்க்கைக்கான நோக்கத்தை உருவாக்குகிறது என்கிறார் அவர். பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் சிறந்த நோக்கத்துடன் இந்த நோக்கமும் பின்னிப் பிணைந்திருப்பதாக இந்தப் புத்தகத்தில் அவர் விளக்குகிறார்.

உண்மையான ஆற்றலின் பரிணாமம்

ஐம்புலன்களின் உதவியோடு நாம் அறிந்துவைத்திருக்கும் உலக அறிவுதான் நமக்குப் பரிணாமம் என்னும் கருத்தை விளக்குகிறது. ஆனால், ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டுப் பிரபஞ்சத்தை விளக்க வேண்டுமானால், நமக்குப் பிரபஞ்சத்தைப் பற்றி பெரிய அளவிலான புரிதல் வேண்டும் என்கிறார் கேரி.

பெரும்பாலான நேரம், ஐம்புலன்களால் நம்மால் உணர முடியாத விஷயங்களின் இருப்பை நாம் கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அதனால், ஐம்புலன்களால் இயங்கும் இந்த உலகத்தில், பிழைத்திருப்பதற்கான திறனே பரிணாமம் அடைவதற்கான முக்கிய அம்சமாகப் பார்க்கலாம். அதனால், பிழைத்திருக்க முடியாமல் போய்விடுமோ என்பது குறித்த  பயமே மனித உறவுகளையும் அதன் உளவியல் அடிப்படைகளையும் விவரிக்கிறது.

சூழல், இயற்கை, மற்ற மனிதர்கள், மற்ற நாடுகள், பொருளாதாரம் போன்றவற்றைக் கட்டுபடுத்துவதே ஆற்றலின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. எனவேதான், அதிகாரம் என்பது புறம்சார்ந்த விஷயமாக இருக்கிறது. ஆனால், உலகின் முக்கிய ஆளுமைகளைப் பார்க்கும்போது, அவர்களில் பெரும்பாலானவர்களுக்குப் புறவயமான  எந்த அதிகாரமும் இருக்கவில்லை.

ரோமானியப் பேரரசைக் காட்டிலும் இயேசு கிறிஸ்துவின் சொல்லும் செயலும் வலிமைமிக்கவையாக இருந்ததை வரலாறு நிரூபிக்கிறது என்கிறார் கேரி ஸுகாவ். ‘தி சீட் ஆஃப் தி சோல்’ என்ற இந்தப் புத்தகம், அன்பு, பணிவு, கருணை, தெளிவான நோக்கம் போன்றவை எப்படிச் செல்வாக்குடன் செயல்படுகின்றன என்பதை விளக்குகிறது.

ஆன்மாவும் ஆளுமையும்

இந்தப் பூமியில் ஓர் உடலுக்குள் நுழைவதற்குமுன், தான் எதைச் சாதிக்க வேண்டும் என்பது ஓர் ஆன்மாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், நாம் பிறந்தவுடன் இந்த நோக்கம் மறந்துவிடுகிறது. நாம் பிறக்கும்போதுதான் நம் உடலுடன் ஆளுமையும் பிறக்கிறது. ஆனால், நமது ஆன்மா நம் உடலுக்கு அப்பாற்பட்டும் வாழ்கிறது. நமது ஆளுமைக்கு விருப்பு, வெறுப்புகள் இருக்கின்றன.

ஆனால், நமது ஆன்மாவோ சில நோக்கங்கள் நிறைவடைவதைப் பார்க்க விரும்புகிறது. அதனால், ஆன்மா தனது நோக்கங்களை நிறைவேற்ற வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டுகிறது. ஆனால், ஆளுமையை ஆசைகளே வழிநடத்துவதால், இறுதியில் அவைதான் நம் வாழ்க்கையை உண்மையில் வடிவமைப்பவையாகி விடுகின்றன. ஏனென்றால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆன்மாவுக்கும் ஆளுமைக்குமான வித்தியாசம் தெரிவதில்லை.

அதனால், அவரவர் ஆளுமைக்குத் தகுந்தபடியே பெரும்பாலானோர் வாழ்கிறார்கள். ஆனால், ஞானம் பெற்றவர்கள் ஆன்மாவை மிளிரச்செய்து, அது தன் நோக்கத்தை அடைய வழிச்செய்கிறார்கள்.

பயம், கோபம், பொறாமை, துக்கம், வருத்தம், அலட்சியம், வெறுப்பு போன்ற ‘எதிர்மறையான’ உணர்வுகளை ஆளுமையால்தான் உருவாக்கவும் அனுபவிக்கவும் முடிகிறது. ஆன்மாவைப் பற்றிய விழிப்புடன் இருப்பவர்கள் தங்களிடமும் மற்றவர்களிடமும் இந்த நிலைகளுக்கு அப்பாற்பட்டும் பார்க்க முடியும்.

ஆன்மாவின் நோக்கங்களை நிறைவேற்ற முடிவெடுக்கும்போது இயல்பாகவே நாம் ஆற்றல்மிக்கவர்களாக ஆகிவிடுகிறோம். ஆன்மா கேட்கும் விஷயங்களை நாம் கொடுக்க மறுக்கலாம். ஆனால், அதன் தேவைகளைக் கவனித்துச் செயல்படுத்துவதில்தான் நமது பரிணாமம் அடங்கியிருக்கிறது. உண்மையான அதிகாரத்தைப் பெற விரும்பினால், ஆளுமையையும் ஆன்மாவையும் ஒழுங்குபடுத்துவதே நமது வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

உள்ளுணர்வுக்கான காரணம்

உள்ளுணர்வை நம்புவதற்கு நமக்குக் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. நாம் வாழ்க்கையை ஐம்புலன்களால் உணர மட்டுமே கற்றுக்கொள்கிறோம். அதனால் முன்னுணர்வுகளையும் விளக்கமற்ற உள்ளுணர்வுகளையும் அலட்சியம் செய்கிறோம். ஐம்புலன்களால் இயக்கப்படும் ஒரு நபர், உள்ளுணர்வுகளை ‘அறிவாக’ கருத மாட்டார். அதனால், அவற்றை  வெற்று ஆர்வங்கள் என்று நினைத்து அலட்சியப்படுத்துவார். உள்ளுணர்வுகளை அடைவதற்கு முதலில் வெளிப்படுத்தாமல் மனத்தில் எழும் உணர்வுகளை அடையாளம் காணக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நமது எண்ணங்களை நாமே தள்ளிநின்று சக்தியைத் தராமல் கவனிக்கும்போது, நமது மனம் அமைதியடைகிறது. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்துக்கும் காரணம் இருக்கிறது, அவை நன்மைக்குத்தான் நடைபெறுகின்றன என்ற கருத்தை நம்புவதன் மூலம் உள்ளுணர்வை உருவாக்க முடியும் என்று சொல்கிறார் கேரி ஸுகாவ்.

நமக்குள்ளிருக்கும் ஆற்றலை உணராமல், ஆன்மாவின் ஞானத்தைப் புரிந்துகொள்ளாமல் பணம், புகழ், பதவி போன்றவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாம் எப்போதும் உண்மையான அதிகாரத்தை அடைய முடியாது என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம். வாழ்க்கை, பிரபஞ்சம் போன்றவற்றைப் பற்றிய நமது பார்வையை மாற்றும் வலிமைவாய்ந்தது இந்தப் புத்தகம்.

கேரி ஸுகாவ்

இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆன்மிக ஆசிரியரும் எழுத்தாளரும் ஆவார். 1979-ம் ஆண்டு, இவர் எழுதிய ‘தி டான்சிங் வூ லி மாஸ்டர்ஸ்’ புத்தகம் அமெரிக்காவின் சிறந்த அறிவியல் புத்தகத்துக்கான விருது பெற்றிருக்கிறது. குவாண்டம் இயற்பியலையும் சார்பியலையும் இணைக்கும் அம்சங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார்.

மாற்று ஆன்மிகப் பாதையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர்களில் இவர் முக்கியமானவர். பிரபலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’வில் இவர் 36 முறை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். ‘சோல் ஸ்டோரிஸ்’, ‘தி ஹார்ட் ஆஃப் தி சோல்’ ‘தி மைன்ட் ஆஃப் தி சோல்’ ‘சோல் டு சோல்’ போன்றவை இவரது படைப்புகளில் சில.

தற்போது வட கலிஃபோர்னியாவில் வசித்துவரும் இவர், ‘தி சீட் ஆஃப் தி சோல் இன்ஸ்டிடியூட்’ என்னும் மையத்தை நிர்வகித்துவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x