Last Updated : 02 Aug, 2018 11:01 AM

 

Published : 02 Aug 2018 11:01 AM
Last Updated : 02 Aug 2018 11:01 AM

ஒன்றில் இரண்டு 09: அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அந்தப் பெண் மறுபிறவியை நோக்கிச் சென்றுகொண்டி ருந்தாள். பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவிதானே. ஆனால், அவளுக்குப் பிரசவ வலியோடு அச்சமும் அதிர்ச்சியும் மிக அதிகமாக இருந்தது.

கணவன் வெளியே சென்றிருக்கிறான். அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்கலாம் என்றால் எழுந்து நடக்க முடியவில்லை. தன் கதறலாவது யாரையாவது அந்த இடத்துக்கு அழைத்துக்கொண்டு வரும் என்று எண்ணி அவள் கதறினாள்.

“அம்மா.. அம்மா..’’.

 அவளுடைய அம்மா வேறொரு இடத்தில் தவித்துக்கொண்டிருந்தாள். மகள் திருச்சியில் இருக்க, தாய் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்து வந்தாள். அந்த நகரில் வாழ்ந்த அரதனகுப்தனின் மனைவிதான் அந்தத் தாய். அவர்களது ஒரே மகள் ரத்னாவதி. சிறு வயதிலிருந்தே ரத்னாவதிக்கு சிவபெருமான் மீது பெரும் பக்தி. இது கண்டு பெற்றோர் மகிழ்ந்தனர். குழந்தை சிறுமி ஆனாள்.

சிறுமி இளமங்கை ஆனாள். திருமணக் கவலை பெற்றோரைப் பற்றிக்கொண்டது. அப்போது திருச்சியில் வாழ்ந்த தனகுப்தன் என்பவருக்கு வரன் பார்க்கிறார்கள் என்ற செய்தி வந்தது. தனகுப்தனைப் பற்றி ஊரில் நல்லபடியாகப் பேசினார்கள். இருதரப்பினரின் சம்மதத்துடன் தனகுப்தனுக்கும் ரத்னாவதிக்கும் திருமணம் நடந்தது.

ஆனால், இதைத் தொடர்ந்து ஒரு துக்கமும் இந்தக் குடும்பத்தைச் சூழ்ந்தது. ரத்னாவதியின் தந்தை இறந்தார். அவர் மனைவி தனியாகவே காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்தார்.

ரத்னாவதி கர்ப்பமானாள். பிரசவ நேரம் நெருங்கியது. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தாய் கிளம்பினாள். பிரசவ நேரத்தில் மகளுக்கு உதவியாக இருக்க வேண்டாமா? ஆனால், சோதனைகள் காத்திருந்தன. மழை கொட்டித் தீர்த்தது. காவிரியில் வெள்ளம் கரை புரண்டது. வெள்ளம் கொஞ்சமாவது வடிந்தால்தானே ஓடம் இயங்கும். மறுகரையைச் சேரலாம்.

அம்மா அங்கே தவித்துக் கொண்டிருக்க, மகள் ரத்னாவதி பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். கணவனும் அருகில் இல்லை. இன்னமும் தன் தாய் வந்து சேராததில் அவளுக்குத் துக்கம் பீறிட்டு வந்தது. கொட்டும் மழை காரணமாக அவரவரும் தங்கள் வீட்டுக் கதவைச் சாத்திக் கொண்டிருந்தார்கள். ரத்னாவதியின் கூக்குரல்கள் அவர்களது காதுகளை எட்டவில்லை.

‘’சிவபெருமானே இந்த நேரத்தில் நான் யாரை உதவிக்கு அழைப்பது?’’ இப்படி யோசித்த அவள் மனத்தில் ஓர் ஒளி. ‘’சிவபெருமானே, செவ்வந்தி நாதா, உன் பாதமே சரணம்.
இந்த நேரத்தில் உன் உதவி வேண்டும்’’ என்று கதறத் தொடங்கினாள்.

அவள் கதறலுக்குப் பலன் இருந்தது. அவள் அம்மா வீட்டுக்குள் வேக வேகமாக நுழைந்தாள்.

“ஏன் இவ்வளவு தாமதம்? என்று பீறிட்டு வந்த அழுகையினூடே அவள் கேட்க, அந்தத் தாய் அவள் தலையைக் கோதிவிட்டாள். பின்னர் பரபரப்பாகச் செயல்பட்டாள். மிக நேர்த்தியுடன் பிரசவம் பார்த்தாள்.

சுகப் பிரசவம் ஆனது. தன் அருகில் இருக்கும் குழந்தையை ஆனந்தமாகப் பார்த்தாள் ரத்னாவதி. பிறகு தன் தாயை நன்றிப் பெருக்குடன் பார்த்தாள். அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு அந்தத் தாய் சற்று நேரத்தில் வருவதாகக் கூறி விடை பெற்றாள்’.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவசர அவசரமாக அந்த வீட்டுக்குள் நுழைந்தாள் ரத்னாவதியின் தாய். ‘’பிரசவம் ஆகிவிட்டதா? அடடா உன் உதவிக்கு நான் இல்லாமல் போய் விட்டேனே’’ என வருந்தினாள்.

தாய் பார்த்த பிரசவம்

ரத்னாவதிக்குத் திகைப்பு. ‘’என்னம்மா உளறுகிறீர்கள்? பிரசவத்தின்போது எனக்கு எல்லா உதவிகளையும் செய்தது நீங்கள்தானே’’ என்றாள்.

இப்போது அதிர்ச்சி அடைவது அந்தத் தாயின் முறை. ‘’ரத்னா, உளறுவது நீயா நானா? காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் என்னால் குறித்த நேரத்துக்கு வர முடியவில்லை. வெள்ளம் அடங்கிய பிறகு வேகமாகக் கிளம்பி இப்போதுதான் இங்கே வருகிறேன்’’ என்றாள்.

அப்படியா? அப்படியானால் தனக்குப் பிரசவம் பார்த்த தாய் யார்? ரத்னாவதிக்குக் குழப்பம் ஏற்பட்டது. சிவபெருமானைத் தியானித்தாள். ‘’ஈசனே, தெளிவு கொடு’’ என்றாள். அடுத்த நொடி அவளுக்குப் பிரசவம் பார்த்த தாய் அங்கே வந்து சேர்ந்தாள்.

இரண்டு தாய்களும் ஒரே மாதிரி இருந்தனர். இரட்டையர்களா? ரத்னாவதி பிரமித்தபோதே பிரசவம் பார்த்த தாய் மறைந்தாள். அந்த இடத்தில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். கூடவே அம்மனும். உடல் சிலிர்க்க ஆனந்தக் கண்ணீர் பெருக வணங்கினாள் ரத்னாவதி. ‘என்னைப் போன்ற எளியவளுக்கு உதவ சிவபெருமானே வந்தாரா?’’.

அன்று முதல் திருச்சியிலுள்ள செவ்வந்தி நாதர், தாயுமானவர் என்றும் அழைக்கப்படலானார்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மலைக்கோட்டை. அந்த மலைக்கோட்டையில் அமைந்திருக்கிறது தாயுமானவர் திருக்கோவில். இது அந்தக் காலத்தில் சிரகிரி என்று அழைக்கப்பட்ட மலை. அருணகிரிநாதர் இப்படி அழைக்கிறார்.

மலைக்கோட்டை எனப்படும் சிராமலை மூன்று நிலைகளைக் கொண்டது. முதல் நிலையில் விநாயகர் காட்சி தருகிறார். 178 படிகள் ஏறினால் இரண்டாவது நிலை. அங்குதான் தாயுமானவரும், மட்டுவார் குழலியும் அருள்பாலிக்கிறார்கள். கீழிருந்து மொத்தமாக 417 படிகள் ஏறினால் உச்சிப் பிள்ளையார் சன்னதியை அடையலாம்.

தாயுமானவர் ஆலயத்தில் ஆயிரம்கால் மண்டபம், பதினாறு கால் மண்டபம், மணி மண்டபம் என்று பல மண்டபங்கள் உள்ளன. சகஸ்ரலிங்க மண்டபத்தில் பல லிங்கங்களைக் காண முடிகிறது.

தாயுமானவர் மேற்கு நோக்கி இருக்கிறார். இது தொடர்பான சுவையான ஒரு கோணத்தை அங்கு தினமும் வழிபடும் ஒரு பக்தர் கூறினார். தாயுமானவர் மட்டுமல்ல; திருவானைக்காவலிலுள்ள ஐம்புலிங்கேஸ்வரரும் மேற்கு நோக்கிக் காணப்படுகிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கூடத் தெற்கு நோக்கி காணப்படுகிறார். அதாவது இவர்கள் அனைவருமே உறையூரை நோக்குவதுபோல் ஆலயங்கள் அமைக்கப்
பட்டுள்ளன. தங்கள் நாட்டுத் தலைநகரான உறையூருக்குக் குறைவில்லாத அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சோழ மன்னர்கள் இந்தக் கோயில்களை இப்படிக் கட்டி இருக்கிறார்களாம்.

தாயுமானவரின் ஆலயத்தில் அதிகார நந்தி, 63 நாயன்மார்கள், விநாயகர், முருகர், மீனாட்சி சுந்தரர், சகஸ்ரலிங்கம் ஆகியோருக்கான சன்னிதிகள் உள்ளன.

இந்த ஆலயத்தில் சில வியப்புகள் காத்திருக்கின்றன. தட்சிணாமூர்த்தி பொதுவாக நான்கு சீடர்களுடன் காணப்படுவார். ஆனால், இங்கு அவருக்கு 6 சீடர்கள்.

சூரியன், உஷா தேவியை இங்கு திருமணம் செய்துகொண்டார் என்பதுண்டு. நவக்கிரகங்கள் இங்கு தங்களுக்கான திசைகளைப் பார்க்கக் காணோம். மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தாயுமானவர் மட்டுமல்ல; அவரது தேவியான மட்டுவார்குழலிக்கும் நிறைய பக்தர்கள் உண்டு. தாமரை மலரில் சிறு பெண் குழந்தையாகத் தோன்றினாள் பார்வதி தேவி. காத்தியாயன முனிவர் என்பவர் அவரை வளர்த்தார். மங்கைப் பருவத்தை அடைந்த உமா தேவியார் அங்கிருந்த சிவகங்கைத் தீர்த்தத்தில் தினமும் நீராடி அருகில் இருந்த சுயம்பு லிங்கத்தை வழிபட்டார்.

பின்னர் சிவபெருமான் அவரை தனக்குரியவர் ஆக்கிக் கொண்டார். மட்டு என்றால் தேன். தேன் நிறைந்த மலர்களைத் தன் கூந்தலில் சூடிக்கொண்டவர் என்பதுதான் மட்டுவார்குழலி என்பதன் பொருள். இந்தச் சன்னிதியில் ஆதிசங்கரரின் செளந்தர்ய லகரி பொறிக்கப்பட்டுள்ளது.

செவ்வந்திநாதன் என்ற தாயுமானவரின் பாதத்தில் நெய் அபிஷேகம் செய்து அந்த நெய்யை 48 நாட்கள் சாப்பிட்டால் குழந்தை இல்லாப் பெண்கள் கருத்தரிப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. குழந்தை பிறந்தவுடன் அந்தப் பெண்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன தெரியுமா? வாழைத்தார் வாங்கி தாயுமானவர் சன்னிதியில் கட்ட வேண்டும். கரு உருவாவதற்கு மட்டுமல்ல; சுகப் பிரசவத்துக்காகவும் கர்ப்பிணிப் பெண்கள் இப்படி வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதலின்படி வாழைத்தார் கட்டப்படும்போது சற்று நேரம் அதை ஊஞ்சல்போல ஆட வைக்கிறார் அர்ச்சகர்.

“அம்மையே அப்பா

ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்த ஆரமுதே”l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x