Published : 09 Aug 2018 10:19 AM
Last Updated : 09 Aug 2018 10:19 AM
யுகம்யுகமாக எத்தனையோ நினைவுகள் படர்ந்துள்ள படித்துறைகளைக் கங்கை நதி கழுவி விசாரித்துச் செல்லும் புராதன நகரம் இது.
ஒவ்வொரு இந்துவின் மனத்திலும் முக்திக்கும் புனிதத்துக்கும் அடையாளமான பெயர்களாகக் காசியும் கங்கையும் உள்ளன. நிலமெல்லாம் காசி; நீரெல்லாம் கங்கை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மனத்தில் இடம்பெற்ற காசி, சிவபெருமான் வாசம் செய்யும் 12 ஜோதிலிங்கத் தலங்களில் ஒன்றாகும். காசியின் பிரதானமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 238 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த ஆலயம் சக்தி பீடங்களில் ஒன்று. இந்த ஆலயத்தின் குடமுழுக்கைப் பொறுப்பேற்று நடத்தியிருப்பவர் சென்னையில் வாழும் தமிழரான சுப்பு சுந்தரம்.
சுமார் 23 ஆயிரம் கோயில்களைக் கொண்டிருக்கும் இந்தப் புண்ணிய பூமியில் காசி விஸ்வநாதர் கோயிலில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்ற சுப்பு சுந்தரம் தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“நாம் இப்போது பார்க்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மூலஸ்தானத்தைக் கொண்ட சிறிய ஆலயத்தை 1780-ம் ஆண்டு இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கர் கட்டினார். அருகில் ஞான பாபி மசூதி உள்ளது. 1835-ம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து இப்போதிருக்கும் தங்கக் கோபுரம் அமைக்கப்பட்டது. 1841-ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர், கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர்.
வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது. அதற்கான கவசத்தை அமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழகத்தில் நகரத்தார் வசிக்கும் காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதியில் கோயில்களைப் பராமரித்த என் அனுபவத்தைக் கேள்விப்பட்டு இந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கு என்னிடம் ஆலோசனை கேட்டனர். அப்படி வந்த வாய்ப்புதான் இந்தப் பெருமைக்குரிய நிகழ்ச்சிக்கு வழிவகுத்தது” என்றார் சுப்பு சுந்தரம்.
காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கான குடமுழுக்கை நடத்தும் ஒருங்கிணைப்பாளர் சுப்பு சுந்தரம் என்ற செய்தியுடன் அதிகாரப்பூர்வமான கடிதத்தை இந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பெற்றார். அதற்குப் பிறகு ஜூலை-5 வரை சுப்பு சுந்தரத்தை சூட்சுமமான ஆற்றலே வழிநடத்தியது.
“ஆலயத்தில் பழுதுபட்டிருந்த பல பகுதிகளைப் புதுப்பித்தோம். ஐந்து நாட்கள் நடைபெறும் குடமுழுக்கின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அரசு அனுமதி வாங்க வேண்டும். ஏனெனில், காசி விஸ்வநாதர் கோயில் அத்தனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. பிள்ளையார்பட்டி ஆலயத்தைச் சார்ந்த பிச்சை குருக்கள் தலைமையில் 60 குருக்கள்களை அழைத்துச் சென்றோம். ஒருவர் கூடத் தங்கள் வேலைகளுக்குப் பணம் பெறவில்லை.
அங்குள்ள பண்டாக்களுக்கும் அதிகாரிகளுக்கும் குடமுழுக்கு தொடர்பான யாகங்களோ சடங்குகளோ பரிச்சயம் கிடையாது. ஆனால், அவர்கள் எங்களது அனைத்துப் பணிகளுக்கும் ஆத்மார்த்தமாகத் துணையாக இருந்தனர்.”
முதலில் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரத்தின் கலசங்களுக்கு பக்கத்தில் சென்று கங்கை நீரை ஊற்ற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. தென்னகத்தில் செய்யப்படுவது போல் தற்காலிகமான சாரத்தை அமைப்பதற்கும் அங்கே பணியாளர்களுக்கு அனுபவம் இல்லை. இச்சூழலில் கடைசி நேரத்தில் ஒரு தொழிலாளி, சுப்பு சுந்தரத்தின் குறிப்புகளைக் கொண்டு சாரத்தை அமைத்திருக்கிறார்.
அடுத்த நாள் வேத விற்பன்னர்களான ஸ்ரீ ஸ்ரீகாந்த், ஸ்ரீராமனுடன் சேர்ந்து பிச்சை குருக்களும் சேர்ந்து கங்கை தீர்த்தத்தைத் தங்கக் கலசத்தில் ஊற்றினர். கங்கையில் படகில் சென்று கங்கை நீரை எடுத்து வந்து, ஆலயத்துக்குக் கலசங்களைக் கொண்டு சென்ற வழியெங்கும் வசிக்கும் மக்கள் வீட்டின் மாடிகளிலிருந்து குருக்களின் தலையில் பூக்களை இரைத்தனர்.
பாதுகாப்புக் காரணங்களால் ஆலயத்துக்குள் தேங்காய் கொண்டு செல்ல முடியாத நிலை இங்கே இருக்கிறது. இச்சூழலில் ஒவ்வொரு தேங்காயையும் பரிசோதித்து 150 தேங்காய்களை அனுமதித்துள்ளனர்.
“காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தலைமுறை தலைமுறையாக பண்டாக்கள் என்னும் பூசாரிகள் அனுபவித்துவரும் மரியாதைகளை குடமுழுக்கிலும் அவர்களுக்கு அளித்தோம். யாகசாலை பூஜைகள் அனைத்தையும் அவர்களே மந்திரம் சொல்லித் தொடங்கி வைத்தனர். பின்னரே எங்கள் குருக்கள் யாகச் சடங்குகளைச் செய்தனர். அந்த வகையில் தெற்கும் வடக்கும்
இணைந்து நடத்திய சங்கமம் என்றே சொல்லலாம்” என்று நிறைவுடன் கூறுகிறார் சுந்தரம்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புனராவர்த்தம் என்ற முறையில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. கருவறை, பிரகாரம், கோபுரம் முதலிவற்றைப் பழுதுபார்த்து புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்த பிறகு இந்தக் குடமுழுக்கு நடைபெறும்.
இந்தியாவின் தெற்கையும் வடக்கையும் இணைக்கும் ஆன்மிக சங்கமமாகத் திகழும் காசி நகரில் சமகாலத்தில் ஒரு சாதனை நிகழ்வைப் படைத்து அந்நகரின் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தைச் சாத்தியப்படுத்தியுள்ளார் சுப்பு சுந்தரம்.யாகசாலைபிச்சை குருக்கள்கங்கை நீருக்காக படகில் பயணம்...
சூரியனும் சந்திரனும் உள்ளவரை... - பிச்சை குருக்கள் சொல்கிறார்
பழனி முருகன் ஆலயம், ராமேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றுக்கு முன்பே குடமுழுக்கு செய்த அனுபவம் உண்டு. ஒரு குடமுழுக்கு நிகழ்ச்சியைச் செய்வதற்கு அந்தந்த இடம், சம்பிரதாயங்கள் சார்ந்து சின்னச்சின்ன மாற்றங்கள் இருக்கும். காசியில் உள்ள மூலவரான லிங்கம் சுயம்பு ஆகும். ஆலயத்தைப் புதுப்பிக்கும் போது சுயம்புவாக உள்ள உருவங்களை இடமாற்றம் செய்யக்கூடாது. ஈசனே, இந்த வடிவத்திலே உன்னை எழுந்தருளச் செய்கிறோம்- இந்த உருவத்திலேயே சூரிய சந்திரர்கள் உள்ளவரை இரு என்று சுலோகம் சொல்லி வேலையைத் தொடங்கினோம். எனது வாழ்வின் பெரும் பாக்கியம் இந்த நிகழ்ச்சி.
குடமுழுக்கு நான்கு ஆவர்த்தம் ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்து பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுவது. அனாவர்த்தம் பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது. புனராவர்த்தம் கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுதுபட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றைப் புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது. அந்தரிதம் கோயிலில் ஏதேனும் தகாத சம்பவம் நேர்ந்துவிட்டால் அதன் பொருட்டு செய்யப்படும் சடங்கு. |
படங்கள்: மனிஷ் கத்ரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT