Published : 14 Aug 2014 12:00 AM
Last Updated : 14 Aug 2014 12:00 AM
உத்தராகண்ட், எழில்மிகு இயற்கை கொலு வீற்றிருக்கும் மலைப்பாங்கான இடம். அதிலும் குமாவுன் என்ற பகுதி பச்சை போர்த்தியது. மரங்களும் மான்களும் மனதைக் கவ்வும். அவற்றில் ஒன்றுதான் ஜாகேஷ்வர். தேவதாரு மரங்கள் அடங்கிய வனத்தில் ஒரு அழகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அருகிலேயே ஜடகங்கா எனும் நதி மெலிதாக ஓடுகிறது. இதை சிலர் ஜ்யோதிர்லிங்கங்களுள் ஒன்றாகக் கருதுவர்.
ஒரு சுற்றுச் சுவர். அதற்கு மத்தியில் கோபுரங்கள். சிறியதும் பெரியதுமாய். சில கோபுரங்களுக்கு மட்டும் தொப்பி போன்று மேலே உலோகத்தால் அணிவித்திருக்கிறார்கள்.அதைக் கொஞ்சம் மேலிருந்து பார்க்கும்போது கோவில் வளாகத்தையே மரங்கள் மேற்பார்வை இடுவதைப் போல் தோன்றும். இதில் முன்னர் 400 கோவில்கள் இருந்தனவாம். இப்போது விஞ்சியிருப்பது 124 கோவில்களே. 5ஆம் நூற்றாண்டிலிருந்து 15 முதல் 18-ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டவை. தொல்பொருள் துறையால் இந்த ஆலயங்கள் பராமரிக்கப்படுகின்றன.
காலை ஐந்து மணிக்கு ஈசனைப் பள்ளி எழுந்தருளச் செய்வதற்காக பூசாரி மணி அடிக்கிறார். சூரிய ஒளி படர ஆரம்பித்ததும் கோவில் வளாகத்தில் நுழைகிறோம்.இந்தத் தொகுதியில் முக்கியமாக நாம் காண வேண்டியது ஜாகேஷ்வர், மகாம்ரித்யுஞ்சயர் மற்றும் புஷ்டிதேவி ஆலயங்கள். ம்ரித்யு என்றால் மரணம் ம்ரித்யுஞ்சயர் என்றால் மரணத்தை வென்றவர் என்று பொருள்.
இதில் மகாம்ருத்யுஞ்சயர் கோவில்தான் மிகப் பழமையானது.பெரியதும்கூட.இதில்தான் முக்கிய பூஜைகள் நடைபெறுகிறது.இது கிழக்கு முகமாக உள்ளது. இறப்பிலிருந்து முக்தியளிப்பவராக சிவன் போற்றப்படுகிறார். இந்த லிங்கத்திற்கு உள்ள விசேஷம் கண் போன்ற அமைப்பு உள்ளதுதான். வளாகத்தில் நுழைந்தால் ஒரு கல் பாதை நம்மை கோவிலுக்கு இட்டுச் செல்கிறது. அர்ச்சகர் நம்மை வழி நடத்துகிறார். குகை போன்ற வாயிலைக் கடந்து உள்ளே நுழைய வேண்டும்.
இரு பித்தளை விளக்குகள் வெளிச்சத்தில் மகேஸ்வரனை தரிசிக்கலாம். பத்து மணிக்கு அரிசி,பருப்பு, காய்கறிகள் கலந்த உணவு நைவேத்யமாக வழங்கப்படுகிறது. ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கல்லாலான அறையில் அணையா எண்ணை விளக்குடன் அற்புதமாகச் செதுக்கப்பட்ட கதவுகளும் தூண்களும் உடைய அறையில் அமர்ந்து இறைவனை தரிசிப்பது அற்புதமான அனுபவம். லிங்கத்திற்குப் பின் செப்புத் தகட்டில் மகா ம்ருத்யுஞ்சய மந்திரம் எழுதப்பட்டுள்ளது.
ஆதி சங்கரர் கேதார்நாத் செல்லும் முன்னர் ஜாகேஷ்வர் விஜயம் செய்து இங்குள்ள பல கோவில்களைப் புதுப்பித்ததாகக் கருதப்படுகிறது.
இந்தக் கோவில்களின் கட்டிடக் கலை நாகாரா பாணியைச் சேர்ந்தது. வளைவான சிகரமும் அதன் மேல் நெல்லிக்காய் வடிவிலான கல்லும் கலசமும் அமைந்ததுதான் இதன் பாங்கு. கோபுரத்தில் கீழிருந்து மேல்வரை பட்டை பட்டையாய் வரிகள் போன்று அமைந்துள்ளன. ஆங்காங்கே சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் மற்றொரு முக்கியமான ஆலயம் ஜாகேஷ்வர் கோவிலாகும்.வாயிலில் இரு துவாரபாலகர்கள்.
கோவில் மேற்கு வாசலைக் கொண்டுள்ளது. கருவறையில் லிங்கம் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெரியது சிவனாகவும் சிறியது பார்வதியாகவும் கருதப்படுகிறது. லிங்கத்திற்குப் பின்னால் சந்த மன்னர்கள் இருவருடைய சிலைகள் உள்ளன.
சூரியன், கணேசர், நவதுர்க்கை, காளி போன்ற தெய்வங்களுக்கான கோவில்களும் இங்கே உள்ளன. இன்னும் சிறிது மேலே போனால் குபேரனுடைய கோவில்களைக் காணலாம். இங்கு ஏக முக லிங்கம் உள்ளது. 200 அடி தூரத்தில் பிரம்ம குண்டம் என்னும் ஊற்றில் நீராடலாம்.
இங்குள்ள இன்னொரு முக்கியமான கோவில், 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள விருத்த ஜாகேஷ்வர் கோவில். அடுத்தது தண்டேஷ்வர் கோவில்கள். இயற்கையாக அமைந்த பாறையே லிங்கமாக உள்ளது. இயற்கை வனப்போடு நமக்கு இறையருளும் கிடைப்பதுதான் இப்பகுதியின் சிறப்பு.
ம்ரித்யுஞ்சய மகா மந்திரம்
ஓம் த்ரியம்பகம் மகாமஜே, சுகந்தம் புஷ்டி வர்த்தனம் உருமாருகமிவ பந்தனான், ம்ரித்யோர் மோக்ஷயே மா அம்ருதாத்
பொருள்: மூன்று கண்களை உடைய, சுகந்தமான நறுமணத்தை உடைய, நம் எல்லோருக்கும் உணவு அளிப்பவரும், நம்மை வளர்ச்சி அடையச் செய்பவருமான சிவ பெருமானைப் போற்றி வணங்குகிறோம். விளாம் பழம் எப்படித் தன் காம்பில் இருந்து பிரிந்து விழுகிறதோ, அதே போல நம்மை பந்தங்களில் இருந்து விடுவித்து, மரணம் என்னும் பயத்தில் இருந்து விடுவித்து, மோட்ச நிலை அடையச் செய்வாயாக. என்றும் அழியாதவனே ஈஸ்வரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT