Published : 12 Jul 2018 10:18 AM
Last Updated : 12 Jul 2018 10:18 AM
புண்டரீக மகரிஷிக்குத் திருமால்தான் இஷ்ட தெய்வம். அவர் காஞ்சிக்கு விஜயம் செய்தார். எண்ணற்ற கோயில்களைக் கொண்ட அந்த நகரத்தில் திருமாலுக்கான ஆலயங்களும் அதிகமிருந்தன. வரதராஜப் பெருமாள், உலகளந்த பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று ஒவ்வொரு தெய்வத் திருமேனியையும் தரிசித்தார். பிறகு அங்கிருந்து மேற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
ஓர் இல்லத்தின் திண்ணையில் அமர்ந்து சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார். அந்த இல்லத்திலிருந்தவர் அவருக்குப் பழங்களும் தண்ணீரும் அளித்தார். அவரிடம் புண்டரீகர் தான் காஞ்சியில் தரிசித்த திருமாலின் வடிவங்களைப் பரவசத்தோடு விவரித்தார். அப்போது இல்லத் தலைவர் “திருப்பாற்கடலுக்குச் சென்றதுண்டா?’’ என்று கேட்க, புண்டரீகர் திகைத்தார்.
திருப்பாற்கடல் வானுலகில் உள்ள ஒன்று. அதில்தான் திருமால், ஆதிஷேசனின்மீது துயில் கொண்ட கோலத்தில் காட்சி அளிப்பதாகச் சொல்வார்கள். அதை 108 திவ்யதேசங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டிருப்பார்கள். இந்த உலகில் வாழும்போது அங்கு செல்வது இயலாத காரியம். அப்படியிருக்க எந்த நம்பிக்கையில் தான் திருப்பாற்கடலுக்குச் சென்றிருக்க வேண்டும் என இவர் எண்ணுகிறார்?
புண்டரீகர் கொண்ட திகைப்பின் பின்னணி குடும்பத் தலைவருக்கு முதலில் புரியவில்லை. என்றாலும் சற்றுத் தாமதமாக அதை உணர்ந்துகொண்டார்.
“மகரிஷியே, உங்கள் திகைப்பைப் பார்க்கும்போது நீங்கள் திருப்பாற்கடலுக்குச் சென்று வந்ததில்லை என்பது புலப்படுகிறது. இங்கே நான் குறிப்பிட்டது திருப்பாற்கடல் என்ற ஊரை. அது அருகில்தான் உள்ளது. அங்கும் அற்புதமான ஆலயம் உண்டு’’ என்றார்.
புண்டரீகரின் சோர்வு அனைத்துமே பறந்து போனது. திருப்பாற்கடலுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற விவரத்தை விசாரித்துக்கொண்டு கிளம்பினார். திருப்பாற்கடல் குறித்து அவருக்குத் தகவல் கூறிய இல்லத் தலைவருக்கு மகரிஷி புண்டரீகரின் ‘தீவிர திருமால் பக்தி’ தெரியாது. அவர் திருமால் கோயிலுக்கு மட்டுமே செல்வார் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவர் உணரவில்லை என்பதை மகரிஷியும் உணரவில்லை!
அன்று ஏகாதசி. ஏகாதசி முடிவதற்குள் திருமாலின் ஆலயம் ஒன்றுக்குச் சென்றே ஆக வேண்டுமென்று தவித்தார் புண்டரீகர். திருப்பாற்கடலுக்கு விரைந்தார்.
திருப்பாற்கடல் என்றவுடனே திருமாலின் நினைவுதான் வரும். அப்படி அவராகவே எண்ணியபடி அவர் திருப்பாற்கடல் ஊருக்குள் நுழைந்தார். பளிச்சென்று அவர் கண்ணில் பட்டது அந்த ஆலயம். வெகுவேகமாக நெருங்கினார். கோபுர வாயிலை அடைந்தவருக்குத் திகைப்பு. உள்ளே உள்ள நந்தியின் உருவம் அவர் கண்களுக்குப் பட்டது. புண்டரீகர் திடுக்கிட்டார். அவர் உடனடியாக அந்த ஆலயப் பகுதியை விட்டு வெளியேற முயன்றார்.
வேகவேகமாகச் சென்றுகொண்டிருந்த புண்டரீகரை ஒரு முதியவர் எதிர்கொண்டார். “ஆலய வாசல்வரை வந்துவிட்டு கோயிலுக்குள் நுழையாமல் திரும்புகிறீர்களே. ஏன் ஏதாவது அவசர வேலையா?’’ என்று கேட்டார்.
புண்டரீகர் சினம் பொங்க , “திருமாலைத் தரிசிப்பதைவிட எனக்கு வேறு என்ன வேலை இருந்துவிட முடியும்? ஆனால், இங்கு வந்தவுடன்தான் தெரிகிறது இது சிவாலயம் என்று. திருமாலின் ஆலயங்களுக்கு மட்டுமேதான் நான் செல்வேன்’’ என்றார்.
“மகரிஷியே, உங்கள் முடிவு தவறானது. இதை சிவாலயம் என்று உங்களுக்கு யார் கூறியது?’’ என்றார் வயோதிகர்.
புண்டரீகருக்குச் சிறு குழப்பம். அப்படியானால் இது திருமாலின் ஆலயமா? பின் எப்படி நந்தி தேவர் அங்கு காணப்பட்டார்?
“என் கையைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். அது திருமாலின் ஆலயம்தான்’’ என்றார் வயோதிகர். மனம் இருபுறமும் ஊசலாடத் தன் கண்களை ஒரு துணியால் கட்டிக்கொண்டு முதியவரின் கையைப் பற்றிக்கொண்டார் புண்டரீகர். ஆலயத்துக்குள் அவரை அழைத்துக்கொண்டு சென்றார் வயோதிகர். கோயிலின் கருவறையில் சிவலிங்கம் காட்சி தந்தது.
லிங்கத்தின் மீது திருமால்
கட்டப்பட்ட கண்களோடு கருவறையில் உள்ள முக்கிய தெய்வத்தைக் கைகளால் தடவிப் பார்த்தார் புண்டரீகர் (சிவனின் உருவம் என்றால் மறந்தும்கூட அதைப் பார்த்துவிடக் கூடாதே!) தலையில் மகுடம். கைகளில் சங்கு, சக்கரம், கதை. ஒவ்வொன்றையும் தொட்டுணர்ந்த புண்டரீகர் அது திருமால்தான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார். கண்களைத் திறந்து பார்த்தபோது அங்கே சிவலிங்கத்தின்மீது திருமாலின் உருவம் காணப்பட்டது.
அவரது அகக்கண்ணும் திறந்தது. தன் தவறை மன்னிக்குமாறு இறைவனை வேண்டினார். எப்படியோ அவரைப் போன்ற பல பக்தர்களின் அகக்கண்களும் திறக்க அந்தச் சம்பவம் வழி செய்துவிட்டது.
ஆவுடையாரின்மீது (சிவலிங்கத்தின்மீது) வெங்கடேச பெருமாள் அபயம் அளித்திருக்கும் கரத்துடன் காட்சியளிக்கிறார். ஹரியையும் ஹரனையும் ஒருசேரப் பார்ப்பது ஒரு மாபெரும் வரமல்லவா? பிரகாரத்தில் கிருஷ்ணதேவராயர், ராணி மங்கம்மாள், தளவாய் நாயக்கர் போன்றவர்கள் கைகூப்பிய நிலையில் காட்சி தருகிறார்கள்.
பல ஆலயங்களுக்குப் புது நிர்மாணம் தந்த கிருஷ்ணதேவராயர் இந்த ஆலயத்தையும் புதுப்பித்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் ஆலயத்துக்குள் அவருடைய சிலையும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள அலர்மேல் மங்கைத் தாயார், அனுமன், கருடாழ்வார், ருக்மணி, சத்யபாமா, திருக்கச்சி நம்பியடிகள் ஆகியோரின் சன்னிதிகளையும் நிறுவியவர் கிருஷ்ணதேவராயர்தான்.
இப்போது பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது. எதிரில் உள்ள திருக்குளம் புண்டரீக புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்தில் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் ஆகியோரின் உருவங்களும் காணப்படுகின்றன.
மேற்படி ஆலயத்தைத் தவிர திருப்பாற்கடலில் ஆதிரங்கநாதசாமி ஆலயம் என்று ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு ஆலயங்களுமே அருகருகே அமைந்துள்ளன. பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சிவலிங்கத்தின்மீது வெங்கடேசப் பெருமாளும் காட்சியளிக்கிறார் என்றால் ஆதிரங்கநாதசாமி ஆலயத்தில் சயனித்திருக்கும் திருமாலின் தொப்புள் கொடியிலிருந்து பிரம்மன் தோன்றும் நிலையில் சிற்பம் காட்சியளிக்கிறது. எனவே, திருப்பாற்கடலை திரிமூர்த்தி ஷேத்திரம் - அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும் உறையும் தலம் என்று கூறுகிறார்கள்.
எப்படிப் போகலாம் திருப்பாற்கடலுக்கு?
திருப்பாற்கடல், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கத்திலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து 100 கிலோ மீட்டர், காஞ்சிபுரத்திலிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT