Last Updated : 12 Jul, 2018 10:25 AM

 

Published : 12 Jul 2018 10:25 AM
Last Updated : 12 Jul 2018 10:25 AM

அம்மனுக்கு உகந்த ஆடி

றவைகள் பாடத் தொடங்காத அதிகாலையில் ‘வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்’ என ஒலிபெருக்கி பாடத் தொடங்கினால் ஆடி மாதம் பிறந்துவிட்டது எனப் பொருள்.

தமிழகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் சிறிதும் பெரிதுமான கோயில்களில் அம்மன் குடிகொண்டிருக்கிறாள். கூழோ வேப்பிலையோ பக்தர்கள் விரும்பித் தரும் பொருள் எதுவானாலும் விரும்பி ஏற்றுக்கொள்வதாலேயே அம்மன், பக்தர்களின் மனத்துக்கு நெருக்கமான தெய்வமாக விளங்குகிறாள். படையலைப் போலவே வழிபாட்டு முறையும் எளிமையானது.

பெண்ணல்ல தெய்வம்

பெரும்பாலான கோயில்களில் ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ் வார்ப்பார்கள். இந்தச் சடங்குக்குப் பின்னால் ஒரு கதை சொல்லப்படுகிறது. கேட்பதெல்லாம் தரும் காமதேனு பசுவை ஜமதக்னி முனிவரிடமிருந்து அபகரிக்க கார்த்தவீர்யாஜுனரின் மகன்கள் திட்டம் போட்டனர். பசுவைத் தங்களுடன் அனுப்ப மறுத்த முனிவரைக் கொன்றுவிட்டு காமதேனுவுடன் செல்கின்றனர். கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏற முடிவுசெய்த அவருடைய மனைவி ரேணுகாதேவி, தீயில் இறங்குகிறார். இந்திரன், ரேணுகாதேவி மீது இரக்கப்பட்டு வருண பகவானை வேண்டுகிறார். உடனே மழை பெய்கிறது. உடல் முழுவதும் தீக்கொப்புளங்களுடன் ரேணுகாதேவி உயிர்பிழைக்கிறார்.

தன் உடலை மறைக்க உடல் முழுவதும் வேப்பிலையைக் சுற்றிக்கொள்கிறார். பசி தீர்க்கப் பக்கத்து கிராமத்தில் உணவு கேட்கிறார். ரிஷி பத்தினிக்குத் தாங்கள் சமைத்த உணவைத் தருவது பாவம் என நினைக்கும் கிராமத்து மக்கள் அவரிடம் பச்சரிசி, வெல்லம், காய்கறி, இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துச் சமைத்து உண்ணச் சொல்கிறார்கள். அதன்படி ரேணுகாதேவியும் கூழ் காய்ச்சிக் குடித்துப் பசியாறுகிறார். இதன் தொடர்ச்சியாகவே இன்றும் அம்மன் கோயில்களில் கூழ் வார்த்தல் திருவிழா நடக்கிறது. பச்சரிசியும் வெல்லமும் சேர்த்து மாவிளக்குப் படையலிடப்படுகிறது.

உடல் முழுவதும் கொப்புளங்களுடன் இருக்கும் ரேணுகாதேவியிடம் சிவன், “நீ சாதாரணப் பெண்ணல்ல. பராசக்தி அம்சம். உலகில் பாவங்கள் அதிகரிக்கும்போது அதை நீக்கி, மக்களை அம்மை நோயில் இருந்து காக்க வேண்டும்” என அருள்புரிகிறார். அதனாலேயே அம்மைக் கொப்புளங்களைக் குணமாக்கும் வேப்பிலைக்கும் உடல் சூட்டைத் தணிக்கும் கூழுக்கும் அம்மன் வழிபாட்டில் முக்கியப் பங்கு இருக்கிறது.

பச்சரிசி மாவும் கீரையும்

பல பெயர்களில் வழிபடப்பட்டாலும் மாரியம்மன் என்ற பெயரிலேயே அம்மன் பெரும்பாலும் வழிபடப்படுகிறாள். பல கிராமங்களில் பெரிய கோயிலும் சிலையும்கூடத் தேவையிருக்காது. வேப்ப மரத்தடியில் எளிமையின் வடிவமாகக் குடிகொண்டிருக்கும் அம்மனை ஆடி மாதத்தில் வழிபட்டுக் குளிர்விப்பார்கள். கிராமம் முழுவதும் ஒன்றுகூடி கூழ் வார்ப்பார்கள். வெல்லமும் பச்சரிசியும் சேர்த்து இடித்து அதோடு வேப்பிலையும் கலந்த துள்ளுமாவு அம்மனுக்குப் பிரியமான படையலில் ஒன்று.

முருங்கைக்கீரை, தண்டுக்கீரை இவையும் படையலில் இடம்பெற்றும். வட தமிழக மாவட்டங்களில் கத்தரி, மொச்சையுடன் சேர்த்து வைக்கப்படும் கருவாட்டுக் குழம்பையும் அம்மனுக்குப் படைப்பார்கள். பம்பையும் உடுக்கையும் முழங்க மாரியம்மனை வர்ணித்துப் பாடிக் குளிர்விப்பார்கள். சிலர் வேண்டிக்கொண்டும் வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடனாகவும் அலகு குத்திக்கொள்வதும் தீமிதிப்பதும் வழக்கம். பால் குடம் எடுப்பதும் பொங்கல் வைப்பதும் ஆடி மாத வழிபாட்டில் அடங்கும்.

பதினெட்டாம் பெருக்கு

ஆடி மாதத்தில் பருவ மழை தொடங்கும் என்பதாலேயே ஆடிப் பட்டம் தேடி விதைத்தார்கள். அந்தக் காலத்தில் பருவ மழையால் ஆறுகளில் புதுப் புனல் பெருக்கெடுத்து ஓடும். விவசாய நிலங்களைச் செழிக்கச் செய்வதற்காகக் கரைதொட்டு ஓடும் ஆடியை விவசாயிகள் வணங்கி வரவேற்பார்கள். குறிப்பாக, ஆடி 18-ம் நாளன்று நதிக் கரையில் ஒன்றுகூடுவார்கள். பெருக்கெடுத்து ஓடும் நதியில் பூத்தூவி, விளக்கேற்றி வழிபடுவார்கள்.

காவிரி டெல்டா பகுதிகளில் இந்த வழிபாடு குறிப்பிடத்தக்கது. கரைகளை நிறைத்தபடி சுழன்றோடும் காவிரியைக் கர்ப்பிணியாகப் பாவித்து வழிபடுவதும் அதில் ஓர் அங்கம். அதனால் வளைகாப்பன்று செய்யக்கூடிய கலந்த சாத வகைகளைப் படையலிட்டு வழிபடுவார்கள். புதுமணத் தம்பதிகள் ஆடிப் பெருக்கன்று நதிக்கரையில் வழிபட்டு, கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்துகொள்வதும் உண்டு. சிலர் ஆடிப் பெருக்கன்று புது மஞ்சள் சரடு அணிந்துகொள்வார்கள்.

ஆடியின் பதினெட்டாம் பெருக்குக்கும் மகாபாரதப் போர் நடந்த பதினெட்டு நாட்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாரதப் போர் முடிந்து பாவங்களைத் தீர்க்க வீரர்கள் ஆற்று நீரில் மூழ்கி எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

மாரியை வரவழைப்பவளாகவும் மனம் இரங்கி பக்தர்களுக்கு அருள்பவளாகவும் இருப்பதால் ஆடி மாதம் முழுக்க அம்மன் வழிபாடு இருக்கும். ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என மாதம் முழுவதும் விழாக்களுக்குப் பஞ்சம் இருக்காது. இந்த மாதத்தில் திருமணம், குழந்தைப் பேறு, புதுமனை புகுதல் போன்ற சுப நிகழ்வுகள் தவிர்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் விவசாயம் செழிக்கப் பெய்யும் பருவ மழையும் மனத்துக்குப் புத்துணர்வு தரும் அம்மன் வழிபாடுமாகக் கொண்டாட்டங்களைச் சுமந்த மாதமாகவும் ஆடி திகழ்கிறது.

பெண்களின் அவ்வையார் நோன்பு

ஆடி மாதத்தில் தென் மாவட்டங்களில் அவ்வையார் நோன்பைக் கடைப்பிடிப்பார்கள். பெண்கள் மட்டும் கடைப்பிடிக்கும் நோன்பு இது. பெண்கள் குழுவாகச் சேர்ந்து பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவார்கள். அதை ஆண்கள் சாப்பிடக் கூடாது என்பது ஐதீகம். அறையில் நோன்பு எப்போது நடக்கிறது என்பதைப் பெண்கள், ஆண்களிடம் சொல்லவும் கூடாது.

ஆரல்வாய்மொழி - பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழக்குடியை அடுத்து அவ்வையார் அம்மன் கோயில் உள்ளது. இதற்கு நெல்லியடி அவ்வை என்று பெயர். அவ்வையார் இந்த ஊரில்தான் இயற்கை எய்தியதாகவும் நம்பப்படுகிறது. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வரும் பெண்கள் கொழுக்கட்டை படைத்து அவ்வையாரை வழிபட்டுச் செல்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x