Last Updated : 20 Jul, 2018 11:10 AM

 

Published : 20 Jul 2018 11:10 AM
Last Updated : 20 Jul 2018 11:10 AM

புத்தரின் சொற்கள்: யார் சக்கரவர்த்தி?

நிலத்தையும் நாடுகளையும் பிடித்து நீண்ட காலம் ஆண்ட மாமன்னர்கள் வரலாற்றில் சக்கரவர்த்தி என்றழைக்கப்பட்டார்கள். ஆனால், பவுத்தத்தில் தர்மச் சக்கரத்தைச் சீராக இயக்குபவரே சக்கரவர்த்தி என்று கருதப்படுகிறார். பவுத்தத் தத்துவமான தீகநிகாயத்தின் 26-வது பிரிவு ‘சக்ரவர்த்திசிகனாத சூத்திரம்’ ஆகும். ‘தர்மச் சக்கரத்தைச் சுழற்றுபவரின் சிம்ம கர்ஜனை குறித்த சொற்பொழிவு’ என்றும் இது அழைக்கப்படுகிறது.

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அடிப்படை அதன் ஆட்சியாளர் கடைப்பிடிக்கும் கொள்கையே என்பதை விவரிக்கிறது.

‘சக்ரவர்த்திசிகனாத சூத்திர’த்தில் புனையப்பட்டிருக்கும் ஒரு நெடுங்கதை. இந்தக் கதையைக் கேட்டவர்களில் இதுவரை  20 ஆயிரம் பவுத்தத் துறவிகள் பரிநிர்வாணம் (ஆன்ம விடுதலை) அடைந்திருக்கிறார்கள், 84 ஆயிரம் பேர் மெய்ஞ்ஞானம் அடைந்திருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

ஆயுள் ஆரோக்கியம் மகிழ்ச்சி

மகத தேசத்தில் (அன்றைய பிஹார்)  வசித்தபோது புத்தர் நிகழ்த்திய சொற்பொழிவுதான் இந்தச் சூத்திரம் என்று சொல்லப்படுகிறது. தர்மத்தைப் பின்பற்றி வாழ்க்கையை வாழ்வதற்கான அவசியத்தை இதில் அவர் முன்மொழிந்தார். குறிப்பாக, நீண்ட ஆயுள், அழகு, மகிழ்ச்சி, செழிப்பு, அதிகாரம் ஆகியவற்றின் உண்மையான பொருளை விவாதிப்பதாக அந்தச் சொற்பொழிவு அமைந்தது.

“சக்கரவர்த்தியாகப்பட்டவன் யாரெனில், சமரசம் செய்யும் மனப்பாங்கு,பெருந்தன்மை, இனிமை, ஏற்புடைய பேச்சாற்றல், நன்மை பயக்கும் மனப்பான்மை, நடுநிலை தவறாமை ஆகிய நற்பண்புகளை ஒருசேரப் பெற்றவன். அதிலும் இவற்றைப் பிறர் நன்மை கருதிச் செயல்படுத்துபவன்” என்றார் புத்தர்.

மேலே குறிப்பிட்ட பண்புகளே மனம்நிறை கவனத்தின் (mindfulness) அடிப்படை. இவையெல்லாம் கைவரப்பெற ‘நம்மை நாமே தனித் தீவாகக் கருதி நமக்குள்ளேயே வசிக்க வேண்டும்’ என்று இந்தச் சூத்திரத்தில் வலியுறுத்துகிறார் புத்தர். தனது உடலையும் புலன்களையும் சரியாக நிர்வகிக்கத் தெரிந்தவன் தன் நாட்டையும் மக்களையும் சரியாக நிர்வகிப்பான் என்பதே இதன் சாராம்சம்.

அசோக சக்கரவர்த்தி ஆண்ட காலகட்டத்தில் இந்தச் சூத்திரம் வடிக்கப்பட்டதால் நல்லாட்சி புரிவதன் முக்கியத்துவத்தை மையமாக வைத்தே இது புனையப்பட்டது. இந்தச் சூத்திரத்தில் இடம்பெற்ற கதையில் சக்கரவர்த்தி தல்கனேமியும் அவருடைய மூத்த மகனும்தான் முதன்மைக் கதாபாத்திரங்கள். ஆரம்பத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் சட்டங்களை வழிமொழிந்து நேர்மையாக தல்கனேமி ஆட்சி புரிகிறார். ஆனால், காலப்போக்கில் அவருடைய ஆட்சியில் ஊழல் மலிந்துபோகிறது. இதனால் அழிவின் விளிம்புக்குச் செல்லும் ஆட்சி கடைசியில் மீட்கப்பட்டு நல்லாட்சி மலர்கிறது.

நடத்தையும் ஆயுட்காலமும்

ஆட்சியாளர்களுக்கான அறநெறிகளையே குடிமக்களுக்கானதாகவும் வேறு கோணத்தில் இந்தச் சூத்திரம் முன்வைக்கிறது. குறிப்பாக, தனிமனித நடத்தைக்கும் அவருடைய ஆயுட்காலத்துக்கும் இடையில் ஏதோ ஒரு சுழற்சியும் தொடர்பும் உள்ளது என்கிறது.

அதாவது, பழங்காலத்தில் விவேகம் நிறைந்தவர்களாக மனிதகுலம் திகழ்ந்ததால் அழகாகவும் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் பலமாகவும் அக்காலத்து மனிதர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தார்களாம். ஆனால், நாளடைவில் குணம் குன்றிப்போனதால் அவர்களுடைய வாழ்நாளும் குறைந்துபோனதாம்.

நன்னெறிகளை உதறிவிட்டுப் பொய் பேசுதல், திருடுதல், வன்முறையில் ஈடுபடுதல், சக மனிதர்கள் மீது வெறுப்பை உமிழ்தல், குரூரமான நடத்தை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட மனிதர்களை நிர்ப்பந்திப்பது வறுமையே என்றும் இந்தச் சூத்திரத்தில் சொல்கிறார் புத்தர்.

இப்படிப்பட்ட குற்றங்கள் சமூகத்தில் பெருகினால்  தண்டனைகளை அதிகரிப்பதற்குப் பதிலாகக் குடிமக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும்படி ஆலோசனை கூறுகிறார். போதுமான வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில் மக்கள் மனநிறைவோடு வாழ்வார்கள். அப்படியானால் அவர்களுக்குப் பயமோ பதற்றமோ இருக்காது. அதன் விளைவாகக் குற்றங்கள் இல்லாத அமைதியான தேசம் மலரும் என்று முடிக்கிறார் புத்தர். ஆகச்சிறந்த அரசர் என்பவர் உலகப் பொதுமறையான தர்மத்தைப் பின்பற்றியே அரசாள வேண்டும் என்றும் இந்தச் சூத்திரத்தில் அறிவுறுத்துகிறார் புத்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x