Last Updated : 05 Jul, 2018 10:18 AM

 

Published : 05 Jul 2018 10:18 AM
Last Updated : 05 Jul 2018 10:18 AM

புத்தரின் மனம்நிறை கவனம்

னம்நிறை கவனத்தை மையப்படுத்திய தியான நிலையை அடைவதற்குத் தேவையான மூச்சுப் பயிற்சிகளைப் புத்தர் அறிவுறுத்துகிறார். அவருடைய இந்தப் பரிந்துரைகளின் தொகுப்பு ஆனாபானசதி சூத்திரம் என்றழைக்கப்படுகிறது. பவுத்தத்தின் அடிப்படையே ஆனாபானசதி சூத்திரம்தான் என்றும் சொல்லப்படுகிறது. பவுத்தத்துக்கு மட்டுமல்ல இந்தியப் பாரம்பரியத் தியானப் பயிற்சிகள் அனைத்துக்கும் ஆனாபானசதிதான் உயிர் நாடி என்றும் சொல்லப்படுகிறது.

தேரவாத பவுத்தத் தத்துவ இலக்கியமான மஜஹிமா நிகாயத்தில் பாலி மொழியில் இடம்பெற்றுள்ள உரையாடல்களின் ஒரு பகுதிதான் ஆனாபானசதி சூத்திரம்.

நம்முடைய மூச்சின் ஓட்டத்தின் மீது கவனம் செலுத்துதல்தான் ஆனாபானசதியாகும். அவ்வாறு கவனத்தைக் குவிக்கும்போதும் மூச்சை மெனக்கெட்டு மாற்றக்கூடாது என்பது அதில் குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.

மூச்சு மட்டுமே இருக்கிறது

அதேநேரத்தில் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதை மட்டும் விழிப்புநிலையில் இருந்து உற்றுக் கவனிப்பது ஆனாபானசதியாகி விடாது. எந்நேரமும் உயிர்ப்புடன் ஒவ்வொரு சுவாசத்தையும் மனம்நிறை கவனத்தோடு அவதானிக்கும் நிலை இது. அதைச் செழுமைப்படுத்த மூச்சை அவதானிக்கும்படி புத்தர் அறிவுறுத்தக் காரணம் மூச்சு மட்டுமே எந்நேரமும் இருக்கக்கூடிய விஷயமாகும்.

மனம்நிறை கவனமே உண்மையான ஞானம்

ஆக, ஆனாபானசதி சூத்திரமானது மூச்சை உள்ளிழுப்பதையும் வெளிவிடுவதையும் உன்னிப்பாக உற்றுநோக்கும் பெருவிழிப்பைக் குறிப்பதாகும். இதை மேற்கொள்ளும்போது நான்கு சதிபத்தனங்கள் உருவாகுகின்றன. அவை, மனம்நிறை கவனம், ஆராய்தல், மன உறுதி இவற்றின் மூலமாக விளைவது பேரானந்தம். இவற்றின் விளைவாக அமைதி நிலையை நோக்கி நகர்வோம். இறுதியாகத் தியானத்தையும் சாந்தமான மனநிலையையும் அறிவோம்.

இத்தகைய ஆனாபானசதி தியானத்தை மேற்கொள்ளப் பல்வேறு கட்டங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு:

# மூச்சையும் அதனுடன் தொடர்பானவற்றையும் உன்னிப்பாக அவதானித்தல்;

# மனம்நிறை கவனத்தில் இருப்பது குறித்த தற்கண உணர்வு;

# பெருவிழிப்பின் காரணிகளில் ஒன்றாக மனம்நிறை கவனம்.

# மனம்நிறை கவனமே உண்மையான ஞானம், ஆன்ம விடுதலை என்று உணர்தல்.

ஆனாபானசதி சூத்திரமானது பவுர்ணமி அன்று சாவத்தி என்ற இடத்தில்தான் புத்தரால் உபதேசிக்கப்பட்டது. அன்று புத்தர் சொன்னவை:

1. நிறுத்தி நிதானமாக நீண்ட நேரம் மூச்சிழுப்பதை ஒருவர் பிரித்தறிதல்; நிறுத்தி நிதானமாக நீண்ட நேரம் மூச்சை வெளிவிடுவதை ஒருவர் பிரித்தறிதல்.

2. குறுகிய நேரம் மட்டுமே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதை ஒருவர் தனக்குள்ளேயே பிரித்தறிதல்.

3. உடல் முழுவதுக்கும் தேவையான மூச்சை உள்ளிழுக்க நுண்ணுணர்வோடு தனக்குத் தானே பயிற்றுவிப்பது. அதேபோல நுண்ணுணர்வோடு மூச்சை வெளிவிடவும் பயிற்றுவிப்பது.
 

shutterstock_58459459

4. படபடவென மூச்சிரைப்பதைக் குணப்படுத்தும்விதமாக நிதானமாக மூச்சை உள்ளிழுக்கவும் வெளிவிடவும் தன்னைத்தானே தயார்படுத்துதல்.

5. மூச்சுப் பயிற்சியின் வழியாகப் பேரானந்தத்தை அனுபவிக்கத் தனக்குத் தானே பயிற்சி அளித்தல்.

6. மூச்சுப் பயிற்சியின்போது மகிழ்ச்சியான மனநிலையை அடையத் தனக்குத்தானே பயிற்றுவித்தல்.

7. உணர்ச்சி மேலோங்கிப் பதற்றமடைவதைத் துல்லியமாக அவதானிக்கும் விதமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுதல்.

8. இத்தகைய பதற்றத்தை அகற்றிச் சாந்தமடைய மூச்சுக்கு பயிற்சி அளித்தல்.

9. மனம் குறித்த மதிநுட்பத்தோடு மூச்சை உள்ளிழுக்கவும் வெளிவிடவும் நம்மை நாமே தயார்படுத்துதல்.

10. மனத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுதல்.

11. மனத்தை நிதானப்படுத்தும் விதமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுதல்.

12. மனத்தை விடுவிக்க மூச்சை உள்ளிழுத்து வெளிவிடத் தனக்குத் தானே பயிற்சி அளித்தல்.

13. நிலையாமையைத் துல்லியமாக உணரும் விதத்தில் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடப் பயிற்சி மேற்கொள்ளுதல்.

14. கட்டுக்கடங்காத உணர்ச்சிகளை அகற்றிச் சாந்தமான மனநிலையை அடைய மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுதல்.

15. வெறுமையை உணர மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுதல்.

16. அத்தனையையும் கைவிட மனத்தைத் தயார்படுத்துவற்கான மூச்சுப் பயிற்சியைச் செய்தல்.

இத்தகைய பயிற்சிகளின் ஊடாக ஆன்மிகத்தை வளர்த்தெடுக்க, விடுதலை அடைவதற்கான வரைபடத்தை ஆனாபானசதி சூத்திரம் நமக்கு வழங்குகிறது. மனதைக் கட்டுப்படுத்தத் தன்னைத்தானே நிர்பந்திக்காமல் படிப்படியாக, நுட்பமாக, மதிநுட்பத்துடன், சீராக மனதை மேன்மை அடையச்செய்ய இது வழிகோலுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x