Published : 14 Apr 2025 04:33 PM
Last Updated : 14 Apr 2025 04:33 PM

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கோப்புப்படம்

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன் ஆகியோர் இன்று தெரிவித்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்விழா ஏப்.28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய திருவிழாக்களான ஏப்.29-ம் தேதி (சித்திரை 16)செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்குமேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும். மே 6ம் தேதி (சித்திரை 23) செவ்வாய்க்கிழமை இரவு 7.35 மணிக்குமேல் 7.59 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் மீனாட்சிஅம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.

மே 7ம் தேதி (சித்திரை 24) புதன்கிழமை மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயம் நடைபெறும். மே 8ம் தேதி (சித்திரை 25) வியாழக்கிழமை காலை 8.35 மணிக்குமேல் 8.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். மே 9ம் தேதி (சித்திரை 26) வெள்ளிக்கிழமை காலை 5.05 மணிக்குமேல் 5.29 மணிக்குள் மேஷ லக்கனத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். பின்னர், காலை 6.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறும். மே 10 சனிக்கிழமையன்று தீர்த்தம் மற்றும் தெய்வேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர்கள் செல்லையா, சுப்புலெட்சுமி, மு.சீனிவாசன், எஸ்.மீனா மற்றும் உதவி ஆணையர் லோகநாதன் ஆகியார் செய்து வருகின்றனர். சித்திரைத் திங்கள் 15-ம் நாள் ஏப்.28-ம் தேதி திங்கள்கிழமை நிலத்தேவர் வழிபாடு (வாஸ்துசாந்தி) நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x