Published : 05 Apr 2025 03:18 PM
Last Updated : 05 Apr 2025 03:18 PM
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று (ஏப்.5) காலை பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.13-ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு திருவனந்தல் நடந்தது. காலை 6 மணிக்கு பூவனநாத சுவாமி சன்னதி முன்பு கும்ப பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டம் எடுத்து ரத விதிகளை சுற்றி கோயிலை வந்தடைந்தது. காலை 7 மணிக்கு மேல் சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து கொடி மரம், நந்தியம் பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, நகரமன்ற தலைவர் கா.கருணாநிதி, தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி. ராஜகோபால், நகரமன்ற ஆணையர் இரா.கமலா, அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ. ராஜகுரு மற்றும் அறங்காவலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை சுரேந்தர் பட்டர், அரவிந்த் பட்டர், ரகு பட்டர், ராமு பட்டர், வீரராகவன் பட்டர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில், இன்று இரவு 8 மணிக்கு சுவாமி, அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை, மாலை சுவாமி, அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.13-ம் தேதி தேரோட்டமும், 14-ம் தேதி தீர்த்தவாரியும், 15-ம் தேதி இரவு தெப்பத் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கி. வெள்ளைச்சாமி, கோவில் ஆய்வாளர் த.சிவகலை பிரியா மற்றும் மண்டகப் படிகாரர்கள், அறங்காவலர் குழுவினர், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment