Published : 01 Apr 2025 06:10 AM
Last Updated : 01 Apr 2025 06:10 AM
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இங்கு ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் நடக்கும் 10 நாள் பெருவிழா விடையாற்றி கலை விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவுக்கு சென்னை மட்டுமின்றி, புறநகர், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.
இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இந்தாண்டு பங்குனி மாதப் பெருவிழா ஏப்.3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, ஏப்.2-ம் தேதி கிராம தேவதை பூஜை நடக்கிறது. ஏப்.3-ம் தேதி காலை 8.10 மணிக்கு கொடியேற்றமும், அதனை தொடர்ந்து வெள்ளி பவளக்கால் விமான சேவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சியும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகன வீதி உலா நடைபெறும்.
ஏப்.5-ம் தேதி இறைவன் அதிகார நந்தியில் எழுந்தருளும் நிகழ்வும், ஏப்.7-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சியும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.9-ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து, ஏப்.10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலா, ஏப்.12-ல் திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது.
ஏப்.13-ம் தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் பறி உற்சவமும் நடைபெற்று, ஏப்.14-ல் திருமுழுக்குடன் விழாவானது நிறைவடைகிறது. விடையாற்றி கலை விழா ஏப்.14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடக்கிறது. பங்குனி பெருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் பகல், இரவு காலங்களில் ஐந்திருமேனிகள் திருவீதியுலா நடைபெறும்.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை கோயில் நிர்வாகமும், காவல்துறையும் செய்து வருகிறது. தேரோட்டம் அன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment