Published : 24 Mar 2025 02:26 PM
Last Updated : 24 Mar 2025 02:26 PM

ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: “ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு நடைபெறும். டிஜிட்டல் சர்வே, ட்ரோன் சர்வே, ஜிஓ சர்வே என மூன்றும் முடிவுற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ரோப்கார் அமைக்க ரூ.32 கோடி செலவாகும் என்று கருத்துரு பெறப்பட்டுள்ளது. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, கூடுதல் நிதி ஒதுக்கி இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் தொடங்கப்படும்,” என்று சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பேரவையில் இன்று (மார்ச் 24) கேள்வி நேரத்தின்போது, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, “திருப்பரங்குன்றம் கோயிலின் கும்பாபிஷேகம் உரிய காலம் தாண்டி சென்று கொண்டிருக்கிறது, ரோப்கார் வசதிக்கு உரிய நிதி ஒதுக்கப்படாததால் அதனுடைய திட்டமே செயல்படாமல் இருக்கிறது. முதல்படைவீடாம் திருப்பரங்குன்றத்துக்கு சிறப்பு நிதி ஏதும் ஒதுக்காத காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்கையில், “ரோப்காரை பொறுத்தளவில் கடந்த ஆண்டு தமிழக முதல்வர் திருப்பரங்குன்றம், திருநீர்மலைக்கு ரோப்கார் அமைக்க ரூ.26 கோடியை அறிவித்திருந்தார். தற்போது டிஜிட்டல் சர்வே, ட்ரோன் சர்வே, ஜிஓ சர்வே என மூன்றும் முடிவுற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு மட்டும் ரோப்கார் அமைக்க ரூ.32 கோடி அதற்கு செலவாகும் என்று ரைட்ஸ் என்ற நிறுவனம் கருத்துரு அளித்திருக்கிறது.

இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றவுடன் கூடுதல் நிதியை இந்த ஆண்டு விடுவிப்பதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார். நிச்சயம் இந்த ஆண்டு அதற்குண்டான தொகை வழங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக அந்த பணிகள் தொடங்கப்படும்.

அதேபோல் குடமுழுக்கைப் பொருத்தவரை, கடந்த 2012-ம் ஆண்டு நிறைவுற்ற குடமுழுக்கைத் தொடர்ந்து, தற்போது இரண்டரை கோடி ரூபாய் செலவில் 16 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 14.07.2025 அன்று நடைபெறவுள்ள குடமுழுக்கில் நானும் அமைச்சர் மூர்த்தியும் பங்கேற்க இருக்கின்றோம். சட்டப்பேரவை உறுப்பினர்களும் வந்து கலந்து கொண்டு குடமுழுக்கை சிறப்பாக நடத்திக் காட்டுவோம்” என்று அமைச்சர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x