Published : 23 Mar 2025 07:59 AM
Last Updated : 23 Mar 2025 07:59 AM
மூலவர் / உற்சவர் : பாலசுப்ரமணிய சுவாமி. அம்பாள் : வள்ளி, தெய்வயானை. தல வரலாறு: சோழ பேரரசன் முசுகுந்த சக்கரவர்த்தி கருவூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் ஒருகோமாதா புல்லை மேயும் போது அருவுருவாகிய பிம்பத்தில் பால் சொரிந்தது. அதை மாடு மேய்க்கும் சிறுவன், முசுகுந்த சக்கரவர்த்தியிடம் தெரிவித்தான். அன்றே அச்சிறுவன் முருகப் பெருமான் ரூபத்தில் முசுகுந்த சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். முருகப் பெருமானின் தரிசனத்தால் பேரானந்தம் அடைந்த அரசன் ஸ்ரீ பால முருகனுக்காக இத்தலத்தை அமைத்தார் என்பது புராண வரலாறு.
ஸ்கந்த புராண காலத்தில் தேவேந்திரன் அசுரர்களுக்கு பயந்து அக்ஞாத வாசம் செய்தபோது தன் நித்ய ஆத்மார்த்த பூஜைகளுக்கு வேண்டி இந்த ஊரில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபிதம் செய்தார். புஷ்பவனம் அமைத்தபோது, ஈசன் மழையை வரவழைத்து அருள்பாலித்தார். அதனால் இங்குள்ள ஈஸ்வரன் தேவேந்திரேஸ்வரர் என்றும், அம்மன் தேனாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர்.
கோயில் சிறப்பு: இந்திரன் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம். மலை அடிவாரத்தில் மயில் சிலை மண்டபத்துடன் அமைந்துள்ளது. இடும்பன், முருகன், சிவனுக்கு தனி சந்நிதிகள் உள்ளன. மலையின் மேற்கு பகுதியில் உள்ள குளத்தில் நீராடுவது நன்மை தரும்.
சிறப்பு அம்சம்: கருவூர் ஆனிலை பகவதீஸ்வரர் கோயிலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இத்தலம் 54 படிகளுடன் கூடிய சிறு குன்றின் மேல் கிழக்கு முகமாக அமைந்துள்ளது.
பிரார்த்தனை: செவ்வாய்க்கிழமை, கார்த்திகை, விசாக நட்சத்திர தினங்களில் 9 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
அமைவிடம்: கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் 11 கிமீ தொலைவில், பவித்ரம் கிராமத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது பாலமலை. கரூரில் இருந்தும், பரமத்தி வேலூரில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-12, மாலை 5-7 வரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT